409 களவும் கூத்தும் போல் அழியும் வாழ்வு - பொருளாசை ஒழித்தல் 5

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா

கனவதனிற் கண்டபொருள் செலவுக்கா மோகுனிக்குங்
..கங்குற் கூத்தில்
இனரமைச்ச ரெனவேடம் புனைந்தவர்தம் ஆணையெங்கும்
.ஏகு மோவிண்
கனமின்போ லொழியுமந்தப் புவிவாழ்வு நிலையென்னக்
.கருதிக் கோடி
நினைவுற்றா யுடல்வீழி னென்செய்வா யறிவில்லா
..நெஞ்சக் கல்லே. 5

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”அறிவில்லாத கல் போன்ற மனமுடைய நெஞ்சே! கனவில் கண்ட பொருள் கைச்செலவுக்கு ஆகுமோ? ஆடும் இரவுக் கூத்தில் வேந்தர், அமைச்சர் என வேடம் பூண்டவருடைய ஆணை எல்லாவிடங் களிலும் நிறைவேற்றப்படுமோ?

வானத்து மழையின் போது காணப்படும் மின்னலைப் போல் தோன்றி மறையும் உலக வாழ்வை நிலையென்று கருதி அளவில்லாத கோடி எண்ணங்களை நினைக்கின்றாயே! உடல் மாண்டு விழுந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

குனித்தல் - ஆடல். இனர் - வேந்தர். கனம் - மழை. புவி - உலகம். கோடி – அளவில்லாத கோடி எண்ணங்கள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Apr-19, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே