கோடை நடை--------------கடிதங்கள்

கோடையை வெறுக்கும் உளநிலைக்கு முன்னரே வந்துவிடுகிறோம். அதற்குக் காரணம் தமிழ்மொழியிலுள்ள கோடைகுறித்த் மொழிபுகள்தான் எனத் தோன்றுகிறது. சங்ககாலம் முதல் கோடை இங்கே கொடிதாகவே காட்டப்பட்டுள்ளது. பிரிவின் கோடை. உடன்போக்கின் கோடை. உணர்வுகள் வரண்ட கோடை. உளம்வரண்ட ஆறலைக் கள்வர். நீர்தேடித்தவிக்கும் யானைகள். வேட்டைச்செந்நாய் கிளைத்தூண் மிச்சிலை பருகிச் செல்லும் தொலைபயணிகள்.



சங்கதத்திலும் கோடை மொழிபுகள் கொடியவையே. காளிதாசனின் ரிதுசம்ஹாரத்தில் விடாய்கொண்ட பாம்புபடமெடுக்க அதன் நிழலில் தவளை இளைப்பாறுகிறது. தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்கிறது கலித்தொகையின் பாலைப்பாடல். அந்த உளப்பதிவினால் “என்னா வெயில் அடிக்குவு!” என சலித்துக்கொள்ளக் கற்றிருக்கிறோம். வெயில் கடினமானதே. அதிலும் நிழலுயிரியான எனக்கு. ஆயினும் கோடையிலும் இனியவை நிறைய உண்டு.





முதன்மையானது மாங்காய். பிஞ்சுப் பச்சைமாங்காய் நான் விரும்பும் சுவைகளில் ஒன்று. கோடைகாலம் முழுக்க பெரும்பாலும் நாளும் பச்சைமாங்காயை உப்புவைத்து சாப்பிடுவேன். நெல்லிக்காய், மோர், வெள்ளரிக்காய் என கோடைக்குரிய அத்தனை உணவுகளையும் உண்டு கொண்டாடுவேன். நெல்லிக்காய் சாற்றை மோரில்கலந்து சாப்பிடலாம். குமரிமாவட்டத்தில் பணகுடி ராதாபுரம் பகுதியிலிருந்து வரும் நுங்கு கிடைக்கும். இங்கே எங்களூரில் மாங்காய் கூடுதல் சுவை உடையது, வேறொன்றுமில்லை, நான் இங்கே இருப்பதனால்.



என் காலைநடை வழி மழைக்காலத்திலேயே அழகுடனிருக்கும். மலையடிவாரம். கேரளத்துமழைமுகில்கள் மலையடுக்குகளில் முட்டித்தேங்கி இங்கேயே மழையாக மாறிவிடும். ஆரல்வாய்மொழிக்கு அப்பக்கம் மையத்தமிழ்நாட்டுக்கு ஈரக்காற்றுதான். ஆகவே முகில்களின் சிற்ப வடிவங்களைப் பார்ப்பதற்கு உகந்த பகுதி இது. கருமுகில் மாளிகைகள். கார்மலைகள். தேர்கள். வான்காட்டுத் தழைப்புக்கள். நோக்கி நோக்கிச் சலிக்காதது குமரியின் மழைக்கால வானம்.கீழே வயல்வெளிகள். அவற்றில் எல்லாம் இப்போது வீடுகள் முளைக்கத் தொடங்கிவிட்டிருக்கின்றன.





மழையோவியங்களை நிறையவே எழுதியிருக்கிறேன். ஆனால் கோடையும் அழகே. அதற்குரிய உளநிலையை ஈட்டிக்கொண்டால். காலைநடை செல்வதாக இருந்தால் ஆறுமணிக்கே கிளம்பிவிடவேண்டும். விடியலிருளில் சென்று கதிரெழுவதைப் பார்க்கமுடியும் என்றால் மேலும் சிறப்பு. அதற்கு இரவில் முன்னதாகவே துயிலவேண்டும். அது எனக்கு நிகழ்வதில்லை. எட்டுமணிக்கு வெயில் எரியத் தொடங்கிவிடும். வியர்வை பெருகி ஆடைநனைக்கும். ஆயினும் காலை நடையை விரும்புகிறேன். நன்றாக உடல்கொதித்து வியர்த்தால் மீண்டுவந்து குளிர்நீரில் ஆடுவது வேறொருவகை இன்பம். அதற்காகவே வெயில் கொஞ்சம் வேண்டும்.



என் காலைநடையில் எவரையும் உடனழைத்துச்செல்ல விரும்புவதில்லை. ஒருங்கிணைவுடன் எதையும் எண்ணிக்கொண்டுசெல்லக் கூடாது என எண்ணினாலும் அவ்வப்போது அது நிகழ்ந்துவிடுகிறது. மந்தையெனக் கலையும் கட்டற்ற எண்ணங்களில் இருந்தே படைப்பூக்கம் கொண்ட ஒன்று எழுந்து வர இயலும். ஆகவே எவரிடமும் பேசுவதில்லை. தலையசைப்பு புன்னகை மட்டும்தான். நல்லவேளையாக இனிப்புநோயாளிகள் திரும்பி வரும் வேளை அது. முகங்கள் சுளித்து உலகம்மீது கடும்கசப்பு வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்



காலைநடை செல்வதற்கு முன் மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை. செய்திகள் படிப்பதுமில்லை. காலையில் வந்துவிடும் ஒரு செய்தி நமது அந்நாளைத் தொடங்க ஒருபோதும் ஒப்பலாகாது. நம்மை வடிவமைக்கும் பொறுப்பை இயற்கை எடுத்துக்கொள்ளட்டும். நான் பொதுவாக இப்போதெல்லாம் செய்திகளை வாசிப்பதில்லை. வாசித்தாலும்கூட மொத்தமாக ஐந்துநிமிடம். அதுவும் நடைமுடிந்து வந்து அமர்ந்து ஒரு தேநீர் அருந்தி முடிப்பதற்குள்.



காலை நடை செல்லும் பாதையில் இப்போது வீடுகள் அங்கிங்காக வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இன்னமும்கூட மலைகளை அவை மறைக்கத் தொடங்கவில்லை. நாற்றுநடவு, அறுவடைக் காலங்களில் அந்தச்சாலையில் வண்டிஓட்டம் இருக்கும். கோடையில் ஆடுகள் மட்டும்தான். வெயில் பொழிந்துகிடந்த மண் கண்களைக் கூசச்செய்தது. துகில் விரித்தன்ன வெயில் என்கிறது சங்கப்பாடல். வெண்வெயில் ஒரு பட்டு ஆடைபோலவே தோன்றும். கையால் எடுத்துவிடமுடியும் என்பதுபோல. மணிவெயில் என நாங்கள் சொல்வோம். கையை தூக்கிப் பார்த்தால் தோல் சற்று மின்னுவதுபோலத் தெரியும். இலைகள் எண்ணைமெருகு கொண்டிருக்கும். நிழல்களில் சற்றே செவ்வண்ணம் எஞ்சியிருக்கும்



இங்குள்ள கோடை வேறுவகையானது. மையத் தமிழ்நிலத்தவருக்கு தனியாக எடுத்துச் சொல்லவேண்டும். அங்கிருந்து வருபவர்கள் இங்கே வெயிலே இல்லை, கோடையே எழவில்லை என எண்ணக்கூடும். மார்ச்சிலும் ஏப்ரலிலும் எங்களுக்கு இரண்டு கடும் மழை உண்டு. ஆகவே பசுமை காய்வதில்லை. ஏப்ரலில் பொங்கி எழுந்த நாணல்கள் மட்டும் கரிந்து நிற்கும். சாலையோரங்களில் பீடித்துண்டுகள் எறியப்படுவதனால் பற்றிக்கொள்வதும் உண்டு. ஆனால் தென்னைகள் பொலிந்துகொண்டிருக்கும். வயல்வெளிகளில் பச்சைப்புல் செழித்து நின்றிருக்கும்.வாழையிலைகளில் மெருகு குறைந்திருக்காது. ஆனால் காற்றில் நீராவி நிறைந்திருக்கும். உலர்ந்த கோடையை அறிந்து பழகியவர்களுக்கு இந்த நீராவி சற்று மூச்சுத்திணறச்செய்யும். வெயில் பெரிதாக இல்லையென்றாலும்கூட நீராவியால் வெப்பம் நிறைந்திருக்கும்



நான் காய்த்துக்குலுங்கித் தழைந்து நின்றிருக்கும் அன்னைமாமரம் ஒன்றின் அடிவரை காலைநடை செல்கிறேன். நான்கே காய்களை தெரிந்து பறித்து பையிலிட்டுக்கொண்டு திரும்பி வருகிறேன். ஊண்மேடையில் அதை வைத்து உப்புநீர் கலக்கிக்கொண்டு தின்னத் தொடங்குகிறேன். கோடையின் சுவை. நடைசென்று நின்று நோக்குகையில் பச்சைமலையடுக்குகளில் புல் காய்ந்து அவை சிம்மப்பிடரி கொள்ளத் தொடங்குவதை நினைத்துக்கொள்கிறேன். அவை பின்கோடையில் பற்றிக்கொண்டு எரியும். செம்மணி ஆரம் சூடி மலைப்பாறைகள் வானில் நின்றிருக்கும். இரவில் இருளில் செங்கனல் பறந்து விழாது நின்றிருக்கும் இறகு போல் தெரியும்.



அப்பால் ரயில் தண்டவாளத்தில் ஒரு கீரி ஓடுவதைக் கண்டேன். நெடுந்தொலைவு அது தண்டவாளம் வழியாகவே சென்றது. சல்லிக் கற்கள் வழியாகச் சென்றால் கால் தள்ளாடி விசை வீணாவதை உணர்ந்திருக்கிறது. கீரிகளுக்குக் கோடை இனியது. அவற்றுக்கு உணவு பெருகும் காலம். அவை எடைமிகுந்து மழைக்காலத்திற்கென பருத்துக் கொழுக்கும் பருவம்.
===================================================================================================

அன்புள்ள ஜெ

கோடை நடை படித்த பிறகு எங்கள் சூழல் கூட இனிமையாய் தெரிய ஆரம்பிக்கிறது. . .நன்றி.

எங்கும் ஒரே புலம்பல் தான் இப்போது – வெயில் தாங்க முடியல, வேத்து ஊத்துது, இப்பவே இப்படி, ண்ணிக்கு என்ன பண்ணப்போறோம். . .

எங்களுக்கும் கோடை பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது! செடி கொடிகளெல்லாம்வாடி நிற்க தயாராகி இலைகளை உதிர்க்க ஆரம்பித்தன. காலையில் துயிலெழுப்பும் பறவைக்கூட்டத்தின் கோஷ்டிகானம் சற்று சுருதி இழக்க ஆரம்பித்தது. சில பறவைகள் வேறு கோஷ்டிக்கு ( வேறு ஊருக்கு) சென்றுவிட்டன போலும். சாரைசாரையாய் பல வண்ண எறும்புகள் குடிபெயர்ந்து எங்கோ செல்லத்தொடங்கிவிட்டன. பேருந்துகளில் எஞ்சின் சத்தத்தை விட உஸ் உஸ் என்ற பயணிகளின் மூச்சொலி பெரிதாக ஒலிக்க ஆரம்பித்தது. மூலைக்கு மூலை கறும்பு சாறு ( எங்கள் பக்கம் கறும்புப் பால்) நடைவண்டிக் கடைகள்.(ஐஸ் போடணுமா, வேண்டாமா?). தெருக்களில் முட்டிக் கொள்ளாமல் நடமாட முடிகிறது.

குழாய்களின் முன்னால் தீர்த்தத்திற்காக தவமிருக்கும் குடங்களின் வரிசை அனுமார் வாலாய் நீள ஆரம்பித்து விட்டது. மாட்டுவண்டியிலும், டிராக்டரிலும், லாரிகளிலும் தண்ணீரின் பயணம் தொடங்கிவிட்டிருக்கிறது. துணி தோய்த்த, பாத்திரம் தேய்த்த, தண்ணீர் சேமிக்கப்பட்டு செடிகளிடமோ கழிப்பறையிலோ தஞ்சமடைகிறது. ஆடுமாடுகள் அடிக்கடி நா வரண்டு தண்ணீர் கேட்டு கூப்பாடு போட
ஆரம்பித்துள்ளன. போர் போடனுமா சார் என்று பலர் பைக்கில் சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார்கள். கிணற்றில் சேறு அள்ளும் கிரேன் வண்டிகள், பாறையைப் பிளக்கும் வெடி மருந்துகளோடு இங்கும் அங்குமாய் ஓடுகின்றன.

பழைய சோறு அமிர்தமாய் இனிக்கிறது. அதோடு புதிதாய் பறித்து போடப்பட்ட மாவடு
ஊறுகாய், விருந்தாய் மணக்கிறது. நடுப்பகலில் குட்டித் தூக்கம் கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. மறந்து போயிருந்த மரத்து நிழல் சொர்க்கமாய் அழைக்கிறது. தெள்ளத்தெளிவான இரவு வானம் அத்தனை வைரங்களையும் காட்சிக்கு வைக்கிறது. இப்படிக் கூட இருக்குமா என்னும் பேரமைதி, சிலரை நடுக்கம் கொள்ள வைத்தாலும், பேரின்பப் பெருநிலையை தொட்டுக்காட்டுகிறது. குடிக்க வைத்திருக்கும் தண்ணீரில் முக்குளித்து சூடு தணித்துக்கொள்ளும் பறவைகள் சிலிர்த்துக்கொள்கின்றன, சிலிர்க்க வைக்கின்றன. பல பொழுது உணரப்படாமல் புறக்கணிக்கப்படும் காற்று, கோடையில் சொற்பமாய் வீசினாலும் அபரிமிதமாய் ஆனந்தம் அளிக்கிறது.

கோடையிலும் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. . .கண்டுகொள்வோம், மகிழ்வோம்!

அன்புடன்

ராமசுப்ரமணியன்

தேக்கம்பட்டு.





அன்புள்ள ஜெ



கோடைநடை ஓர் அருமையான கட்டுரை. வாசகர்கள் தொடர்ச்சியாக உங்களுடன் மானசீகமாக உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் காலைநடைப் பாதை, வீடு எல்லாமே நன்கு அறிமுமகானவை. இத்தகைய இடங்கள் இங்கே கொஞ்சம் குறைவுதான். மழை வெயில் என பார்வதிபுரம் சாலை மிக நெருக்கமானது. அதைப்பற்றிப் படிக்கையில் உங்களுடன் இருந்த உணர்வை அடைகிறேன். அந்தச்சாலையில் நடந்ததுபோலவே தோன்றுகிறது



எல்லா பருவகாலங்களும் அதற்கான அழகைக்கொண்டவைதான். எல்லா பருவகாலங்களிலும் அதற்கான துன்பங்களும் உண்டு. மனநிலையை இயற்கையை விரும்பும்படி அமைத்துக்கொள்வதுதான் முக்கியமானது என நினைக்கிறேன் பழைய பிளாக் ஆண்ட் ஒயிட் படங்களைப் பார்க்கையில் எல்லாமே சாம்பல்தான். ஆனால் எப்படி அதையெல்லாம் பச்சைப்பசுமை என்றும் பூக்களின் நிறங்கள் என்றும் நினைத்துக்கொண்டோம் என்ற ஆச்சரியம் வரும். அந்த மனநிலைதான் காரணம். அதை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்



செல்வராஜ் அமிர்தம்
----------------------

எழுதியவர் : (24-Apr-19, 5:00 pm)
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே