மரபிலக்கியக் கவிதைகள்-

ஒருமொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த

குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்

கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்

கருமொழியிங் குனக்கில்லை மொழிக்கு மொழி ருசிக்கக்

கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங் கண்டனை மேல்

தருமொழி யிங்குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்

தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே.

-தாயுமானவர்.



பொருள்:

குருவின் உபதேச மொழி அல்லது மந்திரம் பற்பல சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும், ஆன்மீக சாதனைகளுக்கும் இடங் கொடுக்கும். அந்த உபதேசமொழியானது நம்முடைய சந்தேகங்களையெல்லாம் நீக்கி, மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயைகளை நிச்சயமாக ஒழிக்கும், ஒழிக்கும். ஆன்மீகத்தில் அந்த குருஉபதேசமே மலை உச்சியெனக் கொள்வாய். மற்ற வழிகளைக் கொண்டு ஆன்மீக சாதனையை முயல்வது ஒரு வரைமுறை இல்லாமல் சூதாடுவது போல விரயமானமுயற்சியே ஆகும்.

அந்த குருவின் உபதேசம் கிட்டிவிட்டால், உனக்கு மறு பிறவி இல்லை. தியானிக்கும் தோறும், விரிவடையுந்தோறும் கரும்பைப் போல ருசிக்கக் கூடிய அந்த உபதேசமந்திரத்துக்கு மேலாக வேதங்களும், மற்ற மந்திரங்களும் உனக்குத் தேவையில்லை. அனைத்தையும் விட உயர்வானதாகிய பரம்பொருளுடன் ஐக்கியமாகிஆனந்தமான நற்கதியை அடைந்திரு.



நயம் பாராட்டல்:



சொல்லழகும், சந்தமும், இசைத்தன்மையும் ஒருங்கே அமைந்துள்ள பாடல் இது.

”ஒரு மொழியே பலமொழிக்கும் இடங் கொடுக்கும்:”



ஒரு மொழி என்பது குருவின் உபதேசம். அந்த உபதேசம் எப்படி இருக்கும்? நேரான மந்திர உபதேசமாக இருக்கலாம். உத்தரவாக, திட்டாகக் கூட இருக்கலாம். மிகவும்நுணுக்கமான மறைவான சொற்களால் மிகப்பெரிய திறப்பை அருளியிருக்கலாம். நாராயண பட்டத்திரிக்கு துஞ்சத்து எழுத்தச்சன் கொடுத்தது போல. மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வார் கொடுத்தது போல.

’உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்தருட் பெறுவேனோ’ என்று ஏங்குகிறார் அருணகிரி நாதர். ”சும்மா இரு” என்கின்ற ஒரு குருவின் உத்தரவு எத்தனை எத்தனை நூல்களுக்கும், தத்துவ விசாரங்களுக்கும் வேராய் இருந்திருக்கிறது? ”அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும்”.

– மலம் என்றால் இங்கே பிறவிக்குறைகளான ஆணவ, கன்ம, மாயா மலங்கள். குரு அளித்த மந்திரத்தால் இவை களையப்பெறும். இரண்டு தடவை நிச்சயம் நிச்சயம் என்று அறுதியாக, உறுதியாகச் சொல்கிறார்.

குருமொழியே மலையிலக்கு – இங்கு மலையிலக்கு என்று metaphor பயன்படுத்தியிருக்கிறார். மலையிலக்கு சவால்கள் நிறைந்தது. சறுக்கல்கள் வரலாம்.தோற்கலாம். மரிக்கலாம். மலை உச்சி வெறுமையும், தனிமையும் நிறைந்ததே. குருவின் உபதேச மொழியை பெறும் முன்னும், பெற்ற பின்னும் மலை ஏறும் இடர்கள்அனைத்தும் உண்டு. ஏதோ லட்சத்தில் ஒருவர் மலை இலக்கை அடையலாம்.

“மற்றை மொழியெல்லாங் கோடின்றி வட்டாடல் கொள்வதொக்கும் கண்டாய்”- ஆனால், எது தவறான பாதையோ, எதில் சென்றால் இலக்கை அடையவே முடியாதோ,அதைத் தேர்தல் கூடாது. சூதாடுதலில் வெற்றியின் நிகழ்தகவு மிகவும் குறைவு. அதிலும் வரைமுறை இல்லாமல் சூதாடினால்? தோல்வியே மிஞ்சும்.

”கருமொழியிங் குனக்கில்லை” – மீண்டும் கருவாவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த ஞானத்தை அடையாமல், எந்த கேள்விகளுக்கு விடை அடையாமல், நம்வினைகள் நீங்காது மீண்டும் பிறக்க நேருமோ, அந்த நிலை நம்மை விட்டு அகன்று விடும். நம் இருத்தல் குறித்த கேள்விகள் அனைத்தும் அகன்ற ஒரு நிலை.

”மொழிக்கு மொழி ருசிக்கக் கரும்பனைய சொல்” அற்புதமான சொல்லாட்சி! எப்போது மொழிக்கு மொழி ருசிக்கும்? குருவின் நினைவும், அவரின் அருளும், அவரின்உபதேச மொழிகள் நம்மைக் கொண்டு சென்ற தொலைவும் நம் நினைவில் வரும் போது, நெக்குருகும் போது.

“கண்ணி நுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே” என்று உருகும் மதுர கவி ஆழ்வாரை நினைவு கொள்ள வைக்கிறது.

”உனைக் காட்டவுங் கண்டனை மேல் தரு மொழியிங்குனக்கில்லை” – அந்த உபதேச மொழியால், நீ உன்னைக் கண்டு விட்டாய்.

உன்னைக் காண்பது என்பது என்ன – குருவின் உபதேசமொழியைத் தியானித்து, அதை மெம்மேலும் விரித்து, மெய் ஞான அனுபவமாக்கி அனுபூதி அடைதல். தானே இறை நிலையை அடைதல், அதாவது ஜீவாத்மா பிரம்மத்துடன் இணைந்து கொண்ட நிலைதான் அநுபூதி நிலை. Self realization. மெய்யுணர்வு. அதற்கு மேல் ஒரு மந்திரத்துக்கும், துதிக்கும், உபதேசத்துக்கும், அவசியமில்லை. [தருமொழி என்பது தரப் பட்டது, யாராலும் இயற்றப்பட்டதல்ல, ஆகையால் வேதமென்றும் இங்கு பொருள் படும் என்றார் ஆசிரியர் ஜெயமோகன்]

”உன்னைவிட்டு நீங்காத் தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே”

தற்பரம் என்றால் தனக்குத்தானே அதீதமானது, மேலானது, பரம்பொருள்.

உதாரணம்: பாப நாசம் சிவன் இயற்றிய ’கற்பகமே கண் பாராய்’ என்ற பாடலில் வரும் ,”தத்வமஸ்யாதி ம பொற்பொது என்றால் பொன்னம்பலம் – சிதம்பரம். சித் என்றால் ஞானம். அம்பரம் என்றால் ஆகாயம், பெருவெளி. ஞானாகாசம். என்கிற ஒரு நிலை. சாயுஜ்ய பதவி, இரண்டறக் கலத்தல் என்று கொள்ளலாம்.ஹா வாக்ய தத்பர வஸ்துவும் நீ” என்ற வரி.

மொத்தமாக. ஸச்சிதானந்த்தை (ஸத் சித் ஆனந்தம்), பிரம்மத்தை அடைவதற்கு குரு வாக்கு தான் ஒரேவழி என்று ஆற்றுப்படுத்தும் ஒரு ஆசிரியனின் குரலாகவேஒலிக்கும் இந்தப் பாடல் எப்போது கவிதைத் தன்மையை அடைகிறது? ’கருமொழி’ என்ற சொல்லில் என்று எனக்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி நாம் மேலும் சிந்திக்கலாம்.



”நான்” –பிரமிள்
ஆரீன்றாள் என்னை?

பாரீன்று பாரிடத்தே

ஊரீன்று உயிர்க்குலத்தின்

வேரீன்று வெறும் வெளியில்

ஒன்றுமற்ற பாழ்நிறைத்து

உருளுகின்ற கோளமெலாம்

அன்று பெற்று விட்டவளென்

தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?

ஆடு(ம்) அரன் தீவிழியால்

மூடியெரித்துயிரறுத்த

காடு ஒத்துப் பேய்களன்றி

ஆருமற்ற சூனியமாய்

தளமற்ற பெருவெளியாய்

கூரையற்ற நிற்பது என்

இல்.

யாரோ நான்? “ஓ!ஓ!”

யாரோநான் என்றதற்கு

குரல்மண்டிப் போனதென்ன?

தேறாத சிந்தனையும்

மூளாது விட்டதென்ன?

மறந்த பதில் தேடியின்னும்

இருள் முனகும் பாதையிலே

பிறந்திறந்து ஓடுவதோ

நான்!



நயம் பாராட்டல்:



பிரமிளின் பிரசுரமான முதல் சில கவிதைகளுள் ஒன்று இது. மூன்று பாகங்களிலும் முதல் வரி கேள்வியாகவும், கடைசி வரி பதிலாகவும், நடுவில் உள்ளது அந்த பதிலைஅடையும் அல்லது அந்த பதிலைப் பெறும் விளக்கமாகவும் அமைக்கப் பட்டுள்ளது.

கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் ஒரு பொதுவான அர்த்தத்தில் அறியப்பட்டவை தான்.

ஆரீன்றாள் என்னை – தாய்.

வீடெதுவோ எந்தனுக்கு – இல்.

யாரோ நான் – நான்.

ஆனால் நடுவில் என்ன நடக்கிறது ? ஒரு மனிதனின் தனிமையையும், பிரபஞ்ச வெறுமையையும், இதன் பொருளற்ற வியர்த்தத்தையும் அறிந்த ஆன்மீக தரிசனமும்,மானுடப் பிரக்ஞையும் உள்ள ஒரு அதி மானுடனின் உச்ச கட்ட கவித்துவ தரிசனங்கள்.

கேட்பது யார்? ஒரு தனி மனிதனா அல்லது மொத்த உயிர்க்குலத்திற்கும் தன்னையே பிரதி நிதியாக அடையாளப் படுத்தும் ஒரு ஆன்மாவா? ஒரே உந்தில் கவிஞன் தன்பிரக்ஞையை விரித்து விஸ்வரூபம் எடுத்து எழுகின்றான். விராட் ஸ்வரூபமாய் நிற்கின்ற ஒரு உயிர் தன்னையும், சுற்றும் நோக்கித் தன்னைப் பெற்றவளானஉலகத்துக்கே தாயாகிய ஜகத் ஜனனியைத் தேடுகின்றது.

”ஆடு(ம்) அரன் தீவிழியால் மூடியெரித்துயிரறுத்த காடு ஒத்துப் பேய்களன்றி” ஊழிக்குப் பின் எல்லா நாசத்திலிருந்தும் பிழைத்து முதல் ஆன்மா எழுகின்றது. அதுபிரமாண்டத் தனிமையையும், வெட்ட வெளியையும் உணர்கிறது. கூரையற்ற தளமாகிய இந்தப் பூமியைப் பார்க்கின்றது. மனிதர்களே தென்படவில்லை. தீவினையால்பழைய ஞாபகங்கள் இருக்கின்றன. தாயையும், வீட்டையும் தேடிய அந்த உயிருக்குத் தான் யார் என்கிற ஆதாரமான கேள்வி எழுகிறது. முன்பு இதற்குப் பதில் தெரிந்ததாக ஒரு வாசனையும் (முன்பிறவித் தொடர் நினைவு) இருக்கிறது, அனால் எல்லா ஞானங்களும் கைவிட்டுப் போனதாக ஒரு பரிபவ நிலை. (’குரல்மண்டிப் போனதென்ன? தேறாத சிந்தனையும் மூளாதுவிட்டதென்ன?’)

”இருள் முனகும் பாதையிலே பிறந்திறந்து ஓடுவதோ நான்!” –

இருள் முனகும் பாதை என்பது என்ன? அற்புதமான அந்த படிமம் குறிப்பது மரணப் பாதையையும், கர்ப்பப் பிரவேசத்தையும் என்று கொண்டால் கவிதையின் கனம் மாறுகிறது அல்லவா?

எருவாய் கருவாய் தனிலே யுருவாய் இதுவே பயிராய் விளைவாகி

இவர் போயவராய் அவர் போயிவராய் இதுவே தொடர்பாய் வெறி போல

ஒரு தாய் பல தாய் பல கோடியதாய் உடனே அவமாய் அழியாதே –



அருணகிரி நாதரின் புலம்பலே போல் பிரமிளின் குரல் வெளிப்படுகிறது,



ஆரீன்றாள் என்னை?, வீடெதுவோ எந்தனுக்கு? யாரோ நான்? குரல்மண்டிப் போனதென்ன? தேறாத சிந்தனையும் மூளாது விட்டதென்ன?: இவை தான் கருமொழியென்கிறேன் நான். குரல் மண்டிப் போனது, தேறாத சிந்தனை மூளாது விட்டது, பதில் மறந்து தேடியலைதல் – இவையனைத்தும் கருமம் தொலையாமல் மீண்டும் சக்கரச் சுழற்சியில்சிக்கிய ஆத்மாவின் அழுகுரல் அல்லவா. இதைத்தான் தாயுமானவர் ”கருமொழி’யிங் குனக்கில்லை என்று சொல்கிறார் என்று படுகிறது.

ஏதோ காலாதீத வெளியில் தாயுமானவரும், பிரமிளும் சந்தித்து உரையாடினார்களோ? இருவரது கவிதைகளும் ஒன்றுக்கு ஒன்றின் விளக்கமாயும், தொடர்ச்சியாயும்அமைந்தது ஒரு ஆச்சரியமான தற்செயல்



மின்னல் – பிரமிள்
ககனப் பறவை

நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்

எறியும் பார்வை

கடலுள் வழியும்

அமிர்தத் தாரை

கடவுள் ஊன்றும்

செங்கோல்.



பிரமிள் என்றாலே தனிமனித, அகமைய, ஆன்மீக நோக்கு. கவிஞர் மின்னலைக் கண்டு பிரமிப்பும் உவகையும் அடைகிறார். அந்த உணர்வு அப்படியே ஆன்மீக அனுபவமாக மாறுகிறது. இயற்கையை வியத்தல் இறையைவியத்தலாக மாறும் ஒரு தருணம். அதை வெளிப்படுத்தும் விதமாக கவிஞர் நான்கு படிமங்களை முன் வைக்கிறார்.

”ககனப் பறவை நீட்டும் அலகு” –

மொத்த வானத்தையும் வெளியையும் நிறைக்கும் ஒரு பறவை அல்லது வெளியே ஒரு பறவையாக கற்பிக்கப்பட்டு அது மேலேயிருந்துகீழே பார்க்கும் போது நீட்டும் அலகாக மின்னல் காட்சியளிக்கிறது.

”கதிரோன் நிலத்தில் எறியும் பார்வை” –

பொதுவாக கனிந்த பார்வையையே அருளும் கதிரோன் கொஞ்சம் வேகத்துடன், கோபத்துடன் பார்க்கும் பார்வையோ? இங்குமின்னல் நிலத்தில் விழுகிறது. கடலுள் வழியும் அமிர்தத் தாரை –இப்போது மின்னல் கடலில். மின்னலின் அந்த நேர்க்கோடற்ற நீர்த்தன்மையும், நிறமும் அமிர்த்த் தாரையாய்த் தோன்றுகிறது. ஆனால்,மேல் வாசிப்பில், பிரமிளின் வேறு சில கவிதைகள் இந்த இரண்டாம் மூன்றாம் வரிகளின் தொடர்பை விளக்குகின்றன.

“காலை நினைவு என்கிற கவிதையில் “தேனொத்த ஒளி விந்தைச் சுரந்து ஊற்றும் ஆணிந்தக் கதிர்; பூமி பெண்மையாகும்” என்கிறார். “விடிவு – பூமித் தோலில் அழகுத் தேமல் பரிதி புணர்ந்து படரும் விந்து”. இந்தப் பார்வையில் வேறு பொருள் படுகிறது.

ஆணாகிய கதிரோன் பெண்ணாகிய நிலத்தின் மேல் ஒரு உத்வேகத்துடனும், உணர்ச்சியோடும் கலப்பது தான் கடலுள்அமிர்தத் தாரையாக அமிழ்கிறது. A celestial love. A confluence of Sun and Earth consummating in the Sea for perpetuating the mankind by rain. கடவுள் ஊன்றும் செங்கோல்: படிமம் தன் உச்சத்தை அடையும் வரி இது.

ஊன்றும் என்ற வார்த்தையில் இருக்கும் ஒரு ஆணித்தரமான உறுதியைக் கவனியுங்கள்.கடவுள் ஒவ்வொரு தடவையும் தன் அதிகாரத்தை, மேன்மையை நிலை நாட்டும் தருணம் மின்னல். எல்லா பழங்குடிகளும் மின்னலைக் கண்டு அஞ்சித் தொழுதுவந்துள்ளனர். யாரும் கடவுளின் செங்கோலைப் பார்த்ததில்லை. புராணங்களில் கூட இந்திரனின் அல்லது கிரேக்கக் கடவுள் Zeusன் ஆயுதமாகவே சொல்லப்படும்மின்னலை, நீதியையும், அதிகாரத்தையும் நிலை நாட்டப் பயன்படுத்தும் செங்கோலாகக் கற்பித்தது கவித்துவ உச்சம். சொல்லாட்சி, கவித்துவம், உணர்வுகள் இவை அனைத்தையும் கடந்து அறமும் சேரும் போது இது செவ்வியல் கவிதையாகி விடுகிறது. இதற்குக் காலம் இல்லை.அழிவற்றது.

செங்கோல் வழுவாத உலகில், ”நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி” அல்லவா அந்த மழை? அது பொய்க்காது, ஆகையால் வேளாண்மை பொய்க்காது.



“தேனமர்பொழில் கொள் ஆலை விளை சென்னெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழும்”, அறம் தழைக்கும், என்று நாம் வாழ்த்தலாம்



”அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்,

அடுத்ததும் பசுமையாகும்;

ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்,

அவர்கள் குணம் வருமென்பர்காண்”



என்ற குருபாத தாசர் வாக்கிற்கேற்ப என்னாலும் சில இலக்கிய நுட்பங்கள் சொல்லமுடிந்தது குறித்து மகிழ்ச்சி.



அன்புடன்,

ஜெயகாந்த்.



Save
Share

எழுதியவர் : -ஜெயகாந்த் ராஜு (18-May-19, 1:46 am)
பார்வை : 37

மேலே