ஊட்டி சந்திப்பு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,



ஊட்டி முகாமில் பேசாத சில வாசகர்களில் நானும் ஒருவன். பல வருடங்களாக கூட்டங்களில் பேசாமல்போனதால், சில வருடங்களாக பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பதால், ஒரு மெளனம் என்மேல் கவிந்திருக்கிறதென்று உணர்ந்தேன். அங்கே நண்பர்கள் பலருடன் பேசுகையில் இருந்த இயல்பு, கூட்டத்தில் விவாதம் நடக்கும்பொழுது மறைவது எனக்கே விந்தையாக இருந்தது. 2-3 அரங்குகளில் திட்டவட்டமான கருத்தும் கேள்வியும் இருந்தும் கையை தூக்கி பேசமுடியவில்லை. இதுவரையில் நான் ஒரு தனியன் என்று எனக்கே காரணத்தை சொல்லிக்கொண்டு இதை தாண்டிவந்திருந்தேன். one to many-ஐ விட one to one தான் எனக்கான உரையாடல் format என்று சுதாரித்துக்கொண்டிருந்தேன். ஆனால், முகாமின் முடிவில், குருகுலத்தை விட்டு வெளியே நடந்து செல்லும்போது ஒரு கனமான ஏக்கத்தை உணர்ந்தேன். பேசியிருக்கலாமே என்று தோன்றியது. இது இயல்பல்ல, ஒரு உளச்சிக்கல் தான், என்று தோன்றியது. அந்த சுயஒப்புதலே ஒரு விடுதலை உணர்வை அளிக்கிறது. இந்த மெளனத்தை களைந்து வெளிவரும் பாதையை வகுத்துத்தரும் என்றும் தோன்றுகிறது.


ராமகிருஷ்ணன். நித்யாவின் மாணவர்

முகாமில் நடந்த விவாதங்களை பற்றி –



கம்பராமயணம் அரங்குகள் தான் என்னை பொருத்த வரையில் highlight. அவை தான் எனக்கு கம்பராமயணத்தின் அறிமுக வகுப்புகள். ஒவ்வொரு பாட்டின் பின்னும் நடந்த விவாதம் பாட்டின் பிரம்மிக்கவைக்கும் கவித்துவ வீச்சை காட்டியது.



சிறுகதை அரங்குகள் – அழகியல் சார்ந்த விவாதங்கள் மற்றும் கதைகளின் emotionality பற்றிய விவாதங்கள் மிகவும் கூர்மையாக இருந்தன. ஒரு பக்கம் என் வாசிப்பை பற்றிய ஒரு நல்லெண்ணம் கிட்டியது, மறுபக்கம், மேலும் செல்ல வேண்டிய வழியையும் கண்டடைய முடிந்தது.


காலை நடை செல்லும் இடம் [லவ்டேல் பள்ளி பின்புறச்சோலை]

உங்கள் லட்சியவாதமும், உங்கள் கனவுகளின் பிரம்மாண்டமும் தான் உங்களை வரையறை செய்கிறதென்று நினைக்கிறேன். வாழ்வில் லட்சியவாதத்தை நூலிழையால் பற்றியிருக்கும் என்போல் வாசகர்களை உங்களிடம் ஈர்ப்பதும் அதுவே. உங்கள் வாசகர்களிடமும், மற்ற படைப்பாளிகளிடமும் நீங்கள் அதையே கோருகிறீர்கள். அந்தச் சமரசமற்ற நோக்கு, ஒரு கூர்வாளைப்போல. எளிதில் கலையை சூழ்ந்துகொள்ளும் சராசரிகளுடன் அந்த வாள் போரிடும் பேரொலியே, உங்கள் விமரிசனங்களில் ஓங்கி ஒலிப்பது. முகாமிலிருந்த ஒவ்வொருவரையும் அந்தப் பேரோசை அறைகூவியது. அந்த அறைகூவலை எங்களால் முடிந்த வழிகளில் எதிர்கொள்வதே பற்றியிருக்கும் நூலிழையை வலுவாக்கும் வழி.


கடைசியாக, திரைபடைப்பாளியாக, எனக்கு நெருக்கமான் ஊடகம், காட்சிகள். முகாமின்போது எடுத்த படங்களில், எனக்கு பிடித்த சிலவற்றை இங்கு வலையேற்றியிருக்கிறேன். உங்கள் பார்வைக்காக



ஆன்புடன்,

விஜய் ரங்கநாதன்

எழுதியவர் : விஜய் ரங்கநாதன் (16-May-19, 8:56 pm)
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே