410 வெள்ளி, பொன், பொருளெலாம் வெறும் மண் குவியலே - பொருளாசை ஒழித்தல் 6

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

பஞ்சமாபூ தங்களைவிண் டாரகையைத்
= தண்மதியைப் பானுத் தன்னைக்
கொஞ்சமும்நம் பொருளெனவுன் னாமல்வெள்ளி
= பொன்னெனுமட் குப்பை தன்னைத்
தஞ்சமாம் பொருள்களென நினைத்ததன்மே
= லாசையுற்றுத் தயங்கு கின்றாய்
நெஞ்சமே யுனைப்போலு மறிவீனர்
= தேடினுமிந் நிலத்தி லுண்டோ. 6

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்


”மனமே! ஐம்பூதங்களை, விண்ணிலுள்ள நட்சத்திரங்களை, குளிர்ந்த நிலவை, சூரியனைச் சிறிதேனும் நம்முடைய பொருள்கள் எனக் கருதாமல், வெள்ளி, பொன் எனப்படுகின்ற மண் குப்பையை நம்மைச் சேர்ந்த பொருள்கள் என நினைத்து, அவற்றின் மேல் ஆசை கொண்டு வாடுகின்றாய்.

உன்னைப்போல அறிவில் குறைந்தவர் தேடினாலும் இவ்வுலகத்தில் இருப்பார்களா?” என்கிறார் இப்பாடலாசிரியர்.

தாரகை - நட்சத்திரம். தயக்கம் - வாட்டம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Apr-19, 5:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே