மனிதன் தான் செய்யும் தொழிலளவே சீர்மை பெறும் - தொழில், தருமதீபிகை 470

நேரிசை வெண்பா

மனித உலகம் மதிப்புறுவ(து) எல்லாம்
இனிய தொழிலின் இயல்பால் - மனிதன்தான்
செய்யும் தொழிலளவே சீர்மை; மழைமுகில்நீர்
பெய்யும் அளவே பெறும். 470

- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனித உலகம் மதிப்பாய் மாண்புறுவதெல்லாம் இனிய தொழிலின் இயல்பினாலேயாம், மழை பெய்யும் மேகங்கள் மேன்மையுறுகின்றன; அவ்வாறே தான் செய்யும் தொழிலின் அளவே எவனும் சீர்மை பெறுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கடவுளும் ஒரு தொழிலாளியாய் நின்று ஒழியாமல் வேலை செய்து வருகிறார், மனிதன் அதனைச் செய்த போதுதான் புனிதமுடையனாய் இனிய பயனை அடைகின்றான். செய்யாது நின்றால், வையம் அவனை வைய நேர்கின்றது; தெய்வ கோபமும் சேர்கின்றது. வெய்ய துயரங்கள் விளைந்து விடுகின்றன.

உண்ணுகின்ற எவனும் உழைக்க வேண்டும் என்பது இயற்கை நியமம். இந்த விதியை மீறி உண்டு வருகின்றவன் முடிவில் தரும தேவதை முன்னிலையில் உறுதியாகக் தண்டனைக்கு வருகின்றான். உறுவதை உணர்ந்து உயிர் வாழ்வு புரிக.

நாளும் நாம் உண்ணுகின்றோம்; அவ்வுணவு எங்கிருந்து வரும்? எப்படிக் கிடைக்கும்? எவ்வாறு பெறுகின்றோம்? இவ்வாறு ஒவ்வொருவரும் சிறிது உசாவ நேர்ந்தால் உழைக்க வேண்டிய கடமையையும் உரிமையையும் உணர்ந்து கொள்வர்.

நேரிசை வெண்பா

உழைக்கும் ஒருவனே உண்ண உரியன்;
அழைக்கும் அவனை அறமும்; - பிழைக்கும்
வழிதெரிந்து வாழ்வதே வாழ்வாம்;. வழுவின்
பழிவிரிந்து பாபம் படும்.

இதனை விழி திறந்து நோக்கிப் பொருளமைதிகளை உரிமையோடு உணர்ந்து கொள்ள வேண்டும். உழையாமல் உண்பது பழியாய் வருதலால் அவ்வழியில் இழிவது அழிவாகின்றது. தன் கடமையை உணர்ந்து செய்கின்ற மனிதன் புனிதனாய் உயர்ந்து கொள்கின்றான், உணராமல் மடிந்திருப்பவன் பழியனாயிழிந்து கழிகின்றான். செயல்கள் ஒழியின் மயல்கள் விளைகின்றன.

கண்கள் காண்கின்றன; காதுகள் கேட்கின்றன; கால்கள் நடக்கின்றன; கைகள் வேலை செய்கின்றன. தத்தமக்குரிய தொழில்களை இவ்வாறு செய்து வந்தபோதுதான் உறுப்புக்கள் சிறப்பும் சீர்மையும் தெளிவும் தேசும் பெறுகின்றன. செய்யாது நின்றால் குருடு, செவிடு, நொண்டி, முடம் என அவை இழிந்து படுகின்றன.

தனக்குரிய கடமையைக் கருதிச் செய்த அளவுதான் மனிதன் மதிப்பும் மாண்பும் பெறுகின்றான். செய்யாது ஒழியின் சீர்மை குலைந்து போகின்றான்.

பல கருவிகளும் உரிமையாகத் தொழில் செய்தபோதுதான் ஒரு எந்திரசாலை அரிய பொருள்களை அற்புதமாக விளைத்து அதிசய மகிமையோடு துதி செய்யப் பெறுகின்றது. அவ்வாறே மக்களும் தத்தம் கடமையை உணர்ந்து ஒக்க நின்று தொழில் செய்துவரின் உலகம் உயர் வளங்கள் நிறைந்து ஒளி மிகுந்து விளங்கும்.

பாட்டாளி மக்களைக் கண்ட போதுதான் தன் பிள்ளைகள் என்று பூமிதேவி உள்ளம் உவந்து கொள்ளுகின்றாள்.

தச்சன் மரவேலை செய்கிறான், கொல்லன் இரும்பு வேலை புரிகின்றான், சிற்பி கல்வேலை செய்கின்றான், கன்னான் பாத்திரங்களை வார்க்கின்றான், சேணிகன் ஆடைகளை நெய்கின்றான், உழவன் உழுது பயிரிடுகின்றான் இன்னவாறு தொழிலாளர்கள் யாண்டும் உரிமையோடு ஊக்கி உழைத்து வருதலினாலே தான் இவ்வுலகம் பெருமையோடு செழித்து வருகின்றது.

உழைப்புகள் உலகை உயிர்ப்பித்து வருகின்றன. தனக்கும், பிறர்க்கும் பயன்படும்படி தொழில்கள் தோய்ந்து வருதலால் அவை மனிதனுக்கு எவ்வழியும் இசையும், இன்பமும் ஈந்து வருகின்றன. சேவை, பணி, தொழில், தொண்டு என்பன பல பண்பாடுகளையுடையன. பயனுடைய செயல் மனிதனை சுயனுடையனாக்கி வியனுறச் செய்கின்றது.

மேகம் மழை பெய்வதால் மேன்மையுறுகின்றது. மனிதன் தொழில் செய்வதால் மகிமையுறுகின்றான். தொழில் செய்யாதவன் மழை பெய்யாத வறண்ட மேகம் போல் மதிப்பிழந்து போகின்றான். உலகம் நலமுற உதவி வருதல் கருதி தொழிலாளியை மழை முகிலோடு ஒப்ப வைத்தது.

மேகத்தின் நீர்மை

4. மாரி வழங்குதல் மாறாமே கைம்மாறு
காரிய மென்று கருதாமே – பாரிற்

5. துளிக்கின்ற தண்ணந் துளியமுத நல்கி
யளிக்கின்ற கொண் மூவரசே – களிக்கின்ற

6. மேலுலக மேறி விரிஞ்சனாமம் படைத்து
நாலுதிசை முகமும் நண்ணுதலால் –மாலுமாய்

7. நீல நிறமாகி நிறைகமலக் கண்ணாகி
கோல வளையாழி கொள்கையால் — சூலம்

8. விரவிய பாணியால் மின்னையிடந் தாங்கி
அரவம் அணியும் அழகால் — வரமளிக்கும்

9. எத்தே வருக்கும் இறைவராய் மேலாய
முத்தே வருநிகரா மூர்த்தியே! – மைத்தகன்ற

10 வானத்து ளேபிறந்து வானத்துளே தவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே – வானத்து

11. வேலைவாய் நீரருந்தி வெற்பில ரசிருந்து
சோலைவாய்க் கண்படுக்குந் தோன்றலே – ஞாலமிசைத்

12 தானமும் மெய்யுந் தருமமுங் கல்வியும்
மானமுந் தானமும் மாதவமும் – நானக்

13 கருங்கொண்டை மங்கையர்தங் கற்புநிலை நிற்ப(து)
அருங்கொண் டலேயுனைக் கொண்டன்றோ – நெருங்குமுவர்

14.ஆழிநீர் துய்ய அமுதநீர் ஆனதுவும்
வாழிநீ யுண்ட வளமன்றோ – தாழுமடி

15 ஆவுஞ் சிந்தாமணியும் அம்புயமுஞ் சங்கமுங்
காவும் பணியவுயர் கார்வேந்தே! - திருநறையூர் நம்பி மேகவிடுதூது

மேகத்தின் பான்மை மேன்மைகளைக் குறித்து வந்திருக்கும் இந்தப் பாசுரம் இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது. பல வகையிலும் பயன்பாடுடையதாய் உலகம் நலமுற உதவி வருதலால் மழை முகிலை விழுமிய அமுதம் என யாவரும் போற்றி வருகின்றனர். இனிய நீர்மைகள் எங்கும் இசை பெறுகின்றன.

உரிய தொழிலைச் செய்து வருகின்றவன் உலகிற்கு இனிய நீரனாய் இசைதலால், நீர் பொழியும் புயலோடு ஈண்டு நேர் எண்ண நேர்ந்தான். கருமம் மனிதனைத் தருமவான் ஆக்கிக் கதிகாணச் செய்கின்றது. கடமையை எவ்வழியும் கருதிச் செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-19, 9:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49
மேலே