417 மிகுபொருள் படைத்தோர்க்குத் துன்பம் மிகுமே - பொருளாசை ஒழித்தல் 13

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

பொலமிகவுள் ளார்க்குணவின் சுவையின்று பசியின்று
..புசிக்கு மன்னம்
அலமாய றாதோயாக் கவலைபிணி பிடகர்பலர்
..அருகில் வேண்டும்
பலருடலைத் தாங்கினுமோ சுமக்கரிதூர்ப் பகைபயமிப்
..பையு ளெல்லாம்
இலருறுக ணாளரெனிற் செல்வரெவர் மிடியரெவர்
..இயம்பாய் நெஞ்சே. 13

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமே! பொன் மிகப் படைத்தவர்க்கு உணவின் சுவை தோன்றாது. பசியிராது. உண்ட உணவும் செரிக்காமல் துன்பம் தரும். எப்பொழுதும் நீங்காக் கவலையும் நோயும் அடைவர். அதனால் மருத்துவர் பலர் கிட்டவே இருத்தல் வேண்டும்.

உடலைப் பலர் தாங்கினாலும் சுமப்பது சிரமம். ஊரார் பகையுண்டாம். அச்சம் மிகுதியாகும். இவ்வகைத் துன்பமெல்லாம் வறியோர்க்கு இல்லை. ஆதலால் இன்புறும் செல்வர் யார்? துன்புறும் வறியர் யார்? என்று சொல்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பொலம் - பொன். அன்னம் - உணவு, சோறு.
அலம் - துன்பம். அறல் - செரித்தல்.
பிடகர் - மருத்துவர். உறுகணாளர் - வறியர்.
மிடியர் - வறியவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-19, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே