414 நம்மை விட்டகல் பொருளை நல்லார்க்குக் கொடுத்தல் நலம் - - பொருளாசை ஒழித்தல் 10

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

எத்தனைபேர் கையின்முன் னமிப்பொருடா னிருந்ததவர்
..எல்லாந் தத்தம்
அத்தமென நம்பினார வர்களைவிட் டகன்றுன்கை
..அமர்ந்த தின்னுஞ்
சத்தமின்றி யுனைமோசஞ் செய்தனந்தம் பேர்கரத்திற்
..சாருஞ் சொன்னேன்
சித்தமே யதுசெல்லு முன்னீசற் பாத்திரத்திற்
..செலவி டாயே. 10

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமே! எத்தனை பேர் கையில் இப்பொருள் இதன் முன் இருந்தது? அவர் எல்லோரும் இதனைத் தத்தம் பொருளென்றே நம்பியிருந்தனர். அவர்களை விட்டகன்று இப்பொழுது உன் கையில் வந்து அமர்ந்திருக்கிறது.

இது இன்னும் ஓசையின்றி உன்னை மோசம் செய்து பல பேர் கையில் சேர்ந்து விடும் என்று சொல்கிறேன். இப்பொருள் உன்னை விட்டகலுமுன் நீ நல்லவர்க்குக் கொடுத்து நற்செயலைச் செய்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அமர்தல் - போக்கிடமின்றியிருத்தல்.
அனந்தம்பேர் - பலபேர்.
சித்தம் - மனத்தின் எண்ணும் நிலை.
சற்பாத்திரம் - நற்பண்புடைமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-19, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே