கருமவுலகில் கருமம் புரிந்தார் இருமை நலனும் பெற்று மகிழ்வார் – கரும நலன், தருமதீபிகை 231

நேரிசை வெண்பா

கரும வுலகில் கருமம் புரிந்தார்
இருமை நலனும் இனிதாய் - உரிமையுடன்
பெற்று மகிழ்வார் பிறழின் பிழைமலிந்(து)
இற்று விழுவார் இழிந்து. 231

– கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நாம் வாழும் பூமியில் கருமங்களைச் செம்மையாகச் செய்தவர் இம்மை, மறுமை என்னும் இருமை நலன்களும் எய்தி இன்பம் உறுவார்; செய்யாதவர் இழிந்து படுவார்; இவ்வுண்மையை ஊன்றி உணர்ந்து தொழில் புரிந்து உயர்க எனப்படுகிறது. இப்பாடல் கருமத்தின் பெருமை கூறுகின்றது.

கைத்தொழில், உழவு, வாணிகம் முதலிய செயல் வகைகள் எல்லாம் கருமம் என வந்தன. கருவி கரணங்களால் கருதிச் செய்வது என்னும் காரண நிலையால் அதன் பூரண உருவம் புலனாம். காரியங்களின் சீரிய நலனை அது காட்டியுள்ளது.

புண்ணியம் புரிந்தோர் எண்ணியபடியே யாதொரு உழைப்புமின்றி இனிய இன்ப நலங்களை அனுபவிக்கும் தலத்திற்குப் போக பூமி என்று பெயர். கருமங்களைச் செய்த நல்ல இனங்கள் குழுமியுள்ளமையான் அது சுவர்க்கம் எனப்பட்டது. சுவர்க்கம் என்னும் சொல்லுக்கு நல்ல வருக்கங்கள் கூடியிருப்பது என்பது பொருள். தரும நிலையமான அதன் எதிர் இது கரும நிலையமாயது.

நாளும் முயன்று தொழில் புரிந்து தம் வாழ்நாளை மனிதர் இனிது கழிக்கும் இயல்பினை உடைமையால் இந்நிலம் கரும பூமி என வந்தது.

முன் செய்த கரும பலன்களை உயிரினங்கள் அனுபவிக்க வந்துள்ள இடமாதலால் இது கருமபூமி என நேர்ந்தது என வேறு பொருளும் கூறுவராயினும் அதனினும் இதுவே மிகுதியும் தகுதியுடையது. உண்மையாகவும் அமைந்தது.

கருமம் செய்து வாழ்வதே இப்பூமியின் தருமமாகும்.

உழவு, தொழிலே, வரைவு, வாணிபம்,
வித்தை, சிற்பமென்று இத்திறத்து அறுதொழில்
கற்கும் நடையது கரும பூமி. - திவாகரம்

ஆதி திவாகரர் இவ்வாறு இலக்கணம் விதித்துள்ளமையால் நம் முன்னோர் இந்நிலத்தைக் குறித்தும் கரும நலங்களைப் பற்றியும் கருதி வந்துள்ள உண்மைகள் தெரிய நின்றன. இந்த மனிதவுலகம் தொழிலாலேயே எழில் பெற்றுள்ளது என்பது இதனால் இனிது புலனாம்.

ஆடை செய்தல், அணி அமைத்தல், ஒவியம் வரைதல், சிற்பம் புரிதல், கலை கற்பித்தல் முதலாகப் பல தொழில்கள் உளவாயினும் அவற்றை ஆறு வகையுள் அடக்கி மேலோர் சீர்மை செய்துள்ளனர்.

கருமம் செய்தலே தருமமாக மருவி வந்துள்ள நாம், தொழில் செய்யாமல் சோம்பியிருந்தால் மனம் தீய வழிகளில் செல்லும்; அதனால் பழியும் வறுமையும் பாவமும் வரும்; ஆதலால், இருமையும் இலனாய் மனிதன் இழிந்து பட நேர்கின்றான். அந்த இழிவு யாதும் நேராமல், வந்த மரபும் வழியும் தெரிந்து தொழில் புரிந்து உயர்க என கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.

கருமங்களையும் தருமங்களையும் செய்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை எய்தியிருத்தலை இருமை நலன் என்றது.

அறிவு நலம் கனிந்த அருமைப் பிறவியை அடைந்து வந்துள்ள நீ உரிமையான கருமங்களை உறுதியுடன் செய்து இருமை நலங்களையும் மருவி மகிழ வேண்டும்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய(து இல். 1021 குடிசெயல்வகை

கருமம் செய்வதைக் கைவிடேன் என்னும் உறுதியுடைமை போல் மனிதனுக்குப் பெருமையுடையது வேறு இல்லை எனச் சொல்லியுள்ள இதன் உள்ள நிலையை ஊன்றி உணர்ந்து கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-19, 9:12 pm)
பார்வை : 20

மேலே