பகுத்தறிவுத் தம்பிகளின் மூட நம்பிக்கைகள்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் (Times of India dated 22-4-2019) வெளி வந்துள்ள ஒரு சுவையான செய்தி அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று.

பென்ஸில்வேனியா பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது – எப்படி மூட நம்பிக்கைகள் எனப்படும் சூப்பர்ஸ்டிஷன் பரவுகிறது என்பது பற்றி.

ஒரு நம்பிக்கையும் இல்லாதவரும் கூட, ஒரு அமைப்பில் இன்னொருவர் செய்வதைப் பார்த்து அதையே தானும் செய்கிறார். பலரும் இதை வழக்கமாகச் செய்யும் போது அது ஒரு அர்த்தமில்லாத – மூட நம்பிக்கைப் பழக்கமாக மாறுகிறது; பரவுகிறது.

தம்பிகள் கோவிலில் மணி அடிப்பது, தெய்வச் சிலைகளுக்கு மாலைகளை அணிவிப்பது, கோபுரத்தை நோக்கிக் கும்பிடுவது, அர்ச்ச்னை செய்வது உள்ளிட்ட ஏராளமான வழிபாட்டு வழக்கங்களைக் கிண்டல் செய்வது வழக்கம்.

ஆனால் என்ன ஆயிற்று?

தலைவர் சமாதிக்குச் செல்லும் போது செருப்பைக் கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.

ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம் சமாதியில்.

கும்பிடலாம் – கையெடுத்து.

அந்தச் சிலைகளைப் பார்த்து ஆனந்திக்கலாம்; கண்ணீர் வடிக்கலாம்.

அதை மதிப்புடன் நோக்கலாம்; வழிபடலாம்.

அதற்கு ஒருவர் அவமரிதையாக ஏதேனும் செய்து விட்டால் அவ்வளவு தான் – ஊரே களேபரம் அடையும்.

அட, நீங்கள் தானே சொன்னீர்கள், சிலையை இழித்துப் பேசினால் சிலை என்ன பேசவா செய்யும் என்று.

ஊது பத்தி எதற்கு, செருப்பை ஏன் அவிழ்க்க வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?

ஆனால் பகுத்தறிவு மழுங்கி, புதிய மூட நம்பிக்கைகளை மேற்கொண்டு விட்டீர்களே!

இரண்டு வண்ணக் கொடி எதற்கு, ஒரு சின்னம் தான் எதற்கு? அதற்கு வணக்கம் தான் ஏன், அதை மதிப்பது தான் எதற்கு?

ஏன் பேச்சில் கூட அனைவரும் ஒரே பாட்டர்னைப் பின்பற்றுவது தான் ஏன்? “வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு” ஊரிலுள்ள அனைத்துப் பெயர்களையும் விளித்து அழைத்து … அடடா, எத்தனை மணித்துளிகள் வேஸ்ட்!

மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுத் தம்பிகள் வளர்க்கும் புதிய மூட நம்பிக்கைகள்!

இது முந்தையதை விட மோசமானது.

அங்கு மனிதனைத் துதி பாடவில்லை.

இங்கு “செத்து மாயும்” மனிதனைத் தெய்வமாக்கி விடுகிறார்கள்!

அடடா, என்ன ஒரு பகுத்தறிவு!

இதைத் தான் பென்ஸில்வேனியா ஆய்வு நன்கு ஆராய்ந்து தனது முடிவைச் சொல்கிறது.

“ஒருவனை இன்னொருவன் பார்க்கிறான்; அதன் படி நடக்கிறான்; அது நாளடைவில் ஒரு பழக்கமாக நம்பிக்கையாக மாறுகிறது.”

ஆனால் ஹிந்து மதத்தில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்கள் உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மந்திரங்களைக் கண்ட மஹரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டவை.

இவை பற்றிய ஆய்விற்கு அறிவியல் வரவில்லை; வந்தால் ஒரு வேளை, வியத்தகும் விஷயங்கள் வெளியாகலாம்.

அதனால் தான் விவேகானந்தர் கூறினார் “நமது மஹரிஷிகள் காலத்தினால் மிகவும் முற்பட்டவர்கள்; அவர்களை சரியாக் அறிந்து கொள்ள வெகு காலம் ஆகும்” என்று.

அறிவியல் வளர வளர ஹிந்து மதத்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் வியப்பை ஊட்டுகின்றன. அதை அறிவியல் விளக்கும் போது பிரமிக்கிறோம்.

பகுத்தறிவுகளின் புதிய மூட நம்பிக்கைகள் காலத்தால் அழிந்து படுபவை. ஆனால் மாறாத நியதிகள் உடைய ஹிந்து பாரம்பரியப் பழக்கங்கள் உள்ளர்த்தம் கொண்டவை, நீடித்து நிலைப்பவை! இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!

இவற்றைப் போற்றி அதன் படி நடப்பது நமக்குச் சிறப்பை அளிக்கும்!

***

Share this:

எழுதியவர் : ச.நாகராஜன் (6-May-19, 7:23 am)
பார்வை : 61

மேலே