மானமுடன் உண்டு மகிழ உரிய தொழிலொன்றைப் புரிதல் கடன் - தொழில், தருமதீபிகை 468

நேரிசை வெண்பா

மானுடங்கள் யாவும் மருவு பசியுடைய
ஊனுடம்பு தாங்கி உறுதலால் - மானமுடன்
உண்டு மகிழ உரிய தொழிலொன்றைக்
கண்டு புரிதல் கடன். 468

- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இயல்பாகவே பசி, தாகங்களையுடைய ஊன் உடம்புகளை மானிடர்கள் பெற்றிருக்கின்றனர்; அங்ஙனம் உற்றவர் சுகமாய் உண்டு வாழும்படி உரிய தொழில்களைக் கண்டு கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் தொழிலின் உரிமையை உணர்த்துகின்றது.

மனித வாழ்வு பல அல்லல்களையுடையது. எல்லா வழிகளிலும் இடர்கள் சூழ்ந்துள்ளன. கடலில் அலைகள் மோதுதல் போல் பிறவிக் கடலில் துயர்கள் மோதிக் கொண்டே இருக்கின்றன. துன்பங்களைக் கடந்து வருவதிலேயே மனிதன் இன்பங்களை அடைந்து வருகிறான், உள்ளே பசித்தீ நிலையாகப் பற்றி எரிந்து கொண்டேயிருக்கின்றது; அதனைத் தணித்து வாழ்வதே தணியாத பாடாய்த் தழைத்து நிற்கின்றது.

’மானுடங்கள் யாவும் மருவு பசியுடைய’ என்றது இந்த மனித வாழ்க்கையின் நிலைமையை நுணுகி நோக்க வந்தது. ’பசி என்னும் சொல் புசி’ என்பதை நினைவுறுத்தி அதன் நீர்மையைத் துலக்கியுள்ளது.

பசி தீர. உண்டு வாழ வேண்டிய வகையில் வாழ்வு அமைந்திருத்தலால், நாளும் மனிதன் உழைக்க வேண்டியவனாய் உரிமை கொண்டுள்ளான். உழையாமல் உண்பது பிழை ஆகின்றது. நெற்றியில் வியர்வை தோன்ற எவன் உழைக்கின்றானோ, அவனே உண்ண உரியவன்; அங்ஙனமின்றி வீணே சோம்பேறியாய்த் திரிந்து விட்டு உண்ண வரின் அவன் உலக சமுதாயத்தின் நிலையைக் குலைத்தவன் ஆகின்றான்,

பிறர் உழைப்பால் வருவதைத் தான் யாதும் உழையாமல் .நுழைந்து உண்ணுவது ஈனமாதலால் அதனை மானமுடையவர் வெறுத்து இகழ்ந்து விடுகின்றனர்.

எவ்வழியும் உழைத்து உண்பதே திவ்விய போகமாய்ச் செழித்து வருகின்றது. அவ்வாறு உண்பவனே உலகத்திற்கு நன்மை செய்யும் நண்பனாய் நலம் பல புரிகின்றான்.

“In the sweat of thy face thou shalt eat bread.”

உன் நெற்றி வேர்வையில் நீ உண்பாயாக’ என மேல் நாட்டில் இப்படி ஒரு முதுமொழி மதி தெளிய வெளிவந்துள்ளது.

உழைத்து உண்ணும் உணவே கண்ணியமானது என்று யாவரும் எண்ணியிருத்தலால் அதன் மதிப்பும் மாண்பும் உணர்ந்து கொள்ளலாம். கருமம் வாழ்வின் தருமமாயது.

உணவு உழைப்பால் வருதலால் அதனை உண்ண உரியவன் தொழில் பண்ணவுரிய கடமையை மருவினான்.

Everybody that eats ought to assist in procuring food. - Barlow

'உண்ணுகின்ற ஒவ்வொருவரும் உணவைப் பெறுவதில் துணை புரிய வேண்டும்’ என்னும் இது ஈண்டு உணரவுரியது. பார் லோ என்ற மேல்நாட்டு ஆசிரியர் தம்முடைய மாணாக்கருக்கு இவ்வாறு ஒருமுறை புத்தி போதித்திருக்கிறார்.

மனிதன் உணவால் உயிர் வாழ்கின்றான்; அது தொழிலால் உளவாகின்றது; ஆகவே தொழில் சீவ ஆதாரமாய் மேவியுள்ளமை தெளிவாதலால் அதனைச் செய்து வருபவன் சீவ கோடிகளுக்கு இதம் செய்தவன் ஆகின்றான் ,

'உயிர்கள் அன்னத்தால் வாழுகின்றன; அன்னம் மழையால் உண்டாகின்றது; மழை தருமத்தால் வருகிறது; தருமம் கருமத்தால் அமைகின்றது’ என்று கீதையில் சொல்லப்பட்டது இங்கே கருதத் தக்கது. காரண காரிய நிலைகள் பூரண வுரிமைகளை உடையன.

எப்படியும் ஏதாவது ஒரு தொழிலை மனிதன் செய்து வரவேண்டும் எனக் கண்ணபிரான் கீதையில் வலியுறுத்தியிருக்கிறார்,

கர்ம யோகம் என ஒரு அத்தியாயம் தனியே அமைத்திருத்தலால், தொழிலின் மகிமையை உலகம் தெளிய அவர் உணர்த்தியுள்ளமை உணரலாகும்.

உண்டு மகிழ உரிய தொழில்ஒன்றைக்
கண்டு புரிதல் கடன்.

தொழில் செய்யும் கடமையில் மனிதன் மருவியுள்ளமையால் அதனை உரிமையுடன் அவன் செய்து வர வேண்டும் என்பதைக் காரணத்தோடு இது காட்டி நின்றது. உணவில் உணர்வு காண்பது உயர் மகிமை ஆகின்றது.

‘மானமுடன் உண்டு மகிழ’ என்றது உண்ணும் உணவின் உண்மையை நுண்மையாக உணர்ந்து கொள்ள வந்தது. பிறரை எதிர்பாராமல் தான் உழைத்துத் தழைத்து வருதலிலேயே மதிப்புகள் கிளைத்து வருகின்றன. ஆள் வினையில் மூளும் ஆண்மையே நாளும் மேன்மையாம்.

தொழில்கள் பல உள்ளன; அவற்றுள் சீவ ஆதாரமானது உழவுத் தொழிலேயாம். உயிரமுதம் ஆகிய உணவுகளை உளவாக்கியருளுதலால் உழவு யாண்டும் உயர்நிலையில் ஓங்கியுள்ளது.

சுழன்றுமேர்ப் பின்ன(து) உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை. 1031 உழவு

எவ்வழியும் உழவே தலைசிறந்த தொழில் என வள்ளுவர் இங்ஙனம் நிலை நாட்டியுள்ளார். உழந்தும் என்றது மாடும் மனிதனும் அதில் பாடுபட்டு வரும் பீடு தெரிய வந்தது.

வருந்தி முயன்ற அளவே நிலம் பயனருளி வருதலால் அந்தக் கருமத்தின் வழி வருவது தருமமாய்த் தழைத்து நின்றது.

உலகில் நிலவும் தொழில்கள் பலவினும்
பயிர்த்தொழில் ஒன்றே உயிர்த்தொழில்.

என உயிரினங்கள் அதனால் உளவாகி வருதல் கருதி உழவினை இங்ஙனம் புகழ்ந்து கூறியது. முன்னாளில் இத்தொழில் இந்நாட்டில் மிகவும் உன்னத நிலையில் ஓங்கியிருந்தது.

உரம், உழவு, பருவம், பக்குவம் முதலிய கருமங்களில் எவரும் கைதேர்ந்து நின்றனர். எங்கும் விளைவுகள் பொங்கி எழுந்தன.

எருச் செய்வது இனத்தான் செய்யான்.
கலப்பை கண்டான் கலப்பை கொண்டான்.
அகல உழுவதினும் ஆழ உழு.
உழவின் அளவே விழவும் விளைவும்.
சித்திரை மாதத்தின் உழவு பத்தரை மாற்றுத் தங்கம்,
ஆடிப் பட்டம் தேடி விதை
கட்டும் காவலும் பெட்டிப் பொருள்கள்.
மண்ணைத் திருத்தி மதியோடு உண்ணுக.

என இன்னவாறு வரும் பழமொழிகள் எல்லாம் முன்னம் இங்கே உழவு இருந்த நிலைமையை உணர்த்தியுள்ளன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

கோசலம் விராய்க்குளம் பழுந்திச் சேறதாய்
மாசென வழித்தெறிந்(து) உலர்ந்த ஆப்பியும்
பூசலோ(டு) உழவர்கள் போதர் வார்பழி
ஆசிலார்க்(கு) அடுப்பினும் ஆய்ந்து ளோர்விடார். 95 தணிகைப் புராணம்

104.
நட்டதோர் குழுவினை நடாத(து) ஓர்குழு
ஒட்டலர் போலநின்(று) ஒறுத்தல் உன்னியே
அட்டனர் ஆம்என அடாத வான்களை
கட்டனர் வேற்றுமை உணரும் காட்சியார். 15

105.
ஏயின செயல்எலாம் இயற்றி வேறுவே(று)
ஆயிடை வேண்டுவ(து) அமைய ஆற்றியே
மாஇரும் புவிமிசை மகவைப் போற்றிடும்
தாய்என வளர்த்தனர் சாலி ஈட்டமே. 16 திருநாட்டுப் படலம், கந்த புராணம்

தரவு கொச்சகக் கலிப்பா

வரம்புவயற் செந்நெலுக்கு வாழ்வேலி வான்கரும்பு;
கரும்பினுக்கு நறுங்கதலி, கதலிகட்குக் கமுகவனம்;
அருங்கமுகுக்(கு) உயர்தாழை அணிவேலி, அதன்புறத்துக்
குரம்பையுடை நீர்க்கரும்பும் கொங்குவளை செங்குவளை. 1

கொல்லைவாய் ஏனலுக்குப் பொன்கொழிப்பர் குறமகளிர்;
நெல்லிலா ரம்கொழிப்பர் நீலவிழிக் கடைசியர்கள்;
மெல்லியலார் பால்அளப்ப மீன்அளப்பர் நுளைமாதர்,
முல்லையார் மோர்அளப்ப முத்தளப்பர் அளத்தியரே. 2 திருக்குற்றாலத் தலபுராணம்

பயிர்த்தொழிலின் பழங்கால வழக்கங்களைக் குறித்து இங்ஙனம் பாடல்கள் பல விளைந்திருக்கின்றன. அரிய பல காட்சிகளைக் கவிகள் சுவையாகக் காட்டியுள்ளன. ஆவின் சாணம் கீழே இழிந்து சிதைந்து கிடந்தாலும் உழவர்கள் அதனை ஆவலோடு வாரிப் போவர் என்றது உரம் சேர்ப்பதில் அவர் கொண்டிருந்த ஊக்கமும் உறுதியும் உணர வந்தது. ஆப்பி - சாணம்.

பயிர்களை நட்டகுழு என்றது; களைகளை நடாதகுழு என்றது. வயல்களில் நிகழ்ந்த தொழில்களையும் வளங்களையும் உளம் களி கூர்ந்து காண்கின்றோம். இவ்வாறு எவ்வழியும் உயர்ந்து யாண்டும் செழித்திருந்த தொழில் ஈண்டு இன்று இழிநிலையில் உள்ளது.

நேரிசை வெண்பா

உள்ள நிலத்தை உரஞ்செய்து நன்குழுது
வெள்ளம் எனவிளைவை மேவாமல் - உள்ளுவந்து
மேலும் நிலமுறவே வேண்டல் மிகுநீர்ஒண்
பாலுறழ்ந்த பாடே படும்.

சுருங்கிய நிலத்தில் மிகுந்த விளைவுகளை விளைத்துக் கொள்ளாமல் நில விரிவை விழைந்து உழவர் நிலை குலைந்துபடுதலை இது விளக்கியுள்ளது. கருதிச் செய்யாத கருமம் விருதாவாய் விளிந்து படுகின்றது. கூர்ந்து ஓர்ந்து செய்யின் ஆர்ந்த பயன்களமைகின்றன.

முன்னே நாலுகால் மாடு போகின்றது; பின்னே இரண்டு கால் கூடு போகின்றது என்றபடி வீணே குருட்டுப் பாடுபடாமல் யாண்டும் விழிப்போடு மதியைச் செலுத்தி மாண் பயன் பெற வேண்டும். வினை நலம் நாடி வியனிலை தேட வேண்டும்.

உயிரினங்களை ஊட்டி உலகத்தை இயக்கி வருதலால் உழுந்தொழில் என்றும் உயர்ந்த நிலையில் ஒளி செய்துள்ளது.

அறுசீர் விருத்தம்
(காய் 4 மா தேமா)
உழவும் உலகமும்.

உடலெடுத்த உயிர்களெலாம் உணவுகளால் உளவாகி
உலாவு கின்ற
அடலெடுத்த படைவீரர் அரசாளும் அதிவீரர்
அரிய ஞான
மிடலெடுத்த மெய்வீரர் மேலான கொடைவீரர்
மேலோர் யாரும்
குடலெடுத்த பசியெடுக்கக் கோலங்கள் பலஎடுத்தே
குலாவு கின்றார், 1

உண்ணுகின்ற உணவுகளால் உயிர்களுள; அவ்வுணவு
உழவன் கைகள்
பண்ணுகின்ற பயிர்களிலே பரவியுள; ஆதலினால்
பாரில் யாரும்
எண்ணுகின்ற தொழில்களெல்லாம் ஏருடையான் தொழிலெதிரே
இரவி முன்னே
நண்ணுகின்ற ஒளிகளென நாணிவொளி யிழந்தயலே
நடந்து போமே. 2

வில்வீரர் வாள்வீரர் வேல்எடுத்துப் போர்தொடுக்கும்
வெற்றி வீரர்
மல்வீரர் சொல்வீரர் மதிவீரர் கதிவீரர்
மதித்து மேலே
சொல்வீரர் எல்லாரும் சோராமல் சோறழித்துத்
தொடர்ந்து நின்று
ஒல்வீரர் ஆக்கியிந்த உலகத்தைக் காத்துநிற்போர்
உழவர் அன்றே. 3

கடலோடி மலைஏறிக் கான்கடந்து வான்பறந்து
கருதிச் சூழ்ந்து
மிடலோடு பொன்பொருளை மிகத்தேடி வந்தவரும்
மேவி நின்ற
உடலோடும் உயிர்வாழ உழவனருள் உணவின்றேல்
உய்தி யுண்டோ?
அடலோடும் அறத்தோடும் அவனியெலாம் வாழ்வதவன்
அருளால் அம்மா! 4

கைத்தொழிலைச் செய்தாலும் கலைஞானம் கற்றாலும்
கருதி ஓர்ந்து
சித்திரங்கள் புனைந்தாலும் திரைகடல்போய் வாணிபங்கள்
சிறக்கச் செய்து
ஒத்தபொருள் பெற்றாலும் உலகமெலாம் ஆண்டாலும்
உழவன் கையால்
வைத்தபொருள் இல்லையெனில் வையமுய்ய வழியுண்டோ
வண்மை என்னே! 5

உழவினால் உலகம் நிலை பெற்று வருதலை இக் கவிகள் உணர்த்தியுள்ளன. பொருளின் நயங்களையும் உண்மைகளையும் ஊன்றி உணர்ந்து உரிமைகளை ஓர்ந்து கொள்ள வேண்டும். நல்ல தொழிலை நாடிச் செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-19, 9:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே