தண்ணீர் பிரச்சனை மக்கள் கண்ணீர் மக்களவை தேர்தலில் பேசும்பொருளாக இல்லாமல் போனது ஏன்

May 13, 2019, 16:56 [IST]
சென்னை:
தண்ணீர் பற்றாக்குறைதான் இந்த தேசத்தின் பல இடங்களில் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் குடிநீர் பிரச்சனை சுத்தமாக எழுப்பப்படவில்லை.

எந்தகட்சியுமே குடிநீர் பிரச்சனை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதாக பேசவில்லை. வறுமை ஒழிப்புக்காக நிதி ஒதுக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிகம் பேசினார். இதேபோல் இந்தியாவின் பாதுகாப்பு, நாட்டின் ராணுவம் என்பது பற்றியே அதிகம் பேசினார் மோடி.

ஆனால் இங்கு மிகப்பெரிய பிரச்னை, தண்ணீர் தான். அதை பற்றி எந்த கட்சிகளுமே பெரிதாக வாய் திறக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.


தண்ணீர் நேரம்


ஒவ்வொரு ஊரிலும் பால், பேப்பர், மளிகை என எது எப்போது வரும் என்பது மக்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால் தண்ணீர் மட்டும் எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது. தண்ணீர் பிரச்சனைக்கு ஒவ்வொரு ஊரிலும் மிக முக்கிய காரணம் என்றால் நீர் மேலாண்மை இல்லாதது தான்

பக்கத்து மாநிலங்கள்


தண்ணீர் ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் பிரச்சனையாக நினைக்க வேண்டாம். பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் நீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள்

பருவ மழை பாதிப்பு

பருவ மழை பொய்த்து போன நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சனை இந்தியா முழுவதுமே தலை விரித்து ஆடுகிறது. ஆனால் இந்த தேர்தலில் தண்ணீர் பிரச்சனை பெரிதாக பேசும் பொருளாக இல்லை. காரணம். இங்கு தண்ணீரை விட வறுமை ஒழிப்பு , தேசத்தின் பாதுகாப்பு குறித்தே அதிகமாக பேசினார்கள்.


தேசத்தின் பிரச்சனை அல்ல


தண்ணீர் பிரச்சனையை பெரிய பேசும்பொருளாக இல்லாமல் போனதற்கு காரணம், தண்ணீர் என்பது ஒவ்வொரு ஊர் சார்ந்த பிரச்னையாகவே அரசியல் தலைவர்கள் பார்க்கிறார்கள். அதை தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனையாக யாரும் பார்க்கவில்லை. தண்ணீர் மேலாண்மை குறித்து யாரும் கவலைப்பட்டது மாதிரியும் தெரியவில்லை.

மாறி மாறி திட்டினார்கள்


அவர்களை பொறுத்தவரை வெல்ல வேண்டும். அதற்காக என்ன பேச வேண்டுமோ? அதை சரியாக பேசினார்கள்.வளர்ச்சி திட்டங்கள் செய்தது குறித்தோ, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்போவது குறித்தோ பெரிதாக பேசவில்லை. ஆளும், எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டது தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தது. தண்ணீர் மேலாண்மை மட்டும் இந்த தேசத்தில் சரியாக இருந்தால் இந்த நாட்டின் வறுமையே இல்லாமல் போகும் என்ற சூழலில் அரசியல் கட்சிகள் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாதது வேதனையின் உச்சம்.

எழுதியவர் : Velmurugan P (14-May-19, 3:25 am)
பார்வை : 128

மேலே