கவிஞர், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்

ஜனவரி 1 செவ்வாய்க்கிழமை

கவீனாம் ப்ரதிபா சக்ஷஹு சாஸ்த்ரம் சக்ஷுர் விபஸ்சிதாம்-ராமாயண மஞ்சரி

புலவர்களுக்கு கண்கள்-நெடுநோக்கு ; அறிவாளிக்குக் கண்கள் -அறிவு

ஜனவரி 2 புதன் கிழமை

காவ்யேஷு நாடகம் ரம்யம்,தத்ர சாகுந்தலம் மதம்- பழமொழி

கவிஞர்களின் படைப்புகளில் சிறந்தது நாடகம்தான், அதிலும் சிறந்தது சாகுந்தலமே (காளிதாஸன் எழுதியது).

ஜனவரி 3 வியாழக்கிழமை

கவீஸ்வராணாம் வசஸாம்வினோதைர் நந்தந்தி வித்யாவித்யோ ந சான்யே- கஹாவத்ரத்னாகரம்

கவிஞர்களின் சொற் சிலம்பத்தை அறிஞர்கள் மட்டுமே ரஸிக்க முடியும்; மற்றவர்களால் முடியாது

ஜனவரி 4 வெள்ளிக் கிழமை

கத்யம் கவீனாம் நிகாஷம் வதந்தி- பழமொழி

‘உரை நடையே படைப்பாளிகளின் உரைகல்’ என்று பகர்வர்

ஜனவரி 5 சனிக்கிழமை

மதி தர்ப்பணே கவீனாம் விஸ்வம் ப்ரதிஃபலதி- காவ்ய மீமாம்ஸா

கவிகளின் அறிவுக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிக்கிறது

(இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி)


ஜனவரி 6 ஞாயிற்றுக் கிழமை

நான்ருஷிஹி குருதே காவ்யம்- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

தொலை நோக்கு இல்லை என்றால் கவிதையும் இல்லை

ஜனவரி 7 திங்கட் கிழமை

கவயஹ கிம் ந பஸ்யந்தி –சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கவிகள் கண்களுக்கு புலப்படாததும் உண்டோ!

ஜனவரி 8 செவ்வாய்க்கிழமை

நாடகாந்தம் கவித்வம் – பழமொழி

ஒரு கவிஞனின் திறமை, நாடகத்தில் உச்சத்தைத் தொடுகிறது

ஜனவரி 9 புதன் கிழமை

கஸ்மை ந ரோசதேநவ்யா நவோதேவ கதாசுதா- கஹாவத்ரத்னாகரம்

புதிய சுவையான கதையும் புதுமனைவியும் யாருக்குத்தான் இன்பம் தராது?

ஜனவரி 10 வியாழக்கிழமை

வாதாதிஹா ஹி புருஷாஹா கவயோ பவந்தி – சூக்திமுக்தாவளி

புதிய எண்ண அலைகளே கவிஞனை உருவாக்குகிறது

ஜனவரி 11 வெள்ளிக் கிழமை

வான் கலந்த மாணிக்க வாசக! நின்வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.-

இராமலிங்க சுவாமிகள்

ஜனவரி 12 சனிக்கிழமை

க வித்யா கவிதாம் விநா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கவிதை இல்லாமல் அறிவா?

ஜனவரி 13 ஞாயிற்றுக் கிழமை

சப்தாயந்தே ந கலு கவயஹ ஸன்னிதௌ துர்ஜனானாம்-ஹம்ஸ ஸந்தேச

தீயோர் ஆட்சியில் புலவர்கள் எழுப்பும் குரல் வெற்று வேட்டு அல்ல


ஜனவரி 14 திங்கட் கிழமை

கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:

“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”
(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)

ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.

ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை“-பாரதி

ஜனவரி 16 புதன் கிழமை

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை- பாரதி

ஜனவரி 17 வியாழக்கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்- பாரதி

ஜனவரி 18 வெள்ளிக் கிழமை

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்- குறள் 394

ஓரிடத்தில் சந்தித்து, மனமகிழ்ச்சி தருமாறு உரையாடி, இப்படி மீண்டும் என்று சந்திப்போம் என்று ஏங்குவது புலவரின் செயல் ஆகும் (புலவர்= கற்றோர்)

ஜனவரி 19 சனிக்கிழமை

கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவி கொள்ளார்க்கு அவகீர்த்தி- தமிழ்ப்பழமொழி


ஜனவரி 20 ஞாயிற்றுக் கிழமை

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்– தமிழ்ப்பழமொழி

ஜனவரி 21 திங்கட் கிழமை

கவி கொண்டார்க்கும் கீர்த்தி, கலைப்பார்க்கும் கீர்த்தியா?

ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை

கவீந்திராணாம் கஜேந்திராணாம்- பழமொழி (கவிகள், வழி நடத்திச் செல்லும் தலைவர்கள்)

ஜனவரி 23 புதன் கிழமை

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.- கவிமணி தேசிக விநாயகம்

ஜனவரி 24 வியாழக்கிழமை

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! – அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! – கவி

துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !

கல்லும் கனிந்துகனி யாகுமே,அடா ! – பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!- கவிமணி தேசிக விநாயகம்


ஜனவரி 25 வெள்ளிக் கிழமை

“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு

தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு

வையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ”

(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை ((கம்பன் பெயரை இணைத்து)) தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்)

ஜனவரி 26 சனிக்கிழமை

வாங்க அரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீம் கவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் – வால்மீகி பற்றி கம்பன் சொன்னது; பால காண்டம், கம்பராமாயணம்

ஜனவரி 27 ஞாயிற்றுக் கிழமை

புலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்

‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று

ஜனவரி 28 திங்கட் கிழமை

முது மொழி நீரா, புலன் நா உழவர்

புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68

அறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள் பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே!

ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

புலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்


ஜனவரி 30 புதன் கிழமை

கவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)

‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).

ஜனவரி 31 வியாழக்கிழமை

‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235




–SUBHAM–

Share this:
TwitterFacebookLinkedInEmail

எழுதியவர் : லண்டன் ஸ்வாமிநாதன் (17-May-19, 7:54 pm)
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே