மடியின்றி ஊக்கி மதியூன்றி நின்றான் குடி குன்றம் என்னக் குலவும் - சோம்பல், தருமதீபிகை 478

நேரிசை வெண்பா

மடியின்றி ஊக்கி மதியூன்றி நின்றான்
குடிகுன்றம் என்னக் குலவும் - மடிகொண்டு
மாறி யிருந்தான் வருகுடியும் குன்றவசை
ஏறி அழியும் இழிந்து. 478

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சோம்பல் இன்றி மகியூகமாய் முயன்று வருகின்றவன் குடி பொருளும், புகழும் சுரந்து உயர்ந்த மலைபோல் சிறந்து விளங்கும்; சோம்பி நின்றவன் குடி இழிவாய் அழியும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவனுடைய சீவிய வாழ்வு வளமாய்ச் செழித்து விளங்குவதற்குப் பலவகை அனுகூலங்கள் தேவையாயிருக்கின்றன. வெளியே மருவி மிளிர்கின்ற பொருள் நிலைகள் யாவும் சரியான காரண உரிமையைக் கருதி நிற்கின்றன. மூல காரணங்களை முன்னிட்டே ஞால வாழ்வுகள் யாண்டும் இயங்கி வருகின்றன.

செல்வ வளங்கள், கல்வி நலங்கள், அதிகார அமைதிகள் முதலிய உயர் நிலைகள் எல்லாம் கருமங்களின் வழியாகவே மருமமாய்க் கலித்து ஒளிர்கின்றன. வித்திலிருந்து விளைவுகள் எழுதல் போல் வினைகளிலிருந்து போகங்கள் எழுகின்றன. ’வினைப் போகமே ஒரு தேகம்’ என்றது அரிய பல நுண் பொருள்களை நுனித்துணர வந்தது. உயிர்கள் செய்துள்ள நல்வினை, தீவினைகளின் பயன்களை அனுபவிக்கவே உடல்களைத் தாங்கி உலகில் அவை உலாவுகின்றன. தான் செய்த குற்றத்தின் பயனை அனுபவித்துக் கழித்தற்கு ஒருவனுக்குச் சிறைக் கூடம் அமைத்திருத்தல் போல் வினைப்பயன்களைத் துய்த்துக் கழிக்க உயிர்களுக்கு உடல்கள் அமைந்கிருக்கின்றன. பிறவிச் சிறை என மனித தேகத்தை இனிது குறித்திருப்பது கருதி யுணரவுரியது.

'இச்சிறை பிழைப்பித்(து) இனிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்’

என்று கடவுளை நோக்கிப் பட்டினத்தார் உருகி வேண்டியிருக்கிறார், ஆகவே மானிட வாழ்வின் துயர நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

தீய வினைகள் துன்பங்களை விளைத்து வருதலால் அவை பாவங்கள் என அஞ்ச நேர்ந்தன. நல்ல கருமங்கள் யாண்டும் இன்பங்களை நல்கி வருகின்றன. தருமம், தானம், தவம், வேள்வி என்பன எல்லாம் மனம், மொழி, மெய்களால் இனிது மருவி வருகிற புனித கருமங்களேயாம். கருதிய எதையும் உறுதியாக உதவி வருதலால் கருமம் கற்பகதரு என வந்தது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

நல்வினை என்னும் நன்பொன் கற்பக மகளிர் என்னும்
பல்பழ மணிக்கொம்(பு) ஈன்று பரிசில்வண்(டு) உண்ணப் பூத்துச்
செல்வப்பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்ற(து)
ஒல்கிப்போம் பாவக் காற்றின் ஒழிகயிப் புணர்ச்சி என்றான். 2728 சோலை நுகர்வு, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

சிறந்த மனைவி, உயர்ந்த மக்கள், நல்ல செல்வங்கள், இனிய போகங்கள் யாவும் நல்வினையாகிய கற்பகம் நல்கியருளும் என இது உணர்த்தியுள்ளது. யாண்டும் இன்ப மணம் வீசிக் குளிர்நிழல் விரிந்து பசுமை சுரந்து செழித்துப் பூத்துப் பழுத்துத் தழைத்திருக்கும் அந்த நல்ல குடிவாழ்வில் பாவக் காற்று படின் பரிசி குலைந்து போகும் என்றதனால் தீமையால் நேரும் இழிவு நிலைகளை எளிது தெளியலாம்.

புனிதமான நல்ல கருமமே மனித வாழ்வை மகிமைப்படுத்தி வருகின்றது. செயல் இழந்து இழிந்திருந்தவன் மயலுழந்து ஒழிந்து போகின்றான்.

ஊக்கமும், உணர்ச்சியும், உழைப்பும் உயர்ச்சிகளின் உயிர்ப்புகளாயுள்ளன. உயர்ந்தவர்களாய் உலகில் சிறந்து விளங்குகின்றவரிடம் இந்தத் தன்மைகள் நன்கு சுரந்திருக்கின்றன.

மடியும், மடமையும், மறதியும் மனித வாழ்வை இழிவுபடுத்தி விடுதலால் அவை குடிகேடுகள் என முடிவாகியுள்ளன. படியேறி மேலே போகின்றவர் இப்பழி நிலைகளை அடியோடு நீக்கி எவ்வழியும் ஊக்கி முயன்று ஒளி புரிந்து மிளிர்கின்றார்.

’மடியின்றி ஊக்கி மதியூன்றி’ என்றது உயர்ந்த முயற்சியாளனுடைய சிறந்த நீர்மை சீர்மைகளைக் கூர்மையாக ஓர்ந்து கொள்ள வந்தது. உணர்ச்சியோடு ஊக்கி முயல்பவர் அரிய பல செல்வங்களையடைந்து உயர்ந்து விளங்குவராதலால் அவர் பிறந்த குடியும் பெருமை மிகப் பெற்றது.

‘குடி குன்றம் என்னக் குலவும்’ மடியின்றி மதியூன்றி முயன்று வருபவனுடைய குடி பல வகைகளினும் உயர்ந்து நெடிது ஓங்கி நிலவும் என்பதை இந்த உவமை உணர்த்துகின்றது. குன்றம் - மலை

சோம்பலின்றி முயன்று வருபவனிடம் செல்வம் பெருகி வருமாதலால் மடியிலான் குடி வளங்கள் பல சுரந்து அதிசய நிலையில் உயர்ந்து எவரும் துதி செய்யும்படி துலங்கி நிற்கின்றது.

மடியிலான் செல்வம்போல் மரன்நந்த; அச்செல்வம்
படியுண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிஞிறார்ப்ப. கலி, 35

வசந்த காலத்தில் மரங்கள் குளிர்ச்சியாய்த் தழைத்து நின்ற நிலைகளை இது உணர்த்தியுள்ளது. சோம்பல் இல்லாதவனிடம் செல்வ வளங்கள் பெருகி மிளிர்தல் போல, மரங்கள் பலவகை மலர்கள் பூத்துச் செழித்து நின்றன; அந்த உழைப்பாளியின் செல்வத்தை எல்லாரும் உண்டு மகிழ்வது போல் வண்டுகள் அங்கே ஒலித்து உலாவின என விளக்கியிருக்கும் இதன் அழகு சிறப்பாகும். மடியின்மையோடு ஊக்கமும் கலந்தபோதுதான் ஆக்கம் பெருகி வருமாதலால் அது அயலே மருவி வந்தது.

ஊக்க வேந்தன் ஆக்கம் போல
வீக்கம் கொண்டு வெம்மைய வாகி
இலைப்பூண் திளைக்கும் ஏந்திள முலையள். - பெருங்கதை, 3-5

ஓர் அரசகுமாரியின் தனங்களைக் குறித்து வந்துள்ள இதில் ’ஊக்க வேந்தன் ஆக்கம்’ உவமையாய் வந்துள்ளது. ஒப்பின் நுட்பம் ஓர்ந்து உணரத் தக்கது. காவியக் கவிகளுடைய சொல்லும் பொருளும் சீவிய நிலைகளைத் துலக்கி ஓவியக் காட்சிகளாய் ஒளி புரிந்து எவ்வழிவும் சுவை சுரந்து வருகின்றன.

யாரும் மடி மண்டியிருக்கலாகாது; எல்லாரும் ஊக்கி உழைக்க வேண்டும்; யூகமாய் முயன்று ஆக்கங்கள் பல அடைந்து யாவரும் பாக்கியசாலிகளாய்ப் பாரில் வாழ வேண்டும் என்பதை நூல்கள் பல வழியாகப் போதித்திருக்கின்றன.

சிறிய பிராணிகளும் உரிமையோடு உழைக்கின்றன. சோம்பலின்றி உழைப்பதில் எறும்புகள் தலை சிறந்து நிற்கின்றன. தமக்கு வேண்டிய இரையைப் பருவ காலத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. உழைப்பிலும், பிழைப்பிலும் சீர்மையடைந்துள்ளமையான் சீவிய வாழ்வுக்கு அவற்றின் நீர்மை எடுத்துக் காட்டாக வந்துள்ளது.

வேலை செய்யாமல் சோம்பியிருக்கும் ஒரு மடியனுக்கு எறும்பின் நிலைமையைச் சுட்டிக் காட்டி ஒரு பெரியவர் அரிய நீதியை இனிது போதித்திருக்கிறார்.

“Go to the ant, thou sluggard: consider her ways, and be wise.” (Bible)

’சோம்பேறியே! எறுமபினிடம் போய் அதன் தொழில் முறைகளை நோக்கித் தெளிவடைந்து கொள்' என்று சாலமன் என்னும் யூத மன்னன் ஒரு மடியனைப் பார்த்து இவ்வாறு கூறியிருக்கிறார். மடி மனிதனை எறும்பினும் இழிஞனாக்குகின்றது.

நேரிசை வெண்பா

மடியுள் மிடியும் மடியின்மை யுள்ளே
முடியும் குடியாய் முடியும் - படியை
இனிது தெளிந்தே இளிவில் இழியா
மனிதன் மகிமை பெறும்.

மடியன் மிடியனாய் இழிகின்றான்; மடியின்றி முயல்பவன் முடி மன்னனாய் உயர்கின்றான். இந்த உண்மையை யுணர்த்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-19, 9:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே