416 தேவைக்கு மேல் செல்வமெலாம் சேர்ப்பது எதன் பொருட்டு - பொருளாசை ஒழித்தல் 12

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

தரையெல்லா நமதெனினு மிருப்பிடமோர் முழமேநற்
..தானி யங்கள்
வரையென்னக் குவிந்துகிடந் தாலுமுண்ப தரைநாழி
..வளர வாவால்
திரைகடலெ லாம்பருக உன்னுநாயெ னநமக்குத்
..தேவை யில்லாக்
கரையினிதி காணிதா னியங்கள்நீ வேட்டதென்ன
..கருத்தே சொல்லாய். 12

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! உலகின் பூமி முழுவதும் நமது என்றாலும் நாம் இருப்பது ஒரு முழ இடம்தான். நல்ல தானியங்கள் மலை போலக் குவிந்து இருந்தாலும் நாம் உண்ணத் தேவை அரைப்படி உணவுதான்.

வளர்ந்து வரும் பேராசையால் கடல் நீர் முழுவதும் குடிக்க நினைக்கும் நாய் போல, நமக்குத் தேவை யில்லாமல் அளவற்ற பொருளையும், நிலம், தானியங்களையும் நீ விரும்பியது எதன் பொருட்டு?” என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.

தரை - உலகம். குறுணி - ஒரு மரக்கால்,
நாழி – குறுணியின் எட்டில் ஒரு பங்கு,
கரையில் நிதி - அளவற்ற பொருள். காணி - நிலம். கருத்து - நெஞ்சு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-19, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே