நூலறிவு தந்தருளும் மெய்ப்புலவர் முந்தருள நின்றார் முனைந்து - புலவர் நிலை, தருமதீபிகை 221

நேரிசை வெண்பா

ஞாலமெலாம் நீதிநலம் நன்கறிந்து நல்லோராய்ச்
சீலங்,கைக் கொண்டு சிறந்துய்ய - நூலறிவு
தந்தருளும் மெய்ப்புலவர் சந்ததமும் தெய்வநிலை
முந்தருள நின்றார் முனைந்து. 221

புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீதி நெறிகளை உலகம் எல்லாம் உணர்ந்து தெளிந்து உயர்ந்து உய்ய அருள் புரிகின்ற சிறந்த புலவர்கள் தெய்வத் தன்மையுடையராய் என்றும் விளங்கி நிற்கின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உலகம் புலவரால் ஒளி பெறுகின்றமையை உணர்த்துகின்றது. முந்து - தலைமையாக.

பிறந்த மனிதஇனம் சிறந்த அறிவு நலனையடைந்து உயர்ந்து கொள்ளுதல் கல்வியினாலேயாம். அந்தப் புனிதக் கலை இலையேல் மனிதன் இருகால் விலங்கு என இழிந்து போக நேரும். அங்ஙனம் இழிவு நேராமல் கலை அமுதை உலகினுக்கு உதவி உயர்வு புரிந்து அருளுகின்றவர் புலவர்களே! அப் புண்ணிய சீலர்களுடைய கண்ணிய நிலைமையும் தண்ணிய நீர்மையும் நுண்ணிய நிலையின; மண்ணியல்பால் மயங்கி மறந்திருப்பினும் எண்ணி மகிழ வுரியன.

சிறந்த எண்ணங்களால் உலகம் உயர்ந்து வருகின்றது. அந்த எண்ணங்கள் நூல் வடிவங்களாய்ப் பரந்திருக்கின்றன. மேலான அந்நூல்கள் புலவர்களிடமிருந்து விளைந்து வருகின்றன. ஆகவே அவர் சீவ கோடிகளுக்குச் செய்துவரும் ஆதரவும் அருளும் அறியலாகும்.

'ஞாலமெல்லாம் உய்ய நூலறிவு தந்தருளும் மெய்ப்புலவர்' என்றது அவரது பான்மை மேன்மைகளைச் சிந்தனை செய்ய வந்தது.

எஞ்ஞான்றும் மெய்ஞ்ஞான ஒளிகளைப் பரப்பி அஞ்ஞான இருள்களை அகற்றி அருளுதலால் அதிசயமான தெய்வத் தேசுடன் அவர் சிறந்து திகழ்கின்றார்.

உருவில் மனிதராயினும் உணர்வு நலங்களில் திவ்விய நிலையினராய் யாண்டும் அவர் நிலவி நிற்கின்றனர்.

Poets are the hierophants of an unapprehended inspiration. - Shelley

’கவிஞர் தெய்வத்தன்மை வாய்ந்த திவ்விய போதகர்’ என மேல் நாட்டாரும் பாராட்டி வருகின்றனர்.

மொழி விளக்கு ஏற்றி உணர்வொளி உதவி உயிர்கட்கு இதம்புரிந்தருள்கின்ற இந்த உபகாரிகள் ஞானமணங் கமழ்ந்து வானமழை போல் என்.றும் மருவியுள்ளமையால் ’சந்ததமும் தெய்வநிலை முந்தருள நின்றார்’ என இங்கே வந்தனை செய்ய வந்தார். சந்ததம் - எப்பொழுதும்.

தாம் பிறந்த இடத்தேயிருந்து ஒரு நாள் வரைந்து வெளி விட்ட எண்ணங்கள் உலகம் முழுவதும் பரந்து ஊழியம் கடந்து உறுதி நலம் பயந்து ஒளிவீசி உலாவுகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-19, 9:10 pm)
பார்வை : 18

மேலே