உமாதேவிக்கு உள்ள ஒரு குறை பாண்டிமாதேவிக்கு இல்லை

தமிழ் இலக்கியம்

உமாதேவிக்கு உள்ள ஒரு குறை பாண்டிமாதேவிக்கு இல்லை!

ச.நாகராஜன்

தமிழ் இலக்கியம் ஒரு பெரிய அமுத ஸாகரம். அதில் முத்துக் குளிப்பதென்பது கடினமான காரியம்.

அதைச் செய்தவர் பண்டித மு.இராகவையங்கார். அவர் 2200 தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பெருந்தொகை என்னும் ஒரு தொகுப்பு நூலை 1936ஆம் ஆண்டு வெளியிட்டார்.

கடவுள் வாழ்த்தியல், அறிவியல், பொருளியல் என மூன்றாகப் பகுக்கப்பட்ட இந்த நூல் ஒரு அரிய நூல்.

ஆங்கிலத்தில் ஏராளமான கவிதைத் தொகுப்பு நூல்கள் உண்டு. தமிழிலோ அப்படி இல்லை. ஆனால் அப்படி பல நூறு தொகுப்பு நூல்களை வெளியிடக் கூடிய அளவில் தமிழ் இலக்கியம் பரந்திருக்கிறது.

பெருந்தொகையில் உள்ள ஒரு பாடலை மாதிரிக்காக் இங்கே பார்ப்போம்:

கம்பர் ஒரு முறை பாண்டி நாட்டு மதுரையம்பதிக்கு வருகை புரிந்தார்.

உமாதேவியே பாண்டி நாட்டு அரசியாக அவதரித்த திருத்தலம் மதுரை. அங்கு மீனாட்சியையும் சிவபிரானையும் தரிசித்தார். பின்னர் பாண்டிய மன்னனின் அரசவைக்கு வந்தார்.

தடபுடலான வரவேற்பு. பாண்டிமாதேவியும் பாண்டியனும் வணங்க பாண்டிமாதேவியை நன்கு பார்த்தார் கம்பர்.

பிறகு சொன்னார் பாண்டிமாதேவியே! நீயும் உமையும் ஒப்பு நோக்கினால் ஒன்றே தான்.

இதைக் கேட்டவுடன் பாண்டிமாதேவி மகிழ பாண்டியன் புன்முறுவல் பூக்க அவையோர் மகிழ்ந்தனர்.

கம்பர் தொடர்ந்தார்:

“ஆனால் தேவியே! உமாதேவிக்கு ஒரு குறை உண்டு”

அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஆவலுடன் கம்பரின் பாடலை எதிர்நோக்கினர்.


கம்பர் பாடினார் இப்படி:

உமையவளும் நீயும் ஒருங்கொப்பே ஒப்பில்

உமையவளுக் குண்டங்கோர் ஊனம் – உமையவள் தன்

பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியன் உன்

ஆகந்தோய்ந் தாண்டான் அரசு!

உமையவளும் – உலகம் ஆளும் உமாதேவியும்

நீயும் – பாண்டிமாதேவியாகிய நீயும்

ஒருங்கொப்பே – ஒப்புநோக்கிப் பார்த்தால் ஒன்றே தான்

ஒப்பில் – ஆனால் நன்கு ஒப்பு நோக்கி ஊன்றிக் கவனித்தால்

உமையவளுக்கு அங்கு உண்டு ஓர் ஊனம் – உமையவளுக்கு ஒரு குறை உண்டு

உமையவள் தன் பாகம் தோய்ந்து ஆண்டான் பலிக்கு உழன்றான் – உமா தேவியை தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்ட சிவ்பிரான் அவள் பாகம் தோய்ந்த காரணத்தால் திருவோடு எடுத்து பிச்சை எடுத்துக் கொண்டு அலைகிறான் (பலி – பிச்சை)

ஆனால்

பாண்டியன் உன் ஆகம் தோய்ந்து ஆண்டான் அரசு – உன்னுடைய ஆகம் தோய்ந்ததால் பாண்டிய மன்னன் இந்தப் பெரும் பாண்டிய நாட்டை அல்லவா ஆள்கிறான்!

போட்டார் ஒரு போடு!

எல்லொரும் ஆரவாரித்தனர் என்பதைச் சொல்லவா வேண்டும்!

பாண்டிய அரசியிடமும் பாண்டியனிடமும் பாண்டிய நாட்டிடமும் கம்பர் எத்துணை மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்ட இந்த ஒரு பாடலே போதும் அல்லவா?

பெருந்தொகையில் 1504-வது பாடலாக அமைந்துள்ளது இந்தப் பாடல்!

அருமையான பெருந்தொகையில் 2200 பாடல்களும் இப்படிப்பட்ட அரும் பாடல்களே!

***

Share this

எழுதியவர் : (26-Apr-19, 8:59 pm)
பார்வை : 42

மேலே