ஆழ்ந்து பரந்த அருந்தமிழை சூழ்ந்து தெளிக துணிந்து - தமிழ், தருமதீபிகை 184

நேரிசை வெண்பா

ஊழி யளவும் ஒருநூலே ஓர்ந்துயிர்கள்
வாழி புரியும் வகைபெருகி - ஆழியென
ஆழ்ந்து பரந்த அருந்தமிழை ஆய்ந்துநீ
சூழ்ந்து தெளிக துணிந்து. 184

- தமிழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒரு நூலே ஊழி அளவும் ஓதி உணர்தற்குரிய உயர் நலமுடையது. அத்தகைய நூல்கள் பல சுரந்து அமிர்தக் கடல் போல் ஆழ்ந்து பரந்து பெருகியுள்ள அருமைத் தமிழை நீ ஓர்ந்து உணர்ந்து உண்மையைத் தேர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், தமிழ் நூல்களின் நிலைமையைக் கூறுகின்றது.

ஊழி என்றது பல ஆண்டுகள் என்றபடி, நீண்ட கால அளவைக்கு ஒர் எல்லை தோன்ற வந்தது.

தமிழிலுள்ள விழுமிய நூல்கள் தொகை அளவில் சுருங்கியிருப்பினும், ஒவ்வொரு நூலும் அரிய பொருள் வளங்கள் நிறைந்து உணர்வுக்கடலாய் ஒளி சிறந்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நூலையே ஆராய்ந்து மனிதன் முடிவு காணாதபடி அறிவுநலம் சுரந்து பெரிதும் விரிந்து உறுதிநலம். அமைந்திருக்கின்றது.

ஆழம் மிகவுடையதாய் அளவிடலரிய உணர்வு நலங்கள் பெருகியிருக்கும் நிலைமை கருதி ஆழி என்றது. ஆழி - கடல். ஓதி உணருந்தோறும் உள்ஒளி மிகுந்து உவகை சுரந்து வரும் வகைமையில் நூல்கள் தகைமையாய் விளைந்திருக்கின்றன.

தொல்காப்பியம், திருக்குறள், சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, மணிமேகலை, பெருங்கதை, சூளாமணி, கல்லாடம், இராமாயணம், பாரதம், கந்தபுராணம், பெரியபுராணம் முதலிய இலக்கிய நூல்களும் திருவாசகம், தேவாரம், திருவாய் மொழி, திருவருட்பா முதலிய நூல்களும் இங்கே சிந்திக்கற் பாலன.

’ஆன்ம உருக்கமும் அருட்பெருந் தகவும்
மேன்மையும் பான்மையும் மேதக வமைந்து
தெய்வமணம் கமழ்ந்து தேசு மிளிர்ந்து
முந்(து)அமிழ் தென்னச் செந்தமிழ் எழுந்த
அந்தமில் இன்புயர் அரிய நூல்கள்
பல்லுாழி காலம் பாடு கிடப்பினும்
மறுபுல மொழிகள் எதுவும்
பெறுமோ இந்தப் பேருல கிடையே’.

என இவ்வாறு பெருமித நிலையில் பெருமையுறும்படி அருமை நூல்களை நாம் அடைத்திருக்கிறோம். இருந்தும், பெரும்பாலும் அவற்றை விரும்பி உணராமல் நம்மவர் விலகி நிற்கின்றார். அந்நிலை பல வகை இழிவுகளில் உணர்வைப் பாழ்படுத்தியுள்ளது. தாய்மொழித் தமிழமுதம் உண்டு அந்நோய் ஒழிய வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-19, 4:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே