திருவின் நிலையமாய் நின்று நிலவும் தொழிலின் தலைமை தெரியும் - தொழில், தருமதீபிகை 469

நேரிசை வெண்பா

ஒருவன் உழைக்க உலகம் தழைக்கும்;
அருவ நிலையை அறியின் - திருவின்
நிலையமாய் நின்று நிலவும் தொழிலின்
தலைமை தெரியும் தனி. 469

-- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இறைவன் ஒருவன் உழைத்து வர எல்லா உலகங்களும் தழைத்து வருகின்றன. ஆகவே தொழிலின் அருமை பெருமைகளை உணர்ந்து அதனை உரிமையோடு எவரும் செய்து வர வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஊக்கம், உழைப்பு, உறுதி, முயற்சி என்னும் மொழிகள் சீவர்களுடைய உயர்ச்சி நிலைகளை உணர்த்தி வருகின்றன. கடலில் எழுகின்ற அலைகள் போல் எழுச்சிகளும் இயக்கங்களும் உடலின் இயற்கைகளாய் ஓங்கியுள்ளன. தொழிலில் இயங்கி வருமளவே மனிதனிடம் எழிலும் இன்பமும் விளங்கி வருகின்றன.

தொழில் செய்யவே மனிதன் தோன்றியுள்ளான் என்பதை அவனுடைய உடலுறுப்புக்கள் நன்கு உணர்த்தி நிற்கின்றன. உலகம் நடைபெற்று வருதலை ஓர்ந்து நோக்கின் உயிர்களின் இயல்புகளும் தொழில்களின் தொடர்புகளும் வழி முறைகளும் தெளிவாகத் தேர்ந்து கொள்ளலாம்.

உலகம் எப்பொழுதும் சுழன்று கொண்டே யிருக்கின்றது. இயற்கை என்றும் அதிசய நிலையில் இயங்கி வருகின்றது. அதன் கதி வேகங்கள் மதியூகங்களாய் மருவி மிளிர்கின்றன.

கதிரவன் உதயமாய் ஒளி செய்கின்றான்; காற்று வீசுகின்றது; கடல் ஒலிக்கின்றது. எல்லாம் இயற்கை நியமங்களாய் யாண்டும் இயங்கிச் செயற்கை நிலைகளை விளக்கி வருகின்றன.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் கடவுள் இடையறாது செய்து வருதலை உலக நடையால் நாம் ஓர்ந்து வருகின்றோம்.

எங்கும் என்றும் தனி முதல் தலைவனாய் நின்று வருதல் கருதி கடவுளை இங்கே ;ஒருவன்’ என்றது. இறைவன் ஏகனாய் நின்று சீவ கோடிகளையும், அண்ட கோடிகளையும் இயக்கியருளுகின்றான். அவன் ஆட்ட உலகம் ஆடி வருதலால் ’நாடகத்தொழிலன்’ எனப் பாடல் மிகப் பெற்றான்.

முத்தொழிலின் வினைமுதல்,நீ; மூவர்க்கும் முழுமுதல்,நீ:
எத்தொழிலும் இறந்தோய்,நீ, இறவாத தொழிலினை,நீ. - சிதம்பரச் செய்யுட் கோவை

கடவுள் என்றும் உயர்ந்த தொழிலாளி என்பதை இங்கே உணர்ந்து கொள்கின்றோம். யாதொரு குறையுமின்றி எல்லாம் நிறைந்துள்ள ஆண்டவனே இவ்வாறு தொழில் செய்து வருதலால் தொழிலுக்கும் உலகிற்கும் உள்ள உறவுரிமை யுணரலாகும்.

‘ஒருவன் உழைக்க உலகம் தழைக்கும்’ என்றது இவ்வுலகம் யாதும் நிலை குலையாமல் யாண்டும் வளமாய்ச் செழித்து வரும் நிலைமை தெரிய வந்தது.

அருவமான பரமனே தொழில் செய்யும் பொழுது உருவமுடைய உயிரினங்கள் எவ்வளவு உரிமையோடு கருமங்களைச் செய்யக் கடமைப்பட்டுள்ளன என்பதை உறுதியுடன் ஓர்ந்து கொள்ள வேண்டும்.

'அருச்சுன! எனக்கு மூன்று உலகங்களிலும் யாதொரு கடமையும் இல்லை. எல்லாச் செல்வங்களையும் பெற்றுள்ளேன்; எனினும் தொழிலை நான் உரிமையோடு புரிகின்றேன்” எனக் கண்ணன் விசயனிடம் கூறியுள்ளார்.

தனக்கு உரிய கருமத்தை விசயன் உறுதியாகச் செய்ய வேண்டும் என்று கருதி அவனுக்கு இவர் யுத்திகளை விரித்துக் காட்டிப் புத்தி போதித்து வரும் நிலை உய்த்துணரத் தக்கது.

கருமத்தைக் கைவிடின் அவன் தருமத்தை இழந்தவனாய்த் தாழ்ந்து படுகின்றான். அரசனாய்ப் பெரிய திருவினை அடைந்திருந்தாலும் அவனும் உரிய தொழிலைச் செய்து வர வேண்டும்; செய்யாமல் சோம்பியிருந்தால் தன் பதவியை இழந்து அவன் பாழ்பட நேர்கின்றான். செயல் விளைந்து வரும் அளவே பயன் வளர்ந்து வருகின்றது.

’திருவின் நிலையம்’ என்றது தொழில் இலட்சுமிக்கு உறைவிடம் என்னும் உண்மையை உணர்ந்து கொள்ள வந்தது. செல்வத்தை எல்லாரும் விரும்புகின்றனர்; ஆனால் அது விரும்பி ஒளிந்திருக்கும் இடத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளாமையால் கருதிய பலன் கைகூடாமல் வறிதே அலைந்து திரிகின்றனர்.

நல்ல தொழிலைக் கைக்கொண்டு அதனைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்துவரின் அவனிடம் எல்லாச் செல்வங்களும் கண்ணோடி வந்து சேர்கின்றன. கரும வீரன் தரும நீரனாய் வருதலால் அவனிடம் அரிய மகிமைகள் பெருகி நிறைகின்றன.

ஊக்கி உழைப்பவனுக்கே தெய்வம் பாக்கியங்களைக் கொடுத்து எவ்வழியும் செவ்வையாகப் பாராட்டி வருகின்றது.

“His hidden meaning lies in our endeavours; Our valours are our best Gods.” [Bonduca]

கடவுள் கருணை நம்முடைய முயற்சிகளில் இருக்கிறது; நம் வினையாண்மைகளே நமது மேலான தெய்வங்களாம்' என்னும் இது இங்கே அறியவுரியது. (Fletcher) பிளெச்சர் என்ற மேல் நாட்டுக் கவிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். இதனால் மனிதனுடைய உறுதி ஊக்கங்களையும் தொழில் முயற்சிகளையும் குறித்து அவர் கருதியுள்ள உண்மை தெரியலாகும்.

திருவின் நிலையமாய், தெய்வத்தின் உருவமாய்த் தொழில் மருவியுள்ளது: அதனை உரிமையோடு தழுவி உயர் நலம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-19, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே