408 செல்வரிடம் எமன் வர அஞ்சுவானா - பொருளாசை ஒழித்தல் 4

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

நிறைசெல்வ முடையாரை நோய்துன்ப மணுகாவோ
..நினைத்த தெல்லாங்
குறையின்றிப் பெறுவாரோ புவிக்கரசு செலுத்துவரோ
..குறித்த வாயுள்
பிறையென்ன வளரும்மோ இயமன்வ ரவஞ்சுவனோ
..பேரின் பத்துக்(கு)
உறையுளாமோ அவர்கிரக மிவையெலாமும் மனமேநீ
..உன்னு வாயே. 4

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

நெஞ்சே! நீ நினைத்துப் பார்! நிறைந்த செல்வமுடை யாரது கிரக நிலைப்படி, அவரை உடல் நோயும், துன்பமும் நெருங்காதோ? அவர் நினைத்தது எல்லாம் குறைவின்றிப் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வாரோ?

குறிப்பிட்ட ஆயுட் காலம் நிலவின் பிறை போன்று வளர்ந்து கொண்டே இருக்குமோ? இவரிடம் எமன் வர அஞ்சுவானோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்தின் இருப்பிடமோ? என்று சிந்திக்கச் சொல்கிறார் இப்பாடலாசிரியர்

ஆயுள் - அகவை. உன்னு - நினை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-19, 8:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே