கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

ச.நாகராஜன்



(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)



1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:





“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்
ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”





2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.





3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர் மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.





பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.





ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!



கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!



மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்



போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.





4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-





அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்



நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்



ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!





5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.







ஆதாரம் :

முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”
2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்



(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)



Share this:

எழுதியவர் : (26-Apr-19, 9:25 pm)
பார்வை : 54

மேலே