அபிப்பிராயசிந்தாமணி கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களது அபிப்பிராய சிந்தாமணியை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். (அபிப்பிராயம் சிந்தா மணி என முதலில் பாடபேதமாகப் பிரித்து விட்டேன். என்ன இவர் அபிப்பிராயம் சிந்த மாட்டாரா? சூரியனுக்கு மேலே கீழே வலது இடது பக்கமுள்ள விஷயங்களையெல்லாம் பற்றி அபிப்பிராயங்களைக் கொட்டித் தீர்ப்பாரே என வியந்தேன். பிறகு சரிசெய்து கொண்டுவிட்டேன்)



மச்சம் வைத்துக் கொண்டுவந்தால் எம்ஜீஆரையே அடையாளம் தெரியாதது போல் நகைச்சுவை என்று டேக் செய்யவில்லை என்றால் சீரியஸாக எடுத்துக் கொண்டு நம்பக்கூடியவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அதேபோல் சீரியஸாக எழுதுவதை நகைச்சுவையாகப் பார்ப்பதும் உண்டு. (தமிழ் எழுத்துரு பற்றிய உங்கள் கட்டுரையைச் சேர்க்கச் சொன்ன சைதன்யாவை நான் வழி மொழிகிறேன்).



‘இந்தப் புத்தகத்தை எடுத்ததும் கீழேயே வைக்க முடியவில்லை’ என்று இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல முடியாது. காரணம் புத்தகத்தைத் தூக்கவே முடியவில்லை. வழக்கமாகத் தலையணைகள் தருவீர்கள் . இது மெத்தை. ஆயினும் திறந்த புத்தகத்தை மூடமுடியவில்லை எனத் தாராளமாகச் சொல்லலாம் . அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.



சமூகம், தத்துவம், இலக்கியம், அறிவியல், அரசியல் என எல்லாத்தளங்களையும் கலாய்த்துத் தள்ளியிருக்கிறீர்கள். நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி, நித்யசைதன்ய யதி என்று யாரையும் விட்டுவிடவில்லை. தலையணைகளாக எழுதிக் குவிக்கும் நீலமேகன் உட்பட. குறிப்பாகக் காசிரங்கா யானை பற்றிய இலக்கிய தத்துவ விவாதங்கள் தீராநதியில் தொடராக வந்த போதே பெரிதும் ரசித்துப் படித்தவை.



மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றினாலும் பல்வேறுதளங்களைப் பற்றிய உங்கள் கூர்ந்த அவதானிப்பும் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் சம்பவங்கள் பற்றி ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருப்பவர்களுக்கே நன்றாக விளங்கக் கூடும். அந்த வகையில் நுட்பமான மறுவாசிப்பு செய்ய வேண்டிய நூல் இது. (சத்தியமாக இதை நகைச்சுவையாகச் சொல்லவில்லை)



பலசமயங்களில் உண்மையை அப்படியே எழுதினால் நகைச்சுவையாக மாறுகிறது என்று அசோகமித்திரன் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை எனப் புரிகிறது.



ஈகோவை ஒழிக்கப் பலவழிகள் உண்டு. சிக்மண்ட் ஃப்ராய்ட் போல் சோஃபாவில் படுக்க வைத்தும் ஒழிக்கலாம். இது போன்ற நல்ல நகைச்சுவைக் கிண்டல்களைப் படித்துச் சிரிப்பதும் ஒரு சிறந்த வழி. இருப்பினும் சம்பந்தப் பட்டவர்களில் சிலர் ஆட்டோவில் பார்வதிபுரம் வராமல் இருக்கப் பகவதியம்மன் துணை புரிய வேண்டிக் கொள்கிறேன்.



தமிழுக்குக் கிடைத்த அரிய நகைச்சுவைப் பொக்கிஷம் உங்களது நூல்.



வாழ்த்துக்கள்.



மிக்க அன்புடன்



டாக்டர் ராமானுஜம்
திருநெல்வேலி





அன்புள்ள ஜெ



அபிப்பிராயசிந்தாமணியை வைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன். உண்மையில் அதிலுள்ள கட்டுரைகளை முன்னாடியே வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக வாசிக்கும்போது வேறு ஒரு உணர்வு. அதில் எதை நக்கலடித்திருக்கிறீர்கள் என்பது இப்போது ஒரு இரண்டுவருடங்களாக நல்ல வாசிப்பு ஆரம்பமானபிறகுதான் தெரிகிறது. அதன்பின்னர்தான் சிரிப்பு வருகிறது. அது வழக்கமான வேடிக்கைகளை ரசிப்பவர்களுக்கு உரியது அல்ல. நீங்கள் வேதாந்தம் விஷிஷ்டாத்வைதம் எல்லாம் கிண்டலடிப்பதை வாசிக்க ஒரு காலம் தேவைப்படுகிறது. நான் மூன்றுமாதமாக வைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்



ஆனந்த் பாஸ்கர்
மே 14, 2017
-----------------

எழுதியவர் : (16-May-19, 8:08 pm)
பார்வை : 12

மேலே