நிறத்தைத் தந்தவர் யார் - ஓர் அறிவியல் பார்வை----------------------

இலைகள் ஏன் பச்சைநிறத்தில் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், அதிலுள்ள பச்சையத்தால் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். கீரை எப்படி பச்சையாக இருக்கிறது என்றால் அதற்கும் இதே பதிலைச் சொல்லிவிடலாம்.

நம் கண்களில் அன்றாடம் தென்படும் கமலாப்பழத்தின் காவி நிறத்திற்கோ, கத்தரிக்காயின் கத்தரி நிறத்திற்கோ காரணி யார்? நம் அருகிலேயே இருக்கும் சில நுணுக்கமானவற்றைக் கவனிக்க மறந்துவிடுகிறோம் அல்லது தவறிவிடுகிறோம். இயற்கை பல புதிர்களை எளியமுறையில் நாளும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.

கமலாப்பழம், கத்தரிக்காய் மட்டுமல்ல, திராட்சை போன்றவற்றிற்கும் இன்னும் இவை போன்ற பிறவற்றின் நிறங்களுக்கும் காரணம் அந்தோசயனின் என்ற நிறமிதான்.

நிறமி என்பது ஒரு வண்ணக்கூட்டுப்பொருள். இதில் இரண்டும் வகைகள் உள்ளன.

ஒன்று இயற்கை நிறமிகள் அல்லது உயிரிய நிறமிகள். பச்சையம், பசுங்கணிகம், நிறக்கணிகம் போன்றவை இப்பிரிவில் அடங்கும். இவை ஒளிச்சேர்க்கையுடன் தொடர்பு உடையவை.

இரண்டாவது வகை வேதி நிறமிகள் ஆகும். குரோமியம் ஆக்ஸைடு, ஃபெரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

அந்தோசயனின் முதல் வகையைச் சார்ந்தது. தண்ணீரில் கரையக்கூடியது.தான் இருக்கும் பொருளின் அமிலத்தன்மையைப் பொறுத்து சிவப்பு, நீலம், ஊதா போன்ற ஏதேனும் ஒரு நிறத்தில் காணப்படும்.

அந்தோசயனின் எப்படி உருவாகிறது?

அந்தோசயனின் உருவாவது பலகூறுகளைப் பொறுத்து இருக்கிறது; பொருள் மீது படும் ஒளியின் செறிவு, ஒளியின் அலைநீளம், சுற்றுப்புற வெப்பநிலை, நீர், மாப்பொருள் அளவுகள், நைட்ரஜன், பாஸ்பரஸ், போரான் (boron) ஆகியவற்றின் அடர்வு போன்ற பல காரணிகள் அந்தோசயனின் உற்பத்திக்கு காரணமாகின்றன.

காய்கனிகள் மட்டுமல்லாமல் , மரங்கள், செடிகள் போன்றவற்றின் இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள், என்று பல்வேறு பகுதிகளிலும் உள்ள கண்ணறை நுண்குமிழிகளில் அந்தோசயனின் காணப்படுகிறது. ரோஜா, சாமந்தி, செவ்வந்தி, சங்குப்பூ, கருப்பு,சிவப்பு மொச்சை/கடலை/உளுந்துவகைகள், கருப்பு எள், போன்றவற்றில் அந்தோசயனின் உள்ளது. செந்திராட்சையில் 100 மில்லிகிராமிற்கு 888 மில்லிகிராம் அந்தோசயனின் உள்ளது.

அவுரிநெல்லி,கருநெல்லி, குருதிநெல்லி, செம்புற்றுநெல்லி, கரும்புற்றுநெல்லி, செங்கரும்புற்றுநெல்லி போன்ற பலவித நெல்லிவகைகளிலும் கொடிமுந்திரிகளிலும் அந்தோசயனின் ஏராளமாக இருக்கிறது. சில நாடுகளில் வளரும் சிவப்பு, ஊதா நெல்லிக்கனிகளிலும் அந்தோசயனின் இருக்கிறது.

மேலும், வாழைப்பழம், நாவல்பழம், செவ்வாழைப்பழம், பேரிக்காய், கத்திரி, ஊதா நிறமுட்டைக்கோசு, தண்ணீர்விட்டான் கிழங்கு, பட்டாணி, சோம்புப்பூ, உருளைக்கிழங்கு (சிவப்பு ஊதா உருளைக்கிழங்குகள் சில நாடுகளில் இருக்கின்றன), சிவப்பு, ஊதா நிறங்களில் செயற்கையாக உருவாக்கப்படும் பச்சைப்பூக்கோசு, இலைக்கோசு, பூக்கோசு, சோளம், காவிக்கிழங்கு போன்ற பல்வித காய்கனிகளில் அந்தோசயனின் தாராளமாக இருக்கிறது. (அக்காரக்கிழங்கில் (பீட்ரூட்) உள்ள நிறமி பீட்டாசயனின் ஆகும்.)


இவைகளில் மட்டுமன்றி பல தானியங்களிலும் கூட அந்தோசயனின் நிறைந்துள்ளது. கருப்பு அரிசி, கருப்பு சோயாமொச்சையின் விதையுறை, கருந்துவர்நெல்லியின் (chokeberry) சதை, தோல் பகுதி, இவைகளில் உள்ள அந்தோசயனினின் அளவே ஆக அதிகமானதாகும் (ஒவ்வொரு 100 மில்லிகிராமுக்கும் 2000 மில்லிகிராம் அளவு அந்தோசயனின் உள்ளது- அதாவது 2000/ 100 மி.கி)

மிதவெப்ப நாடுகளில், இலையுதிர்காலங்களில் பச்சை நிற இலைகள் மஞ்சள் நிறம், பொன்னிறம், சிவப்பு நிறம், பழுப்பு நிறம் போன்று ஏதேனும் ஒரு நிறம் அடைவதை பார்த்திருப்போம். இதற்கான காரணங்களில் ஒன்று, இலைகளில் உள்ள பச்சையம் சிதைவுற்று, ஏற்கனவே அதில் உள்ள நிறமி வெளிப்படுவதால்,அவை காவி, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களை அடைவதுதான். காவிநிறமிக்கு கரோட்டினாயிடும், மஞ்சள்நிறமிக்கு ஸாந்தோஃபில்லும் சிவப்பு நிறமிக்கு அந்தோசயனினும் காரணமாகின்றன.

இலைப்பொழிவு காலங்களில் இம்மாற்றங்களை கூர்ந்து அவதானிக்கமுடியும். இலைப்பொழிவு காலங்களில் இலைகளின் நிறம் மாற்றம் அடைவதை நாம் கவனித்திருக்கிறோம். இதற்கு வெப்பநிலை, சூரியஒளி, ஈரப்பதம் போன்ற பல காரணிகள் இருக்கின்றன. வெப்பமான பகல்பொழுதுகளும் குளிர்ந்த இரவுகளும் கொண்ட முதுவேனிற்காலத்தின் பிற்பகுதியில் சில மரஞ்செடிகளின் இலைகள் சிவப்பதைக் காணலாம். இலைகள் மஞ்சள் நிறம் அடைவதற்கும் சிவந்த நிறம் அடைவதற்கும் ஓளிச்சேர்க்கை தடைபடுவது போன்ற பொதுவான காரணம் இருந்தாலும் சில மாறுபாடான காரணங்களும் இருக்கின்றன.

இக்காலங்களில் இலைகளின் அடிப்பகுதியில் ஒரு படலம் (அப்சிஷன் லேயர்) உருவாகிறது. தண்ணீரின் ஓட்டத்தை முதலில் தடுக்கிறது, பச்சையம் உற்பத்தியாவது நின்று போகிறது, இருக்கும் பச்சையம் சிதைவுற்று, அதிலுள்ள நிறமிகள், மஞ்சள் நிறமியான ஸாந்தோஃபில், காவி நிறமியான கரோட்டினாயிட்ஸ் (காவிக்கிழங்கிலும் இதே நிறமி உள்ளது) வெளிப்படுகின்றன.

இதே நேரத்தில் சர்க்கரையின் ஓட்டம் தடைபடுகிறது, இலைகளிலேயே தங்கிவிடும் சர்க்கரை அந்தோசயனின் ஆக மாறி விடுகிறது. செடிகளின் தன்மையைப் பொருத்து அந்தோசயனின் சிவப்பு, ஊதா அல்லது கபில நிறம் பெறுகிறது. வேனிற்காலம் நிறைவுறும்போது உதிர்தல் நடைபெறுகிறது. அபிசிஷன் என்பதன் நேரடியான எளிமையான விளக்கம் , உதிர்தல் என்பதே.

வேனிற்காலம் முடிவடையும்போது அந்தோசயனின் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இக்காலத்தில் ஒளிச்சேர்க்கை தடைபடும்போது, ஓட்டம் தடைபடுவதால் சர்க்கரைப்பொருள்கள் இலைகளிலேயேத் தேங்கி, அந்தோசயனினின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அச்செடியின் அல்லது மரத்தின் தன்மையைப் பொறுத்து இலைகள் சிவப்பு, ஊதா அல்லது செம்பழுப்பு நிறம் அடைகின்றன. (பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில் உள்ள மரங்களின் இலைகள் எப்போதுமே பச்சை நிறத்துடன் இருக்கும் காரணத்தை இப்போது நாமாகவே புரிந்துகொண்டிருப்போம்.) பச்சை நிறக் குடமிளகாய், பச்சை மிளகாய், கோவைக்காய், இவையெல்லாம் பழுக்கத்துவங்கும்போது இதேபோல் பச்சையம் சிதைவுற்று அதிலுள்ள நிறமிகள் வெளிப்படுகின்றன. சிவப்பு நிறத்திற்கு காரணம் மீண்டும் அந்தோசயனின் தான். செடி வளர்ச்சியாக்கிகளான எதிலீன் முதலியவை பச்சையத்தை சிதைவுற வைத்து, இலையை உதிர்க்க, ஆக்சின் என்ற வளர்ச்சியாக்கி காரணியாகிறது. இந்த ஆக்சினின் செயல்பாடு பகல் பொழுதில் கிடைக்கும் சூரிய ஒளியைப் பொறுத்தே அமைகிறது. பச்சையம் சிதைவுறும்போது பழத்தின் சதைப்பகுதி மெதுமையடைகிறது. குடமிளகாயில் இம்மாற்றம் மெதுவாக நடக்கிறது. மற்றபடி காய்கள் எல்லாம் கனியாகும்போது பன்மசர்க்கரையான ஸ்டார்ச், கரிம அமிலங்கள் வளர்சிதைமாற்றம் அடைந்து சர்க்கரையாக மாறுகின்றன. இதனால் கனி இனிப்பாகிறது. பச்சையம் சிதைவுற்று இதிலுள்ள நிறமிகள் வெளிப்படுவதால், கனி வண்ணம் பெறுகிறது. அந்தோசயனின் நிறமி வெளிப்படும் கனிகள் சிவப்பு வண்ணம் பெறுகின்றன. நன்கு பழுத்த பழங்கள் பறவைகளால் உண்ணப்படுகின்றன அல்லது உதிர்தல் மூலம் விதைகளைப் பரவச் செய்கின்றன.

அந்தோசயனின் உயிரியல், உடலியல், இயல்பியல் போன்ற பல துறைகளிலும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது . மின்கலங்களின் ஒளி உட்கவரல் திறனை அதிகமாக்க அந்தோசயனின் கரிம சூரிய மின்கலங்களில் சேர்க்கப்படுகிறது. இதன் விளைவாக வெளியேற்றப்படும் ஒளிமின்மிகளின் (ஒளிமின்னணுக்களின்) எண்ணிக்கையும் கூடுகிறது. எளிதாகக் கிடைக்கும் அந்தோசயனினின் ஒளி உட்கவறும் பயனுறுதி திறன் மிக அதிகம் (%90 -நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு).

மூப்பியல், நரம்பியல் நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, அழற்சி, குச்சியத்தொற்று (பாக்டீரியத் தொற்று) போன்ற பல்வேறு நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும், அந்தோசயனின் நிரம்ப உள்ள நெல்லிவகைகள் தரும் நன்மைகள் குறித்து ஆய்வுகள் நடந்துகொண்டே வருகின்றன.

2007 ஆம் ஆண்டில் உணவுக்குழல், பெருங்குடல், முன்பரப்பி பகுதிகளில் புற்றுநோய்க்கு மனிதர்களிடமே, கரும்புற்றுநெல்லி, குருதிநெல்லி போன்றவற்றைப் பயன்படுத்தி மருந்தக சோதனைகள் துவங்கப்பட்டன.

இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் மரபணுவாக்கம் மூலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் தக்காளியில் அந்தோசயனினைச் சேர்த்துள்ளனர். இயற்கையாக விளையும் தக்காளியில் உயிர்வளியேற்றித் தடுப்பியான லைக்கோஃபீன் உள்ளது; அந்தோசயனின் கிடையாது. அந்தோசயனின் உற்பத்தி செய்யும் மரபணு இருப்பதால், 100 கிராம் தக்காளியில் 280 மில்லிகிராம் அந்தோசயனின் இருக்கும் ஊதா நிறத் தக்காளி விளைவிக்கப்பட்டது.

அந்தோசயனின் பல இயற்கையான பயன்பாடுகளைக் கொண்டது. அந்தோசயனின் இருப்பதால் வண்ணமயமாய் உள்ள பழங்களும் பூவிதழ்களும் உயிரினங்கள், மகரந்த சேர்க்கைக் காரணிகள் போன்றவற்றின் கவனத்தைக் கவர்கின்றன. இதனால் விதைகள், மகரந்தத் தூள் போன்றவை பரவுகின்றன. இலைகள், சிலசமயங்களில் தண்டுகள் ஆகியவற்றிலுள்ள ஒளிச்சேர்க்கைத் திசுக்களில் அந்தோசயனின் ஓர் ஒளி செறிவொடுக்கியாகச் செயல்படுகிறது. (செறிவொடுங்கல்- பொருளின் வழியே சூரியக் கதிர்வீச்சு செல்லும்போது அதன் அடர்த்தியும் செறிவும் ஒடுங்குவது) இதனால் புற ஊதா ஒளி, நீல பச்சை ஒளி ஆகியவற்றை உள்வாங்கிக்கொள்வதால் , அதிக ஒளிபட்டு கண்ணறைகள் பழுதாகாமல் பாதுகாக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நாம் கடுமையான வெயிலிலிருந்து அல்லது வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க கண்களுக்கு அணியும் குளிர்கண்ணாடி போல இயற்கையாகவே கண்ணறைகளைக் காக்கிறது.

அந்தோசயனினால் சில மறைமுக நன்மைகளும் இருக்கின்றன.

இதன் கடுமையான சுவையால் தாவரஉண்ணிகள் (தாவரங்களை மட்டுமே உண்பவை) இவற்றைத் தின்னாததால் இவ்வகைச் செடிகள் எளிதாகக் காக்கப்படுகின்றன.

அந்தோசயனின் திறன் வாய்ந்த உயிர்வளியேற்றித் தடுப்பி ஆகும். உயிர்வளியேற்றத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுவது.

ஜப்பானியர்கள் உயிரியல் தொழில்நுட்பத்தை வணிகத்திற்கு ஏற்றவகையில் பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் நிறுவனத்தின் பெயர்குறுக்கம், குறியீட்டுப்படம், பழமொழிகள் என்று ஏதேனும் ஒன்றை ஆப்பிள்பழங்களில் பதிக்கிறார்கள்.

பயிரிடுபவர்கள், கவனமாக மரத்தின் ஒவ்வொரு ஆப்பிள் பழத்தையும் ஒளிபுகா பையால் உறைபோல் வைத்து, முற்றிலும் இருளில் பழத்தை வளர்க்கிறார்கள். பழங்கள் கனியக் கனிய, இவ்வுறைகளை நீக்கியும், இட்டும், சுத்தப்படுத்தியும், பழத்தின் மீது ஒளிபடுதலைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக முற்றிலும் ஒரே வித சிவப்புநிறத்தோலுடைய ஆப்பிள் பழங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றன. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தங்கள் நிறுவனத்தின் குறியீட்டுப்படத்தின் (லோகோ) மாதிரி அச்சுபடத்தைப் (ஸ்டென்சிலை) பழத்தின் வளர்ச்சிகாலங்களில் வைத்து தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கி வணிகத்திற்கு உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

புகழ்பெற்ற சீன நாட்டுப்புறக்கதை ஒன்றில் நீல நிற ரோஜா மலரைக் காட்டுபவரே இளவரசியை மணமுடிக்கலாம் என்று அறிவிப்பர். பலரும் முயன்று தோற்றுப் போக, இறுதியின் நீலரோஜாவைக்காட்டிய தோட்டக்காரருடைய மகனையே இளவரசி மணப்பாள். அந்த நீல ரோஜா, உண்மையில் நிறப்பூச்சுபெற்ற சாளரக் கண்ணாடி வழியாகக் காட்டப்பட்ட ஒரு வெள்ளை ரோஜாமலர். இன்று இதுபோல் குறுக்கு வழி தேடத்தேவையும் இல்லை. உண்மையாகவே செடியில் பூக்கும் நீல ரோஜாவைத் தருவிக்க முடியும். மணமுடிப்பவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவேண்டும்.

ஹைப்பிரிட் டீ ரோஸ் என்ற பெயர் கொண்ட மரபணுமாற்றப்பட்ட நீல இதழ்களைக் கொண்ட ரோஜா மலரை வணிகரீதியாக கொண்டுவர (இயற்கையான முறையில் வளர்த்து) ஃபிளோரிஜீன் என்ற ஆஸ்திரேலிய உயிரியதொழில் நுட்ப நிறுவனம் உரிமம் பெற்றிருக்கிறது.

ஒரு மலர் வண்ணம் பெறுவது நிறமிகளை உற்பத்தி செய்யும் திறனைப் பொறுத்தே அமைகிறது. சிவப்பு, காவி, மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற பல வண்ணங்களில் ரோஜாமலர் இருந்தாலும் நீல நிறமியான டெல்ஃபினிடின்’ ஐ உருவாக்கும் நொதி இல்லாததால் நீல நிற ரோஜா மலர வாய்ப்பு இல்லாமல் இருந்தது. சிவப்பு நிறமியை பலவித மாற்றங்களுக்கு உட்பட வைத்து நீல வண்ணம் போன்ற சாயலை வரவழைத்தாலும் முற்றிலும் உண்மையான நீல நிற நிறம் இதுகாறும் முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.

ஊதா வண்ண பான்சிப் பூவிலிருந்து ஃ·ப்ளேவினாய்ட் 3’5″ ஹைட்ராக்சிலேஸ்’ என்ற வேதிப்பொருளுக்கான மரபணுவின் (நீலநிறத்திற்கான மரபணு) உபயத்தால்தான் ஃப்ளேரிஜீன் நிறுவனத்திற்கு நீலநிற ரோஜாமலரை உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் காட்டுச்செடியாக வளர்ந்துவந்த இப்பூக்கள் நுரையீரல், தோல், நரம்புகள் போன்றவை தொடர்புள்ள நோய்களுக்கு மருந்தாக முற்காலத்திலேயே மருந்துச்செடியாக அறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் மரபணுதொழில்நுட்பக் கட்டுப்பாட்டகம் இந்நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தாலும் இதனால் உடல்நலத்திற்கோ சூழலுக்கோ இக்கு ஏற்படுத்தும் சாத்தியம் மிகக்குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது. எதற்கும் முன்னெச்சரிக்கையாக, மரபணுமாற்றப்பட்ட ரோஜாமலரின் மகரந்தத்தில் புதிதாகப்புகுத்தப்பட்ட மரபணு இல்லை என்பதையும் உறுதிமொழிந்திருக்கிறது.

அந்தோசயனின் நிறைந்த தானிய, பழ, விதை வகைகள் நம் முன்னோரால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. கருங்குறுவையரிசி, காராம்பசுவின்பால் இன்னும் சில பொருள்களைச் சேர்த்துத் தயாரித்த மருந்து, குறிப்பிட்ட வகையில், நேரத்தில், குறிப்பிட்ட பயிற்சியின்பின் உண்டால் காயசித்தி அளிக்கும் என்று சித்தர்களின் மருத்துவம் பற்றிய நூலின் வரிகள் என் நினைவுக்கு வந்தன.

கருநெல்லி, செம்புற்றுநெல்லி, என்று பல நெல்லிவகைகள் உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என்றும் தீவிர நோய்களிலிருந்து காக்க வல்லது என்றும், ஊதா, சிவப்பு, மஞ்சள் காவி நிற பழங்கள் காய்கறிகள் உண்ணவேண்டும் என்றும் கிட்டத்தட்ட எல்லா நலக்குறிப்புகளும் ஊடகங்களில் ஒருங்கிணைந்து கூறுகின்றன. இதற்கெல்லாம் இவற்றிலுள்ள அந்தோசயனினும் ஒரு காரணி.

அரசன் அதியமான் தனக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்த கருநெல்லிக்கனியை, ஔவையார் நீண்ட நாள் வாழ மனமுவந்து அளித்ததை நம் இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் படித்துவருகிறோம். சொல்லி மகிழ்கிறோம். கருநெல்லி உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பில் ஒளி உண்டாக்கும். (ஒளிவட்டம் அன்று, பளீரிடும் சருமம் என்று புரிந்துகொள்ளலாம்).

இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட கருநெல்லி பிளாக்பெரியாகும். Berry வகைகள் நெல்லி வகைகளாகவே கருதப்படுகின்றன. ஸ்ட்ராபெரி என்ற பெயர் காரணம் தெரியவந்தபோது வியப்பாக இல்லை. ஓரளவு எதிர்பார்த்ததுதான். மேலைநாட்டினர் மிக மெதுமையான பழம் என்பதால் பெட்டிகளில் வைக்கோலைப் பரப்பி அடுக்கியுள்ளனர். அப்படியே ஸ்ட்ராபெரி என்று பெயர்வைத்துவிட்டனராம். தமிழில் செம்புற்றுப்பழம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பார்க்க குட்டிப்புற்றைப்போலவே இருப்பதால் இருக்கும். ராஸ்பெரி கரும்புற்றுநெல்லியாகவும், ரெட்ராஸ்பெரி செங்கரும்புற்றுநெல்லியாகிவிட்டது.

கிரான்பெரிக்கு குருதிநெல்லி என்பதைவிட வேறு பொருத்தமான பெயர் இருக்க வாய்ப்பில்லைதான்.

தமிழகத்தில் துவர்ப்புச் சுவையுடைய நெல்லிக்கனியும் , புளிப்புசுவையுடைய நாட்டுநெல்லியும் (அரிநெல்லிக்கனி) பயன்பாட்டில் இன்றும் இருக்கின்றன.

சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்’

என்று அகநானூற்றுப் பாடலில் குறுமுயலின் கண்ணை ஒத்தது என்றெல்லாம் நெல்லிக்கனியை வருணித்திருக்கிறார்கள். காட்டுநெல்லி சத்துமிகுந்தது. இது இயற்கை உணவில் இடம்பெற்றது என்று சங்க இலக்கியத்தில் கூறப்படுகிறது. நெல்லிக்கனிகளும் சத்துகள் மிகுந்தவை. பச்சைநிற நெல்லிக்கனியில் அந்தோசயனின் இல்லை. கருநெல்லிக்கனியில் அந்தோசயனின் இருக்கிறது.

இப்போது அந்தோசயனின் நிறைந்த பிளாக்பெரிக்கு (கருநெல்லி) வருவோம். சிறியஅரிநெல்லி உருவளவில் மிகமென்மையான பழம்; கருப்பு நிறமுடையது. கொத்துகொத்தாக காய்க்கிறது; இனிப்புகலந்த புளிப்பு சுவையுடையது.

அதியமான் அளித்தது கருநெல்லிக்கனி அல்லவா. சிவப்பு, ஊதா நெல்லிக்கனிகள் சில நாடுகளில் இன்றும் விளைகின்றன. இவை மூன்றிலும் அந்தோசயனின் இருக்கிறது. கருப்புநெல்லிக்கனிகள் தமிழகத்தில் இற்றுப்போய்விட்டனவா.

நீண்டகாலம் வாழவைக்கும் மருந்துகளைத் தயாரிக்க ஆய்வுகள் உலகில் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. சித்தர் மருந்துக்கலவை போன்றோ சிறிது மாறுதல்களுடன் கூடிய மருந்துக்கான கலவைசூத்திரத்தை யாராவது கண்டுபிடிக்கலாம். அதற்குமுன் கருங்குறுவையரிசி, காரரிசி, எள் போன்றபலவற்றுக்கும் மருந்து நிறுவனங்கள்
காப்புரிமை பெற்றுக்கொள்ள முந்தலாம்.

2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க வேதியியல் கழகத்தின் 240 ஆவது தேசியக் கூடுகையில் கருப்பு அரிசியில்தான் ஆகக்கூடுதலான அளவு உடல்நலத்திற்கு உகந்த உயிர்வளியேற்றித் தடுப்பிகள் (antioxidants) உள்ளன என்ற அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

கருப்பு அரிசி, பழங்காலச் சீனாவில் அரசபரம்பரையினர் மட்டுமே உண்ண அனுமதி இருந்ததாகவும் மற்ற அனைவருக்கும் அது தடைசெய்யப்பட்ட அரிசியாக (forbidden rice) ஆக இருந்ததாம்.

சற்று விலை கூடுதலாக உள்ள அவுரிநெல்லி , கருநெல்லி (பிளாக்பெரி) போன்றவற்றைவிட விலை குறைந்தது கருப்பு அரிசி என்றும், ஒரு தேக்கரண்டி கருப்பு அரிசியில் உள்ள உயிர்வளியேற்றித் தடுப்பிகள், ஒரு தேக்கரண்டியில் கொள்ளும் அவுரிநெல்லிகளில் உள்ளதை விட அதிகம் என்றும், மேலும் கருப்பு அரிசியில் சர்க்கரை சத்து குறைவு, நார்ச்சத்தும், உயிர்ச்சத்து E யும் அதிகம் என்றும் கருப்பு அரிசி, அதன் தவிடு இவற்றை ஏன் பரவலாகப் பயன்படுத்தக்கூடாது என்று லூசியானா மாநிலப் பல்கலைகழகத்தின் விவசாய மைய இணைப்பேராசிரியர் ஸிமின் சூ கருதுகிறார்.

கொள், பயறு, வரகு, சாமை, தினை போன்றவை உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றவை என்றும் இவற்றை உட்கொள்வதால் பல நோய்நொடிகள் விலகி ஓடும் என்றும் தற்போதைய உடல்நலக்கேடுகளை விரட்ட இவை மருந்துகளுக்கு ஈடானவை என்ற அறிக்கை உலகில் எங்காவது சமர்ப்பிக்கப்படலாம். நாம் அதன் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்பதை அகநானூறு, ஐங்குறுநூறு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுடன் நிறுவலாம். வரகரிசி சோறும், வழுதுணங்காய் வாட்டும் என்ற ஔவையின் தனிப்பாடல் தேனாக இப்போதே செவியில் ஒலிக்கிறதல்லவா?
------------------------

மாதங்கி

மே 9, 2011


பகிர்க

எழுதியவர் : (24-Apr-19, 3:32 pm)
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே