கைகால்களால் உழைத்து உருவ நலனை உலகடையச் செய் - கரும நலன், தருமதீபிகை 232

நேரிசை வெண்பா

உற்றகை கால்கள் உழைக்கவே பெற்றுள்ளோம்
மற்றவற்றை மாட்சியுறச் செய்து - பெற்ற
உருவ நலனை உலகடையச் செய்யின்
திருவடைந்து நிற்கும் செறிந்து. 232

– கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதனுடைய கைகளும் கால்களும் உழைக்கவே தோன்றியுள்ளன; அவற்றை நன்கு பயன்படுத்தி நீ பிறந்த பலனை உலகு அடையச் செய்க; அங்ஙனம் செய்யின் திருவும் சீரும் உன்பால் பெருகி வந்து இன்பம் தரும்.

நாம் பிறந்துள்ள இந்நிலத்தின் நிலை உழைத்து வாழும் தகையது என்பது முன்பு உணர்த்தப்பட்டது; நம் உறுப்புக்களும் அவ்வுழைப்பிற்கே உரியன என்பதை இஃது உணர்த்துகின்றது.

மனிதனது அவயவ அமைப்பு தொழில் செய்ய வந்தது என்பதைத் துலங்கி நிற்கின்றது. அவற்றை இனிது பயன்படுத்தின், எய்திய பிறவியை உய்தி பெறச் செய்ததாம்.

உற்ற என்றது பெற்ற வகை உணர. எல்லா வேலைகளையும் செய்தருளும் சீர்மை கருதி கையை முதலில் குறித்தது.

தக்க தொழில்களில் உறுப்புக்களை உபயோகித்து அவற்றை மிக்க மதிப்புடையனவாகச் செய்தலை மாட்சி உறச் செய்து என்றது. உற்ற கடமைகளைச் செய்த வழிதான் பெற்ற பிறவிகள் பெருமை அடைகின்றன. .

சும்மா கிடக்கும் இரும்பு துருப்பிடித்துக் தொலைதல் போல் வினை செய்யாத உறுப்பு வெறுப்புக்கு இடமாய் வீணே இழிந்துபடுகின்றது.

தொழில் செய்யாத கை பழி செய்யும்; பணி புரியாத கால் பாவம் புரியும் ' என்னும் பழ்மொழியால் வினையாட்சி இல் வழி விளையும் தீமைகள் தெளிவாகின்றன.

மடி மண்டியிருக்கும் சோம்பேறிகள் உலகிற்குக் கொடிய துயரப் பூண்டுகள் ஆகின்றனர். அவரை உள்ளினும் உள்ளம் எள்ளி வெறுக்கின்றது. காணினும் கடுத்து விடுக்கின்றது.

“The idle people we will put out of our thoughts: They are mere nuisances ” (Ruskin)

‘சோம்பேறிகளை நினைத்தாலும் நெஞ்சம் எள்ளுகின்றது; சன சமூகத்திற்கு அவர் ஒர் நோய்' என ரஸ்கின் என்னும் ஆங்கில ஆசிரியர் கூறியிருக்கிறார்.

மடியரைக் குடி கேடர் என எந்நாடும் அடியோடு வெறுத்து வருகின்றது. இந்த இளிவில் வீழ்ந்து இழிந்து தொலையாமல் தொழில் புரிந்து மதிப்பும் மாண்பும் அடைய வேண்டும்.

பெற்ற உருவ நலனை உலகு அடையச் செய் என்றது உற்ற பிறப்பின் அருமையும் அதன் உரிமையும் உணர வந்தது. உருவம் எடுத்த பயனை உலகிற்கு உதவியருள் என்பதாம்.

கை கால் முதலிய அவயவங்களுக்குக் கரும இந்திரியங்கள் என்று பெயர். இதனால் அவற்றின் செயல் இயல்புகள் தெளிவாம். உற்ற உறுப்புக்கள் தம் கடமையைச் செய்யின் அது உலக உயிர்களுக்கு உபகரித்த படியாம்.

நெறி முறையே தன் தொழில்களைச் செய்கின்ற மனிதன் கரும யோகி என்னும் பெருமையை அடைகின்றான். உலகத்தைத் துறந்தவரினும் அவன் சிறந்தவனாய் உயர்த்து நிற்கின்றான்.

உடலுறுப்புக்களால் உண்மையாகக் கருமம் செய்கின்றவன் எவனோ அவன் யாண்டும் உயர்ந்தவனாகின்றான்’ எனக் கண்ணன் அருச்சுனனை நோக்கிக் கூறியுள்ளதும் ஈண்டு எண்ணத் தக்கது.

மனத்தை ஒருமுகப் படுத்தி உழைக்கவே அது பலர்க்கும் பயனாய் விரிகின்றது; தனக்குப் பொருளும் அருளும் பெருகி வருகின்றன. அவ் வரவால் இருமையும் இன்பம் ஆகின்றது.

உழைப்பாளி கருவடைந்த பயனைக் கைக்கொண்டமையால் அவனிடம் திருவடைந்து நின்றது. கருமம் புரியும் தருமவானைப் பெருமகிழ்வுடன் விழைந்து திருமகள் பேரருள் புரிகின்றாள். செறிந்து நிற்கும் என்றது அத் திருவின் நிலைமை தெரிந்து கொள்ள வந்தது. செய்யவள் ஆதலால் செய்தொழிலாளிகளிடம் மெய்யருள் செய்து சீர்மையை உதவுகின்றாள்.

வினையாளன் செல்வச் சீமானாய்ச் சிறந்து எல்லா மேன்மைகளையும் எய்தி விளங்குவான் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-19, 6:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே