மொழியாலான உலகு

இருபதாண்டுக் காலமாக உலகத்தின் பல நாடுகளிலும் உற்சாகமாகத் ‘தாய்மொழி நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும், ஒரு நாட்டில் அதிகாரம் இல்லாத மொழி பேசுகிறவர்கள்கூட குதூகலத்தோடு தாய்மொழி நாளைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்களோடு, எழுத்து இல்லாத மொழியைப் பேசுகிறவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். தாய்மொழி நாள் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம், ஒவ்வொரு குடிமகனும்/மகளும் தங்களின் தாய்மொழியில் பேசவேண்டும்; எழுதவும், படிக்கவும் அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அதோடு, தன் தாய்மொழி பேசிய கடைசி ஆளாக தான் இருந்துவிடக் கூடாது என்பதையும் சொல்வதுதான்.

மனிதர்கள், 50,000 ஆண்டுகளுக்கு மேலாகத் தாய்மொழியைத் திருத்தமாகப் பேசி வருகிறார்கள். உலகத்தில் 7000 ‘தாய்மொழிகள்’ இருக்கின்றன. மொழி என்பதே ஒலிதான். அதாவது, மனிதர்கள் வாய்வழியாக எழுப்பும் ஒலிதான் மொழியென வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மொழி என்றால், ஒலியில் அர்த்தம் பெறுவது. அதாவது, பொருளற்றது வெறும் ஒலி. பொருள்கொண்ட ஒலி, மொழி. எனவேதான் தொல்காப்பியர், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.



மனிதர்களால் - அவர்களின் ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பேசும் மொழி. அது இன்னொரு பொருளிலிருந்து உருவாக்கப்பட்டது இல்லை. தான் வாய்வழியாக எழுப்பும் 42 வகையான ஒலிகளிலிருந்துதான் லட்சக்கணக்கான சொற்களை உண்டாக்கிக்கொண்டிருக்கிறான் மனிதன். எல்லா மொழியின் ஒலியும் ஒன்று கிடையாது. அதாவது, ஒவ்வொரு மொழியும் தனித்தனியான ஒலிகளைக் கொண்டிருக்கின்றன. அர்த்தம் கொடுக்கும் - பொருள்தரும் ஒலியை ‘பொனடிக்’ (Phonetic) என்று சொல்கிறார்கள். எனவேதான், பேசும் மொழியும், அதனை எழுதும் எழுத்தும் அறிவியல்பூர்வமாக இருக்கின்றன.

எந்தவொரு நாடும், ஒரு மொழி மட்டும் பேசப்படும் நாடாக இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் பன்மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டில் மக்கள் வாழ்வதற்கு உரிமை இருப்பதுபோல, தங்களின் தாய்மொழியை அங்கு பேசவும் அவர்கள் உரிமை பெற்றவர்கள்.

ஒரு நாட்டில், பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழிதான் அங்கே ஆட்சிமொழி, அலுவல் மொழி. அதாவது, அரசின் நிர்வாகம் எல்லாம் அம்மொழியில் நடைபெறும். அதை எல்லோரும் கற்றுக்
கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கூடவே, தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை மூடிவிடுகிறார்கள். தாய்மொழியைப் பள்ளிக்கூடங்களிலும் பொது இடங்களிலும் பேசினால் தண்டனையளிக்கிறார்கள். இது வரலாற்றில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.



500 ஆண்டுகளுக்கு முன்னால், வட அமெரிக்காவில் புகுந்த ஐரோப்பியர்கள், ஆதிப் பழங்குடி மக்கள் அவர்களின் தாய்மொழியைப் பேசக் கூடாது எனத் தடைபோட்டார்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நுழைந்த ஸ்பானிஷ்காரர்கள், தங்களின் தாய்மொழியை நாட்டின் பொதுமொழி ஆக்கினார்கள். பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் ஏற்படுத்திக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால், இலத்தீன் அமெரிக்கப் பூர்வீக மக்களின் தாய்மொழி, சுவடே இல்லாமல் அழிந்துபோய் விட்டது.

இந்தியா பன்மொழிகள் பேசப்படும் நாடு. உலகத்தின் மூத்த மொழிகளான தமிழும், சம்ஸ்கிருதமும் இந்திய மொழிகள்தாம். அதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. 200 ஆண்டுக்காலமாக ஆங்கிலம் அலுவல் மொழியாக இருந்தது. அது அறிவியல், சரித்திரம், தொழில், வாணிபம், மொழி என்று ஐரோப்பாவில் ஏற்பட்ட மாறுதல்களையும், ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு காரணியாக இருந்தது. அதன்மூலம் கற்றதிலிருந்து சுதந்திர நாட்டில், ஓர் இந்திய மொழிதான் அலுவல் மொழியாக, ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று பிரகடனப் படுத்தினர். ‘அது எந்த இந்திய மொழி?’ என்று கேள்வி எழுந்தபோது, பெரும்பான்மையான மக்கள் பேசுவது இந்தி மொழிதான் என்று பதிலுரைக்கப்பட்டது. மகாத்மா காந்தி, இந்தியாவின் பொதுமொழியாக ‘இந்துஸ்தானி’ இருக்க வேண்டும் என்று இடைவிடாது பிரசாரம் செய்துவந்தார். பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில், தமிழர்கள் இந்தி மொழி படிக்கப் பாடம் நடத்திவந்தார். மொழி என்பது தன் மேதைமையை எடுத்துச் சொல்லவும், ஏற்கெனவே சொல்லப்பட்டவற்றை அறிந்துகொள்ளவும், மற்றவர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்ளவும் பயன்படக்கூடியது என்பதைப் புறந்தள்ளினார். மொழியை சுதேச அபிமானத்தோடு சேர்த்துக்கொண்டார்கள். ஆங்கிலம் அந்நிய மொழி; அது இந்திய மொழிகளைக் கொல்கிறது என்று பிரசாரமும் செய்தார்கள்.



இந்திய அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர், “ஒரு மொழி மக்களை ஒன்று சேர்க்கும். இரண்டு மொழிகள் மக்களைப் பிரிக்கும்” என்றார். அது இந்தியா ஒற்றை மொழி நாடு என்ற கோஷத்திற்கு ஆதரவாகப் போய்விட்டது. அவர் சம்ஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்றார். கேட்க ஆளில்லை. டாக்டர் அம்பேத்கர், மொழிவழி மாநிலங்கள் அமைவதை எதிர்த்தார். அவரது தாய்மொழி மராட்டி. ஆனால், அவர் அறிவு என்பது ஆங்கில மொழி வழியாகத்தான் வெளிப்பட்டது.

இந்திய அரசியல் சாசன சட்டம் எழுதப்பட்டபோது, மொழி பற்றிய விவாதம் பல நாள்கள் நடைபெற்றது. ஆனால், கடைசியில் இந்தி மொழியினர் கைதான் ஓங்கியது. அது பெரும்பான்மை என்ற சர்வாதிகாரம்; பெரிய தலைவர்களின் கருத்து; சுதேச உணர்வு என்பதன் அடிப்படையில் ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவின் ஒரே ஆட்சிமொழி, அலுவல் மொழி இந்தி. அது ‘தேவநாகரி’ எழுத்துகளில் எழுதப்பட வேண்டும். இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட எழுத்து முறைகள் இருந்தாலும், தேவநாகரி எழுத்து உருவகத்தில்தான் எழுதப்பட வேண்டும்என்று சட்டம் போட்டுக்கொண்டார்கள்.

இந்தியாவில் 1962 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1, 652 தாய்மொழிகளும், அவற்றின் கிளை மொழிகளும் பேசப்படுகின்றன என்பது தெரிந்தது. அதோடு 65 சதவிகித இந்திய மக்களின் தாய்மொழி இந்தி இல்லை. அதாவது அவர்களுக்கு இந்தி மொழி பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது. எனவே, பெரும்பான்மையான மக்கள் எப்படி அரசின் அலுவல்களில் பங்குபெறுவது என்று கேட்கப்பட்டது.

1965-ஆம் ஆண்டு வரையில் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் அரசோடு தொடர்புகொள்ளலாம். பின்னர், இந்திய சுதேச மொழியான இந்தி மொழியில் மட்டுமே அரசின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் இருக்கும். எனவே, இந்தியப் பெருங்குடி மக்களே, அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிடாதீர்கள். அது உங்கள் நாட்டின் தாய்மொழி. ஒவ்வொரு குடிமகனும் - மகளும் அம்மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நயம்பட உரைக்கப்பட்டது.

மொழி என்பது அதிகாரம் பெற்றது. துப்பாக்கியிலிருந்து அதிகாரம் வருகிறது; வாக்குச்சீட்டிலிருந்து அதிகாரம் கிடைக்கிறது என்று சொல்வதுபோல மொழியிலிருந்தும் அதிகாரம் வருகிறது.

1947-ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அது மத ரீதியானது, இஸ்லாமிய நாடு. சட்டப்பூர்வமாக அறிவித்துக்கொண்டது. பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரண்டு தனித் தனி பிரதேசங்கள்கொண்டது. இரண்டுக்கும் தரை வழியாகப் பாதை கிடையாது. இரண்டு பகுதிகளிலும் ஒரே மொழி பேசப்படவும் இல்லை. மேற்கு பாகிஸ்தானில் பஞ்சாபி, சிந்தி, உருது மொழிகள் பேசப்பட்டன. அதில் பஞ்சாபி பேசுவோர் அதிகம். கிழக்கு பாகிஸ்தான், இந்தியப் பகுதியான மேற்கு வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அதில் வங்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 98 சதவிகிதம். மொத்த பாகிஸ்தான் மக்கள் தொகையிலேயே வங்க மொழி பேசுவோர்தான் அதிகம்.

பாகிஸ்தான் உருவானதும், வங்க மொழி புதிய தேசத்தின் ஆட்சி- மொழி, அலுவல் மொழியாக்கப்படும் என்று பெரும்பான்மை யான மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அரசியல் சாசன சட்டம் உருது மொழியைப் பாகிஸ்தான் ஆட்சிமொழியாக அறிவித்தது. அது ‘அரபு’ எழுத்து வடிவில் எழுதப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

1952 -ஆம் ஆண்டில், பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா, கிழக்கு பாகிஸ்தான் சென்றார். அவரிடம், பாகிஸ்தான் ஆட்சிமொழி பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. “உருது, உருது மட்டுமே பாகிஸ்தானின் ஆட்சி மொழி” என்று பதிலுரைத்தார். அவர், இந்தியாவில் பிறந்தவர், தாய்மொழி குஜராத்தி, ஆங்கிலம் படித்தவர். உருது மொழி எழுதவோ, படிக்கவோ தெரிந்து கொள்ளாதவர்.

கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னாவின் மொழி பற்றிய அறிவிப்பு, வங்க மொழி பேசுவோரிடம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தாய்மொழிக்காகப் பேரணிகளை போராட்டங்களை நடத்தினார்கள். அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, பலரைப் பிடித்து சிறையில் அடைத்தது.

1952, பிப்ரவரி-21 தேதியன்று, கிழக்கு பாகிஸ்தானிலுள்ள டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னே, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினார்கள். அவர்களோடு எழுத்தாளர்கள், தாய்மொழிப் பற்றாளர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் கலந்துகொண்டார்கள். போலீஸ் தடியடி நடத்தியது; துப்பாக்கியால் சுட்டது. ஆனால், தாய்மொழிக்கான போராட்டம் தொடர்ந்து நடந்துவந்தது. அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கப் பிப்ரவரி 21-ஆம் தேதியைத் தாய்மொழி நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

தாய்மொழிக்கான போராட்டம் அரசியல், கலாசாரப் போராட்டமாக மாறியது. மொழிக்காகத் தனிநாடு கேட்க ஆரம்பித்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள். 20 ஆண்டுகள் இடைவிடாது போராட்டங்கள் நடைபெற்றன. கிழக்கு பாகிஸ்தானின் மொழிப்போராட்டத்திற்கு இந்தியா பெரும் ஆதரவு கொடுத்தது, அதில் அரசியல் இருக்கிறது. பாகிஸ்தானை உடைத்து மற்றொரு நாட்டை உருவாக்குவது, அதன் வலிமையைக் குறைக்கும் காரியம் என்றாலும், அதன் மூலவித்து மொழியில்தான் இருக்கிறது.



புதிய நாடு, அடிப்படையில் மொழியின் பேரால் ‘வங்கதேசம்’ என்று பெயர்பெற்றது. பாகிஸ்தான் என்ற பெயர் நீக்கப்பட்டது. வங்க மொழி, நாட்டின் ஆட்சி மொழியாகவும், தேசிய மொழியாகவும் ஆனது. கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழிக்கான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோது, அதில் கலந்துகொண்ட சிலர் அரசின் அடக்குமுறைக்கும் தண்டனைக்கும் உள்ளானார்கள். அதன் காரணமாகப் பலர் புலம்பெயர்ந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள். அவர்களில் சிலரின் மனத்தில், வங்கதேசத்தில் தாய்மொழிக்காக நடைபெற்ற போராட்டங்கள், அரசின் அடக்குமுறைகள் குறித்த நினைவு இருந்துகொண்டேயிருந்தது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனது தாய்மொழியைப் பேசுவதற்கான உரிமை வேண்டும். குறைந்தபட்சமாகத் தாய்மொழியில் அரசோடு தகவல் பரிமாறிக் கொள்ளவேண்டும். அதற்காகத் தாய்மொழி மீது பற்றும் பெருமையும் கொள்ளவேண்டும். தாய்மொழியை எவ்வளவு பேர் பேசுகிறார்கள். தாய்மொழி பேசுவதால் பயன் என்ன என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. தாய்மொழியின் ஆழமும் அகலமும் அதன் அறிவு சார்ந்த பரப்பும் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், தாய்மொழி ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும்பங்காற்றி வருகிறது. அது அறியப்படவில்லை என்பதால் இல்லாமல் போய்விடவில்லை. இதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

தாய்மொழியைப் பேசாமல் விட்டுவிட்டால், அது இல்லாமல் போய்விடும். எனவே, மக்கள் தங்கள் தாய்மொழியைத் தொடர்ந்து பேசிவர வேண்டும். அது எழுதப்பட்ட பனுவல்கள் கொண்ட மொழியாக இருந்தால் அவசியம் படிக்க வேண்டும்.

பல்வேறு சமூக, கலாசார, அரசியல் காரணங்களால் மகத்தான மனிதர்கள் பேசி வந்த பல தாய்மொழிகள் மறைந்து போய்விட்டன. பகவான் புத்தரின் புனித உரைகள்கொண்ட ‘மகதி’ பேசப்படாமல் மறைந்துவிட்டது. சாக்ரடீஸின் தத்துவ போதனைகள்கொண்ட கிரேக்க மொழி பேசப்படவில்லை. ஏசுநாதர் மலைப்பிரசங்கம் செய்த ‘அராமிக்’ மொழியின் ஒலிநயம் கேட்க முடியாமல் போய்விட்டது. ஏசுநாதர் பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் மெசபடோமியாவில் பேசப்பட்ட மொழியும் ‘கில்காமேஷ்’ என்று காப்பியம் கொண்ட மொழியுமான அக்காட்டான் உச்சரிப்பு முறை தெரியாது போய்விட்டது.

உலகத்துத் தாய்மொழிகள் பலவும் பிரச்னைக்குள்ளாகி வருகின்றன என்று சொல்லிவரும் ஐ.நா சபையின் கலாசார நிறுவனமாகிய ‘யுனெஸ்கோ’, உலகத் தாய்மொழி நாளைக் கொண்டாட வேண்டும் என்று ‘ரபிகுல் இஸ்லாம்’ யுனெஸ்கோவிற்கு கடிதம் எழுதினார். அவர் வங்க தேசத்திலிருந்து புலம்பெயர்ந்த கனடா நாட்டின் வான்கூவர் வாசி. கனடா, பன்மொழி கலாசார நாடு. வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, “அதிகாரபூர்வமான முறையில், யுனெஸ்கோ உலகத் தாய்மொழி நாளைக் கொண்டாட வேண்டும். அது மொழிப் போராட்ட நாள் மட்டுமல்ல, தாய்மொழி காக்க மக்கள் இன்னுயிர் நீத்த நாள். அவர்களை நினைவுகூரும் விதமாக அது அமையும்” என்றார். கோரிக்கை ஏற்கப்பட்டது!

1999-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ வேண்டுகோளின்படி, பல நாடுகளிலும் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தாய்மொழி நாள், ஒவ்வொரு குடிமகனையும் தன் தாய்மொழிமீது பற்றுக்கொள்ளவும், அதனைப் பேசவும், தன் குழந்தைகளோடு உரையாடவும், அடுத்த தலைமுறைக்கு அரிய செல்வமாக அம்மொழியை விட்டுச்செல்லவும் வழிவகைகள் செய்கிறது.

நாமும் கொண்டாடுவோம்!

- சா.கந்தசாமி

தடம் விகடன்
(01/03/2019)

எழுதியவர் : (24-Apr-19, 5:23 pm)
பார்வை : 50

மேலே