நடுயிரவில் நாகத்துடன் நர்த்தனம்

அனுபவம் ஆயிரம்......
நடுயிரவில் நாகத்துடன் நர்த்தனம்........

அன்று வழக்கம்போல் முரசு சேனலில் பழைய பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தேன் ...... துணைவர் மருத்துவப்பணி முடிந்து வர வெகுநேரமாகும் .... அதுவரை என் தனிமையை போக்கும் ஒரே பொழுபோக்கு இந்த முரசுச் சேனல் மட்டும் தான்.... (அப்போது இந்த எழுத்துலகத்திற்குள் நான் பிரவேசிக்கவே இல்லை) எப்போதும் துள்ளலுடன் பாடும் L.R.ஈஸ்வரி அம்மாவின் குரலில் மிக இதமானப் பாடல் “காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்...” பாட்டோடு ஒன்றி இழைந்திருக்க..... வீட்டின் அழைப்பொலி கணீர் கணீர் என்று அடித்து...please open the door
Please open the door என்று எனக்கு அறைகூவலிட்டது..... பாடலை பாதியில் விட்டுச் செல்ல மனமில்லை.... இருந்தாலும் கீழிருந்து என்னை அழைப்பது துணைவர் அல்லவா.... வேகமாக ஓடி பலகணி வழியாக அழைப்புமணி அடித்தது அவர்தானா என்று உறுதிசெய்து விட்டு பிரதான வாசலைத் திறக்க வேகமாக படியில் இறங்கினேன்....

வரிசையாக மூன்று வாசல்களைத் திறக்க வேண்டும்.... இரண்டு வாயில் பூட்டையும் திறந்துவிட்டு பிரதான வாயில் பூட்டை திறக்க வேகமாக நகர்ந்தபோது.... உள் பகுதியில் உள்ள தரையில் ஏதோ ஒன்று கிடப்பதை உணர்ந்தேன்... நான் உற்று கவனிக்கவில்லை.... என் விழி ஓரத்தில் இலேசான பிம்பம் விழுந்தது.... சுருண்டுக் கிடக்கும் பழைய துணியாக இருக்கும் என்று என் மூளை சொல்லியதால்... அதை பொருட்படுத்தாமல் பிரதான வாசல் பூட்டைத் வேகமாகத் திறந்தேன்.... தெருவிளக்கு எரியாததால் கணவர் வெகு நேரம் இருளில் நிற்க வேண்டி வருமே என்பதால்தான் அவ்வளவு அவசரம் காட்டினேன்... வழக்கம்போல் கீழ் வீட்டில் வாடகைக்கு இருக்கும் குடும்பத்துப் பெரியவர் வெளியில் வந்து என் கணவருக்கு இரவு வணக்கம் சொல்ல... அவர்கள் வீட்டு குழந்தைகளும் வெளியே வந்தன...
சரி..... அவர் வாகனத்தை உள்ளே ஏற்றுவதற்குள் கீழே கிடந்தது என்ன என்ற ஆவலில் பார்க்க அதன் அருகில் சென்றேன்.... பார்த்து மறுகனம் அதிர்ந்துப் போனேன்.... அது மூன்றடி நீளமுள்ள நாகப்பாம்பு..... உடம்பே பயத்தில் உறைந்துவிட்டது.... ஐயோ! பாம்பு என்று அலறிக் கொண்டே பிரதான வாசலை நோக்கி ஓடி .... வாசலில் நின்ற என் கணவரை வெளியே தள்ளி கேட்டை மூடி விட்டேன்.... அதற்குள் கீழ்வீட்டார் அவர்கள் வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டு.... சன்னல் வழியாக என்னை எட்டிப் பார்த்தனர்.... கணவர் வெளியிலிருந்து அமுதா... அமுதா என்று அலற....கீழ்வீட்டுக் கூட்டம் இந்தியில் பாம்பு பாம்பு என்று கதற.... நான் மிகவும் பதறி பாம்பை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன்..... கீழ்வீட்டார் நீட்டு மெல்லிய கம்பு ஒன்றை சன்னல் வழியாக தூக்கி எறிந்தனர்.... ஆனால் அதை வைத்துக் கொசுவைக்கூட அடிக்க முடியாது.....அதற்குள் இங்கு நடக்கும் கபளீகரத்தில் லேசாக பாம்பு இடம்பெயரத் தொடங்கியது..... எனக்கு அச்சம் உச்சத்தில்.... பாம்பென்றால் படையே நடுங்கும்....எனக்குத் தொடை நடுங்காதா....?

இருந்தாலும் இப்போது இந்தப் பாம்பை அடித்துதானே ஆகவேண்டும்.... அது வெளியே ஓடினால்...வாசலில் என் கணவருக்கு ஆபத்து.... உள் வாசலில் ஓடி படிவழியே வீட்டிற்குள் சென்றுவிட்டால் ... என் மகன் உறங்கிக் கொண்டிருக்கிறான்... வீட்டினுள் எங்காவது பதுங்கிக் கொண்டால்.... இரவில் அதுவும்11மணிக்கு யாரை ஆபத்திற்கு அழைக்க முடியும்.... இத்தனை எண்ண ஓட்டமும் மனதில் மின்னலாய் ஓட.... மனதில் தைரியத்தை வரவழைத்தேன்.... உள் வாசலில் கிடந்த தேய்ந்துப்போன வாரியலை எடுத்துத் திருப்பிப் பிடித்தேன்.......இப்போதைக்கு அதுதான் கண்கண்ட ஆயுதம்.... பாம்பை ஓங்கி அடித்தேன்.... குறி தப்பியது... பாம்பு சட்டென பாய்ந்து உள் வாசலுக்குள் சென்று மாடிப்படியின் கீழ் பதுங்கிக் கொண்டது... நான் எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது..... ஆனால் அதற்குள் பத்திரமாக இருக்கும் எல்லோரும் மிக தைரியமாக எனக்கு.... அதைச் செய்.. இதைச் செய் என்று கட்டளையிட்டு எனக்கு பீதியை கிளப்பிக் கொண்டிருந்தனர்.....
பாம்பு பதுங்கிய இடத்தை அனுமானித்து ....அவர்கள் தூக்கி எறிந்த நீட்டுக் கொம்பை வைத்துக் குத்திக் குடைந்தேன்... என் அனுமானம் சரியே....குடைந்த வேகத்தில் வீரிட்டுப் பாய்ந்து பாம்பு என்னை நோக்கி வந்தது..... சட்டென என் காலணியோடு அதை ஓங்கி மித்தேன்.... அதற்கு லேசான அடி... ஆனால் ரப்பர் போல வழுக்கி விலகி ஓடி .....லேசாகப் படமெடுத்து தன் எதிர்ப்பைக் காட்டியது....ஆனால் நானோ ஏதோ வெறிபிடித்தவள் போல வாரியலைவைத்து அடியடியென அடித்தேன்..... பாம்பு குறுக்கும் நெடுக்குமாக ஓட ...... நானும் அதனுடன் நர்த்தனம் ஆட.....அது கடைசியில் சற்று அசைவு குறைந்து லேசாக ஊர்ந்தது..... அதற்கு வேகமாக நகர இயலவில்லை.... ஆனாலும் அச்சத்தில் அதை மீண்டும் மீண்டும் அடித்தேன்.... அசைவற்றுப் போனது.... அதன் பின்னர் வாசலை திறந்துவிட்டேன்.... என் கணவர் வேகமாக உள்ளே வந்தார் சிரித்துக் கொண்டே.....,நீ வீராதி வீரி... சூராதி சூரிதான்பா.... என்று நையாண்டி செய்தார்.... ஆமா... ஆமா.... பின்னே இருக்காதா.... நான் பிறந்த மண் நெல்லை அல்லவா....
நமக்கு ஒரு அவசரம் என்றால்.... மூளை உண்மையில் மின்னல் வேகத்தில் செயல்படுகிறது..... நம்மையும் அறியாமல் ஒரு துணிச்சல் உத்வேகம் உடலில் பிறக்கிறது........“தனக்குத் தனக்குன்னா
தாச்சலும் பதக்குக் கொள்ளும்” என்று அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி நினைவிற்கு வந்தது.....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (17-May-19, 8:15 pm)
பார்வை : 7
மேலே