407 உடற்பயனை ஒழிக்கும் பொருள் உயர்பொருள் ஆகாது - பொருளாசை ஒழித்தல் 3

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா

நோக்கிருந்தும் அந்தகராக் காதிருந்துஞ் செவிடராக
..நோயில் லாத
வாக்கிருந்து மூகையரா மதியிருந்தும் இல்லாரா
..வளருங் கைகால்
போக்கிருந்தும் முடவராக வுயிரிருந்தும் இல்லாத
..பூட்சி யாரா
ஆக்குமிந்தத் தனமதனை யாக்கமென நினைத்தனைநீ
..அகக்கு ரங்கே. 3

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”செருக்குள்ள குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், நோயற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் இல்லாத மூடராய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவராய், உயிரிருந்தும் இல்லாத வெற்று உடலினராய்ச் செய்யும் தீய பொருளை வளரும் செல்வமென நினைத்தாயே” என்று பொருளாசையை ஒழிக்கும்படி கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

நோக்கு - கண். மூகை - ஊமை. பூட்சி - உடல்.
அகம் - செருக்கு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-19, 8:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே