ஐயப்பன் பாடல்

பல்லவி
************
மனமுருகி உனையழைத்தேன்
வாராயோ மணிகண்டா ! - உன்
மலர்ப்பாத தரிசனம்போல்
மகிழ்வேதும் இனியுண்டா ?

அனுபல்லவி
******************
தினம்பாடிக் கதறுவதுன்
செவிகளிலே விழவிலையா ? - உன்
திருவருளைப் பொழிந்திடவே
சிறிதேனும் உளமிலையா ??

சரணம்
**********
மெய்யென்றே உனைக்கருதி மெய்விதிர்க்க வேண்டிநின்றேன்
செய்தவற்றை மன்னித்துச் சேயென்னைக் காத்திடுவாய்
நெய்யாலே அபிஷேகம் நெஞ்சத்தை உருக்காதோ ?
அய்யப்பா இனியாற்றேன் அன்புடனே அரவணைப்பாய் !! ( மனமுருகி )

சாந்தமுடன் எழிலுருவில் சந்தனமும் மணக்குதய்யா
ஏந்திவரும் இருமுடியில் என்னிதயம் சிலிர்க்குதய்யா
காந்தமலை ஜோதியிலே கள்ளமனம் கரையுதய்யா
நீந்திவரும் வானலையில் நீகாட்சி தந்திடய்யா !! ( மனமுருகி )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-May-19, 3:19 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 65

மேலே