நாடுமின் நூலும் சீலமிக்க மேலோர் நட்பும் - நூல், தருமதீபிகை 195

நேரிசை வெண்பா

அல்லலுறும் இவ்வுலகாம் ஆரணியத்(து) ஓரிரண்டே
நல்ல கனிகளுள் நாடுமினோ - சொல்லினொன்று
நூலாகும் மற்றொன்றோ நுண்ணறிவு சீலமிக்க
மேலோர்நட்(பு) ஆகுமிது மெய். 195

- நூல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

துன்பங்கள் நிறைந்த இவ்வுலகமாகிய நச்சு வனத்தில் இரண்டு இனிய கனிகள் உள்ளன; ஒன்று நூல்; மற்றொன்று சீலமுடைய மேலோர் நட்பு ஆகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நல்ல நூலையும், நயத்தகு சீலரையும் நயந்து கொள்க என்கின்றது. பயிற்சியும் கூட்டமும் உயர்ச்சி புரிகின்றன.

அருந்தல், பொருந்தல்கள் இனிதமையும் பொழுது சிறிது சுகமாய், அதன் பின் பெரிதும் அல்லல்களிலேயே உயிரினங்கள் மருவி உழலுதலால், ’அல்லல் உறும்' என இவ்வுலக நிலைமை சொல்ல வந்தது.

’இன்பு ஒர் அணுவாம்; இடர் அதற்கு மாமலையாம்’ என்றபடி புன்போகமான இவ் வையத்தின் வெய்ய நிலை மெய்யறிவுடையார் எவர்க்கும் நன்கு தெளிவாம்.

கொடுமையும் கொதிப்பும் மடமையும் மண்டி யுள்ளமை கருதி இவ் வுலகத்தைக் காடு என்றது,
ஆரணியம் - வனம்.

வஞ்சம், பொறாமை, சூது, கோபம் முதலிய தீமைகளே நிரம்பி எங்கும் வெப்பமாய்க் கானல் பரந்துள்ள இம்மானிலத்தில் மனிதர் இனிது தங்கித் தகையாறி இன்புறுதற்குக் கனிமரங்கள் நிறைந்த குளிர் பூஞ்சோலைகளாய் இரண்டு தனி நிலையங்கள் இருக்கின்றன என இனம் துலக்கி விளக்கியபடி யிது.

இந்த இனிய நிழல்களில் ஒதுங்க வில்லையானால் கோடை வெயிலில் சிக்கிய மானினம் போல் ஆருயிர்கள் அநாதரவாய் அலைந்து திரிந்து அலமந்து உழல்வனவாம்.

அவற்றின் நீர்மையும் சீர்மையும் நினைந்து நூலையும் நட்பையும் கனிகள் என்றது. இனிய சுவை சுரந்து என்றும் இன்பம் புரிந்து வருதலால் அவை இங்ஙனம் இசைக்க வந்தன.

பல்வேறு வகைப்பட்ட நூல்களை எல்லாம் ஒருங்கே படித்து நுண்மாண் துழைபுலம் உடையராய் உலகில் ஓங்கி யிருப்பினும் உள்ளே சீலம் இலராயின் அவர் மேலோர் ஆகாராதலால் நுண் அறிவோடு சீலமும் வேண்டும் எனச் சால்பின் கோலம் காண நேர்ந்தது.

சிறந்த கல்வியறிவும் உயர்ந்த ஒழுக்கமும் உடைய சான்றோர் கேண்மை வான்தோய் அமுது என என்றும் ஆன்ற மதிப்பும் அமைதியும் இன்பமும் அருளி வரும்.

நூல், உருவம் மறைந்த மேலோரது உயிரின் சாரம்; சால்புடையார் நேரே உருவொடு திகழும் சீலவான்கள். நூலின் சுவை போல் இவரது கேண்மையும் ஆன்ம போகமாய் மேன்மையை விளைக்குமாதலால் இரண்டும் இணைத்து எண்ண வந்தன.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு, 783 நட்பு

நூலும், மேலோர் தொடர்பும் இன்ப ஊற்றாம் என இஃது உணர்த்தி யுள்ளது.

உயர்ந்த நூலையும் சிறந்த மேலோரையும் என்றும் உறுதித் துணையாக உவந்து கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-19, 12:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே