கட்டண உரை,------------- ஐயங்கள்---------------------------சென்னை நெல்லை கட்டணக்கூட்டம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்னையில், உங்கள் கட்டண உரை சிறப்பாக அமைந்தது.அதனை தொகுத்துக்கொள்ள சில நாட்கள் ஆகக்கூடும்.

இக்கடிதம் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தோ தேசியகீதமோ இசைக்கப்படாதது பற்றி.

முன்பு ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது தேசியக் கொடிக்கும் தேசியகீதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள்.எனவேதான் உங்களின் வெறுப்பாளர்கள் கேட்கும்முன் கேட்கிறேன். வேறு காரணங்கள் ஏதாவது உன்டா அல்லது நிழ்ச்சியாளரின் கவனக்குறைவினால் விடுபட்டுவிட்டதா…

அன்புடன்

கா.சிவா

அன்புள்ள சிவா

இலக்கியக்கூட்டங்கள் வேறு, இலக்கியவிழாக்கள் வேறு. விழா என்பது பலர் கலந்துகொள்ள வாழ்த்துப்பண், வரவேற்புரை, நன்றியுரை என முறையாக அமைக்கப்படுவது. இலக்கியக்கூட்டம் என்பது ஒருவரோ சிலரோ ஒரு கூட்டத்திடம் பேசுவது.

இந்தியாவில் அரசு, அரசுசார் விழாக்களுக்கே நாட்டுப்பண் பாடப்படவேண்டும் என்பது சட்டம். அரசுநிகழ்ச்சிகளிலேயேகூட பிற சந்திப்புகள் உரையாடல் நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்பண் பாடப்படுவதில்லை. நடைமுறைப்பபடி விழாக்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாடப்படலாம்.

இது விழா அல்ல, உரைநிகழ்வே. ஆகவேதான் இங்கே தமிழ்த்தாய் வாழ்த்தோ நாட்டுப்பண்ணோ பாடப்படவில்லை.

ஜெ


திரு ஜெமோ

சென்னை கட்டண உரையில் விஐபிக்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். யார் அந்த இலக்கிய விஐபிகள்? இலக்கியத்தில் விஐபிக்கள் சாதாரண மனிதர்கள் என்ற பிரிவினை எப்போது ஆரம்பித்தது?

கே. ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

என் மேலும் விழாவின் மேலும் இந்தச் சிறுவிமர்சனத்தை மட்டுமே உங்களால் கண்டடைய முடிந்தது என்பது நிறைவளிக்கிறது.

இத்தனை கூர்ந்து நோக்கிய நீங்கள் அந்த விஐபி இருக்கைகளில் எவர் இருந்தார்கள் என பார்த்திருக்கலாம். சிறப்பு அழைப்பாளர்களான இதழாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமே. சிறப்பு அழைப்பாளர்களுக்கு, அவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்பதனால் இருக்கை வசதி அளிக்கவேண்டியது அமைப்பாளர் பொறுப்பு. ஆகவே அந்த ஏற்பாடு.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பாளர்களால் அழைக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே வரவில்லை என்பதனால் இறுதியில் பிறரே அவ்விருக்கைகளில் அமர்ந்தனர்.தப்பித்தவறி எழுத்தாளர்கள் வந்து அவர்களுக்கு சிறப்பு இருக்கை அளிக்கப்படவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு கேள்வியை கேட்டிருப்பீர்கள்.

ஜெஅன்புள்ள ஜெ

கட்டண உரை சிறப்பாக நிகழ்ந்தது அறிந்தேன். விழாவுக்கு நான் அரைமணிநேரம் தாமதமாக வந்தேன். இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் விஐபி பகுதியில் சில இருக்கைகள் இருப்பதைக் கண்டேன். இலக்கியவிழாக்களை நீங்கள் இப்படி கறாராக நேரம் கணித்து நடத்தினால் பங்கெடுப்பவர்கள் வந்துசேரமுடியாது. இங்கே உள்ள டிராஃபிக் பிரச்சினை நீங்கள் அறியாதது அல்ல. ஒருமணிநேரம் கழித்துகூட சிலரை உள்ளே விட்டார்கள் என விழாவில் பங்குகொண்ட என் நண்பர் சொன்னார்.

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

சென்னையிலேயே சினிமாக்கள் சரியான நேரத்துக்குத்தான் தொடங்குகின்றன. சரியான நேரத்துக்கு தொடங்குவது ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது. வராதவர்கள், வருவார்களா என தெரியாதவர்கள் கண்முன் இல்லாதவர்களுக்கு அளிக்காத வாக்குறுதியை நிறைவேற்றுவதைவிட வந்து கண்முன் அமர்ந்திருந்தவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதுதானே சிறப்பானது?

ஏற்கனவே கட்டணம் கட்டியவர்கள் சற்று பிந்தினாலும் அனுமதிக்கப்பட்டார்கள். சிறப்பு அழைப்பாளர்களும் அனுமதிக்கப்பட்டார்கள். அதை தவிர்க்கமுடியாது.

ஜெ

=============================================================================================================

சென்னை கட்டணக்கூட்டம்--------உரை----------மார்ச் 5, 2019
=======================================
ஒருநாள் முன்னராகவே வரமுடியுமா என அகரமுதல்வன் கேட்டார். ஏனென்றால் இது கட்டண உரை. இத்தகைய நிகழ்ச்சியின் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் ஏதேனும் காரணத்தால் நிகழ்ச்சி நடக்காமல்போனால் பணத்தை திருப்பி அளிக்கவேண்டும், பணம் வசூலிப்பதைவிட பெரிய வேலை அது. ஆகவே நான் முன்னரே வந்துவிட்டிருந்தால் பதற்றத்தை தவிர்க்கலாமென்று அவர் நினைத்தார். என் பிரச்சினை என்னவென்றால் ஒருநாள் முன்னரே வந்தால் அன்று பகலிலும் இரவிலும் நான் நண்பர்களுடன் பேசிச்சிரிக்காமல் இருக்க முடியாது. மறுநாள் களைப்புடன் இருப்பேன். சென்றமுறை பரியேறும்பெருமாள் நிகழ்ச்சியில் பேசியபோது அந்தக்களைப்பும் இருந்தது.

நிகழ்ச்சி அன்று வந்ததுமே நான் என் உரையை தயாரிக்கத் தொடங்கிவிட்டேன். முன்பெல்லாம் உரை தயாரிப்பு என்றால் முழுமையாக கட்டுரையாக எழுதிவிடுவேன். அதை மனப்பாடம் செய்து ‘ஆற்றொழுக்காக’ பேசுவேன். ஆனால் அதில் ஒரு நினைவுகூரல் அம்சமே இருந்தது. இப்போது மேடைப்பதற்றம் கொஞ்சமும் இல்லை. பேசுவது எளிதாக ஆகியிருக்கிறது. அங்கேயே சிந்தனைகள் வருவதும் நிகழ்கிறது. முழுமையாக உரையை தயாரித்துக்கொண்டோம் என்றால் அதை நினைவுகூர்வதே நிகழும். ஆகவே உரையை குறிப்புகளாகவே தயாரிப்பேன். அக்குறிப்புகளை பலமுறை திரும்ப எழுதி சுருக்கி மிகச்சிறு குறிப்பாக ஆக்கிக்கொண்டு மேடை ஏறுவேன். பெரும்பாலும் குறிப்பை பார்ப்பதில்லை. அந்தக்குறிப்புகளில் இருந்து எங்கெல்லாம் பறந்தெழுகிறேனோ அங்கெல்லாம் முன்பிலாத கருத்துக்கள் வெளிப்படும். அது புனைவில் நான் இயல்பாக வெளிப்படுவதுபோலவே படைப்பூக்கம் கொண்ட ஒரு நிகழ்வ

நான் எடுக்கும் குறிப்புகள் என்பவை ஒரு அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கவே. உதாரணமாக இந்தக் கட்டண உரை இருபகுதிகள். இருபகுதிகளிலும் ஏழு துணைப்பகுதிகள். அவற்றுக்குள் சராசரியாக ஆறேழு கருத்துக்கள். இந்தக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளாமல் நான் மேடையேறுவதில்லை. இதிலிருந்து மேலே செல்வேன், ஆனால் இதிலிருந்து அகன்று செல்லமாட்டேன். இதனால் என் உரை ஒருபோதும் முன்னரே திட்டமிட்ட நேரத்தைக் கடந்து வளர்வதில்லை. கூடிப்போனால் ஐந்துநிமிடம் நீளக்கூடும். நான் கடிகாரத்தை பார்ப்பதில்லை. முடித்துவிட்டு நேரம் பார்க்கையில் ஏறத்தாழ சரியாகவே இருக்கும்.

பிறர் உரைகளில் எனக்கு சிக்கலாக இருப்பது அவர்கள் நினைவுகூரும் போக்கில் பேசிச்செல்வது. உரை எதைநோக்கி என்பது எனக்குள் இருக்கும் என்பதனால் அவர்கள் பேசிப்பேசி வளைந்துசெல்கையில் அமைதியிழப்பேன். நினைவுகூரப்படுவன ஒன்றோடொன்று இயல்பாக இணைவுகொண்டிருப்பதும் இல்லை. இன்னொன்று பொய்உச்சங்கள். இதோ பேச்சு முடியவிருக்கிறது என எண்ணும்போது மீண்டும் ஒன்று நினைவுக்கு வர அவர்கள் தொடர்கையில் என் உள்ளத்தில் நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் உரையின் கட்டமைப்பு குலைகிறது. உரைக்கு கட்டமைப்பு ஒன்றை நாம் உருவாக்கிக் கொள்வது அவ்விரு பிழைகளையும் தவிர்க்கும். அதை கேரளத்தின் மாபெரும் பேச்சாளரான எம்.கே.சானு மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

நாம் பேசத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே அந்தக் கட்டமைப்பு கேட்பவர் உள்ளத்திலும் உருவாகிவிடும் என்பதனால் அவர்களுக்கும் பேச்சு நீள்கிறது என்னும் சலிப்பு இருப்பதில்லை. இதுவரை என் அனுபவம் என் உரைகள் அரங்கின் கூர்ந்த கவனிப்பில்லாமல் சென்றதே இல்லை என்பதே. அரங்கு சற்று கவனமிழந்தாலும் என்னால் பேசமுடிவதுமில்லை. என் எழுத்துக்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவர்கள் நிறைந்த அரங்குகளில்கூட என்னை நோக்கி கவனம் குவிந்திருப்பதையே இதுவரை கண்டிருக்கிறேன். அவ்வாறு இருக்காது என நான் நினைக்கும் அரங்கில் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் பேசிமுடித்துக்கொள்வேன். கூடுமானவரை அத்தகைய உரையை தவிர்ப்பேன்.

ஆனால் என் உரைகளை எங்குபேசினாலும் என்னால் முடிந்தவரை தீவிரமாக, முடிந்தவரை ஆழமாக ஆற்றவேண்டும் என்பதே என் எண்ணம். பல அரங்குகளில் என்னிடம் அமைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்பே “எங்க ஆடியன்ஸ் கொஞ்சம் சாதாரணம்தான்.. அதுகேத்தாப்ல பேசினா நல்லது” என்பார்கள். நான் அந்த சமரசத்தை செய்துகொள்வதில்லை. கல்லூரிகளில் மாணவர்களுக்கு எந்த அறிவார்ந்த பயிற்சியும் இருக்காது என எனக்கும் தெரியும். ஆனால் அவர்களிடமும் தீவிரமாகவே பேசவேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் அறியாத தீவிர அறிவுலகம் ஒன்று இருக்கிறது என வேறு எப்படித்தான் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்? ஆகவே வழக்கமான செய்திகள் கிடையாது. வழக்கமான உணர்ச்சிகளும் இருக்காது. குட்டிக்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் சொல்லமாட்டேன். அனைத்தையும்விட முக்கியமாக ஒரு கருத்தை பலமுறை வெவ்வேறு சொற்களில் விளக்க மாட்டேன். என் வழி உருவகங்கள் படிமங்கள் வழியாக பேசுவது. நிகழ்வுக்குறிப்புகளை உருவகங்களாக ஆக்கிக்கொள்வது.

என்னிடம் தமிழகத்தின் தேர்ந்த பேச்சாளர் ஒருமுறை சொன்னார். “உங்க பேச்சிலே அழகான பல விஷயங்கள் சொல்றீங்க. ஆனால் என்ன பிரச்சினைன்னா சொல்லிட்டே போறீங்க. நம்மாட்கள் அப்டியே விட்டிருவாங்க. இங்க எந்தக்கருத்தையும் மூணுமுறை தொடர்ச்சியா சொல்லணும். ஒருமுறை சொன்னதும் அப்டியே இன்னொரு வகையா திருப்பிச் சொல்லணும். ஒரு உதாரணம் சொல்லிட்டு மறுபடியும் அதே கருத்தைச் சொல்லி நிறுவிட்டு அடுத்ததுக்கு போகணும்”. அவரே பேசிக்காட்டினார். “கம்பராமாயணம் ஒரு செவ்வியல்நூல். அதாவது அது ஒருகிளாஸிக், கிளாஸிக்கைத்தான் செவ்வியல்னு சொல்லுங்க. தமிழிலே பல செவ்வியல்நூல்கள் இருந்தாலும் கம்பராமாயணம்தான் செவ்வியல்களிலே உச்சம். அதனாலேதான் பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்னு முதல்ல சொல்றான். தமிழிலே முதன்மையான செவ்வியல்நூல் கம்பராமாயணம்’. கம்பராமாயணம் ஒரு செவ்வியல்நூல் என்னும் ஒற்றைவரியாக நான் அதைச் சொல்லிச்செல்வேன். அதை தவிர்க்கவேண்டும் என்றார்.

நேர்ப்பேச்சில் குறிப்புகளும் உட்குறிப்புகளுமாக நூறுசெய்திகளை ஒரே சமயம் கொட்டும் அறிஞர் அவர். மேடையில் துளித்துளியாக பரிமாறுவார். அதுதான் தமிழ் சராசரி அரங்கினரின் அறிவுநிலை என எனக்கும் தெரியும். ஆனால் நான் அவ்வாறல்லாமலும் பேச்சு இருக்கமுடியும் என நினைக்கிறேன். அதற்காகவே என்னை வாசித்து அறிந்து எனக்காக வரும் வாசகர்கள், என் கருத்துக்களுடன் ஏற்கனவே ஒரு தொடர்பு உள்ளவர்கள் அடங்கிய அரங்குக்காக பேசுகிறேன். அதற்கு கட்டண உரை அரங்கு மிக உகந்தது, முந்நூறுரூபாய் கட்டி பேச்சைக்கேட்க வருபவர்கள் பொழுதுபோக்க வருபவர்கள் அல்ல.

அதிலும்கூட ஒன்றை கவனிக்கிறேன். இன்று தமிழகத்தில் எந்தப் பொதுப் பண்பாட்டு அரங்கிலும் இளைஞர்கள் அரிதாகவே தென்படுவார்கள். ஆனால் எங்கள் அரங்கில் எப்போதும் பெரும்பாலும் அனைவருமே இளைஞர்கள். அவர்களுக்கு ஓர் நீண்ட சிக்கலான உரையை உளம்கொள்வதும் புரிந்துகொள்வதும் கடினமாக இல்லை. அரிதாக வரும் ஐம்பது அகவை கடந்தவர்களுக்கு அரைமணிநேரம்கூட செவிகூர முடிவதில்லை. மிக விரைவிலேயே விலகிவிடுகிறார்கள். அடுத்த உரைகளில், ஐம்பது கடந்தவர்கள் தவிர்க்கவும் என அறிவிக்கவேண்டும் என வேடிக்கையாக சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களில் விதிவிலக்குகளே அறிவார்ந்த கூர் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே அறிவியக்கத்தின் உள்ளே இருந்துகொண்டிருப்பவர்கள்.இயல்பாகவே கவனிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.

ஏற்கெனவே உறுதியான கருத்துநிலை எடுத்துவிட்டவர்கள், அதை சொல்லிச்சொல்லி தனக்கே நிறுவிக்கொண்டே இருப்பவர்களும் அரங்கில் எளிதில் விலக்கம் கொள்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அவர்க்ளில் பலர் வழக்கமான மேடையுரைகளுக்குப் பழகியவர்கள். என் உரைகள் ஒருவகையான கலைப்புகள்தான். ஏற்கெனவே அவர்கள் அறிந்து அடுக்கி வைத்திருப்பனவற்றை மறுகட்டமைப்பு செய்பவை. சில அடிப்படை வினாக்களை எழுப்புபவை. அதற்கான உளநிலை அரங்கினருக்கு இருக்கவேண்டும். ஆகவே அரங்கை கூட்டுவதைவிட தெரிவுசெய்வதே இன்று முக்கியமானது. கட்டணம் என்பது ஒருவகை சல்லடைதான். அதைக்கடந்து வருபவர்கள் போதும். எப்போதும் கட்டணம் கட்டி வருபவர்களிடம் ‘ஆர்வம் அற்ற வேறு ஒருவருக்கு கட்டணம் கட்டி அனுப்பாதீர்கள்’ என்பது எங்கள் கோரிக்கையாக இருந்தது.


அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் – பண்பாட்டு அமைப்பின் முதல் சொற்பொழிவு நிகழ்வு இது. [எனக்கு நேர் எதிரான கருத்து கொண்ட ஒருவரின் உரை அடுத்தபடியாக என்று சொன்னார். அவரும் என் நண்பர்தான்] ஆகவே அவர் இதழாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிட்டிருந்தார். அவர்களுக்காக முன்வரிசை இருக்கைகளும் ஒதுக்கியிருந்தார். அவர்களில் இருவர் மட்டுமே வந்தனர். என்னிடம் சிறப்பு அழைப்பாளர்களாக எவரையேனும் அழைக்கவேண்டுமா என்று கேட்டார். அழைக்கலாமா வேண்டாமா என குழப்பம். எழுத்தாளர்கள் கவிஞர்களில் இரண்டு மணிநேரம் அமர்ந்து இன்னொருவர் பேசுவதை கேட்பவர்கள் மிகமிகச்சிலரே. ஓரிரு வரிகளைக் கண்டு கருத்துரைப்பவர்களே மிகுதி.

அழைத்தால் வரக்கூடும் என சிலர் உண்டு. ஆனால் அவர்கள்கூட அழைத்துவிட்டானே, எப்படி தவிர்ப்பது என எண்ணலாம். மொய் வைக்க வருபவர்கள் போல வர நேரலாம். ஆகவே இரு எழுத்தாளர்களையும் இரண்டு சினிமா நண்பர்களையும் மட்டும் அழைத்தேன். இரு எழுத்தாளர்களும் எதிர்வினையே ஆற்றவில்லை. மணிரத்னமும் வசந்தபாலனும் வந்தார்கள். அவர்கள் இருவரும் வருவார்கள் என்றும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கேட்பார்கள் என்றும் எனக்குத்தெரியும். அவர்கள் வந்தது நிறைவளித்தது.

குறைந்தது 200 பேர் வந்தாகவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். அதிகபட்சமாக 300 பேர். அரங்கின் கொள்ளளவு 375. முழு அரங்கும் நிறைந்தது. கட்டணச்சீட்டு எடுத்து வராத 25 பேரின் இருக்கைகளுக்கும் அங்கே ஆட்கள் வந்தனர் என்பதனால் 400 பங்கேற்பாளர்கள் எனலாம். சென்னையில் இது பெரிய எண்ணிக்கைதான். உண்மையில் சாதாரண விழாக்களுக்கு, நானே பேசினால்கூட, இந்தக்கூட்டம் வருவதில்லை. அகரமுதல்வனே “கூட்டம் வரணும்னா கட்டணம் வைக்கணும்போல இருக்கே” என்று வியந்துகொண்டார்.ஒரு வாசக நண்பர் சொன்னார். “இப்டி ஒரு கூட்டம்ங்கிறதனாலத்தான் வர்ரேன். என் நேரம் வீணாகாதுங்கிற கேரண்டி இருக்கு. எனக்கு 300 ரூபாய் பெரிய விஷயம் இல்ல. எப்டியும் டீசல் அது இதுன்னு பணம் செலவாயிரும். புத்தக விழாக்களுக்கு போறதே இல்லை. பேசத்தெரியாதவங்க, எந்தத் தயாரிப்பும் இல்லாதவங்க பேசுவாங்க. ஒரு வரிகூட பயனுள்ளதாகவும் இருக்காது, சுவாரசியமாகவும் இருக்காது. நீங்க பேசினாக்கூட கட்டக்கடைசியிலே பேசுவீங்க. அதுக்குள்ள எனக்கு கெளம்புற நேரம் ஆயிடும்”. அதுதான் பிரச்சினை. நம் இலக்கிய அரங்குகள் உண்மையிலேயே வருபவர்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றனவா என நாம் கணக்கெடுக்கவேண்டிய தருணம் இது.

ஆறுமணிக்கு நிகழ்ச்சி. ஆறுமணிக்கே தொடங்கியது. ஏனென்றால் ஐந்தரைக்கே முக்கால்வாசி அரங்கு நிறைந்துவிட்டது. ஆறரைக்கு மேல் வந்தவர்களில் முன்னரே கட்டணச்சீட்டு வாங்கிய சிலருக்கே நுழைவொப்புதல் அளிக்கப்பட்டது. அரங்கில் கட்டணச்சீட்டு விற்பனை ஆறுமணிக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. அரங்கு நிறைந்ததுதான் காரணம். ஆனால் சிலர் என்னிடம் அவர்களை உள்ளே விடவில்லை என முறையிட்டு கடிதம் அனுப்பினர். இருவர் நண்பர்கள்தான். நெடுந்தொலைவு பயணம் செய்து இதற்கென்றே வந்தவர்கள் அரங்கில் நுழைய முடியாமல் திரும்பிச்செல்லநேர்ந்தது.

ஆனால் நடைமுறையை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கட்டண உரை என்றால் அதில் அரங்கினருடன் ஓர் ஒப்பந்தம் உள்ளது. நம் விருப்பபடி பிந்தமுடியாது. அவர்கள் பணம்கொடுத்து அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கையில் வருகையாளர்கள் உள்ளே வந்து அமர்வது இடம் தேடுவது எல்லாவற்றையும் தொந்தரவாகவே நினைப்பார்கள். பணம் கொடுத்தமையாலேயே உரையை முழுமையாக கவனிக்கவேண்டும் என கோர அவர்களுக்கு உரிமை உள்ளது.

அத்துடன் அரங்கு நிறைந்துவிட்டது. பிற அரங்குகள்போல தரையில் அமரச்செய்யவோ நிற்கவைக்கவோ அமைப்பாளர்களுக்கு உரிமை இல்லை. பணம் வாங்கினால் இருக்கை அளித்தே ஆகவேண்டும். அதை எழுதியபோது இரு நண்பர்கள் நான் சென்னையின் போக்குவரத்துச் சிக்கலை உணராமல் பேசுகிறேன் என்றார்கள். அரங்கை கண்ணில் பார்த்தபின் யூ வட்டம் அடித்து வந்துசேர இருபத்தைந்து நிமிடம் ஆகியது என்றார்கள். அரங்கு அமைந்திருக்கும் இடம் ரயில், பேருந்து இரண்டுக்குமே வசதி குறைவானது என்றும் சொன்னார்கள். அது ஒரு சிக்கல்தான்.ஆனால் அரங்கு இசைநிகழ்ச்சிகளுக்குரியதாகையால் துல்லியமான ஒலியமைப்பு கொண்டிருந்தது. இது முக்கியமானது. கட்டண உரையில் அனைவருக்கும் உரை தெளிவாக கேட்டாகவேண்டும். எதிரொலிச் சிக்கல் இருக்கக்கூடாது. பல இலக்கிய நிகழ்வுகளில் அரங்குகளில் ஒன்றுமே தெளிவாக கேட்பதில்லை. ஒலியமைவு மிக மோசமாக இருக்கும். கட்டணம் என ஒன்று வைக்கும்போதுதான் நாம் அரங்கினர் என ஒரு தரப்பு இருக்கிறது என்பதையே உணர்கிறோம்.

அகரமுதல்வன் ஐந்துநிமிடம் அறிமுக உரை அளித்தபின் நான் பேசினேன். முதல் ஒருமணிநேரம் மரபு என வரையறை செய்துகொள்வதன் அடிப்படைப் பிரச்சினைகள். அடுத்த ஒரு மணிநேரம் இன்று நாம் மரபு என எண்ணுவது வரையறைசெய்யப்பட்ட முறைமை பற்றி. மொத்தம் இரண்டுமணிநேரம் இருபதுநிமிடங்கள். பெரும்பாலும் இலக்கியம் வழியாகவே நிகழ்த்தப்பட்ட உரை.

கட்டுரைகளுக்கும் உரைகளுக்கும் உள்ள வேறுபாடு உரையின் தன்னிச்சையான எழுச்சியில் உள்ளது. மேடையில் நாம் அனைத்தையும் தொகுத்து ஒற்றை ஒழுக்காக ஆக்கும்போது பல புதிய கண்ணிகள் அங்கேயே உருவாகி வருகின்றன. பல புதிய திறப்புகள் நிகழ்கின்றன. அவற்றை இன்னொருமுறை எண்ணிப்பரிசீலிக்க நேரமில்லை. உரையின் சிறப்பு என்பது அப்படி நிகழும் புதிய திறப்புகள். எதிர்மறை அம்சம் என்பது அவற்றில் சில உடனடி வெளிப்பாடுகளாக மட்டுமே இருக்கக்கூடும் என்பது. நான் பின்னர் வளர்த்தெடுக்கும் பல கருத்துக்களை மேடையில் தன்னிச்சையாக பேசியபின்னரே நானே அறிந்திருப்பேன். சிலவற்றை விரிவாக்குவேன், சிலவற்றை விட்டுவிடவும் செய்வேன்.

கேட்பவர்களுக்கும் அது ஒரு அறைகூவல். அவர்கள் உடன் ஒழுகி வரும்போது யோசிப்பதில்லை. சென்றபின்னர்தான் அந்தக்கருத்துக்களை தொகுத்து சிந்திக்கவேண்டும். இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளவேண்டும். விடுபட்ட இடங்களில் கேள்விகளை எழுப்பிக்கொள்ளவேண்டும். அந்த உரையில் இருந்து தங்கள் சொந்தப்பயணங்களை நிகழ்த்தவேண்டும். அதற்குரிய தவிர்க்கமுடியாத வழி ஓர் உரையின் ஒட்டுமொத்தம், சாராம்சம் ஆகியவற்றில் இருந்து மட்டுமே முன்னே செல்வதாகும். எந்த உரையும் ஓர் உரையாடலே. ஒரு சொல்லும் பேசவில்லை என்றாலும் என் முன் அமர்ந்திருந்தவர்களும் என்னிடம் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
==============================================================================================================

நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம் ---நவம்பர் 12, 2018
======================================================================

நெல்லையில் கட்டண உரையை அமைக்கவேண்டும் என்பது நண்பர் சக்தி கிருஷ்ணனின் எண்ணம். பலஆளுமைகளின் தொகுப்பான சக்தி நெல்லையில் ஒரு நகைக்கடையை நடத்துகிறார். திருச்சியில் வழக்கறிஞராகவும் இருக்கிறார். நெல்லைக்கும் திருச்சிக்கும் நடுவே காரில் ஓடிக்கொண்டே இருப்பவர் நெல்லையில் சக்தி கலைக்களம் என்ற பேரில் கலை இலக்கியச் செயல்பாட்டுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். அவருடன் அகில இந்திய வானொலியில் பணியாற்றும் ஜான் பிரதாப்பும் இணைந்துகொண்டார். ஜான் பிரதாப்புடன் நாங்கள் மேற்குத்தொடர்ச்சிமலையில் பயணம் செய்திருக்கிறோம்.அவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை நெல்லையில் ஒருங்கிணைத்தவர்கள்

முதலில் எண்ணம் கட்டணம் கட்டி நூறுபேர் வருவார்களா என்பதுதான். ஆனால் தமிழகமெங்கணுமிருந்து என் நண்பர்களான வாசகர்களே கிட்டத்த அறுபதுபேர் வருவதாகப் பெயர் கொடுத்துவிட்டனர். ஆகவே மேலும் பெரிய கூடத்துக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது 230 பேர் அமரக்கூடிய கூடம். அதை நிறைக்கமுடியுமா என்பது அடுத்த கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக வருகையாளர்கள் பதிவுசெய்துகொண்டே இருந்தார்கள். நான் வண்ணதாசன், அ.ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன் உட்பட்ட சிலரை அழைத்திருந்தேன்.

9 ஆம்தேதி கோவைக்குச் சென்றிருந்தேன். விஷ்ணுபுரம் விழா தொடர்பான ஆலோசனைகள். அங்கிருந்து ரயிலேறி காலை 3 10க்கு நெல்லை வந்திறங்கினேன். பொதுவாக விடியலில் எழவேண்டுமென்றாலே நான் ரயிலில் ஆழ்ந்து உறங்குவதில்லை. முந்தைய நாள் முழுக்க கோவை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தமையால் குரல் கட்டியிருந்தது. ஆகவே மூச்சை சேமிக்கவும் தூங்கவும் விரும்பினேன். நெல்லையில் வெண்முரசின் தீவிர வாசகியான திருமதி சிவமீனாட்சி செல்லையா அவர்களின் விடுதிக்குச் சென்று படுத்து எட்டரை மணிவரை தூங்கினேன்.அதன்பின் எழுந்து உரையின் பொதுவடிவை தயாரித்தேன். ஏற்கனவே உரையை கிட்டத்தட்ட முழுமையாகவே அஜிதனிடம் சொல்லிப்பார்த்திருந்தேன். இருந்தாலும் ஒரு நான்குமுறை எழுதிக்கொண்டால்தான் என்னால் தடையில்லாமல், செறிவாகப் பேசமுடியும்.

காலை முதலே நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர். பெங்களூர், சென்னை, காரைக்குடி, திருச்சி, பாண்டிச்சேரி என பல ஊர்களிலிருந்து வந்தார்கள். சென்னையில் இருந்து நண்பர்கள் ஒரு வேனில் கிளம்பி முந்தைய நாளே வந்து தாமிரவர்ணி நீராடல் என தனி பாதையில் சென்றுகொண்டிருந்தனர். ஈரோடு நண்பர்கள் ஒரு வேனில் காலையில் கிளம்பி மதியம் வந்தார்கள். அருண்மொழியும் அஜிதனும் எங்கள் காரில் நாகர்கோயிலில் இருந்து வந்தனர். நண்பர் ஷாகுல் ஹமீது ஓட்டிவந்தார். மெல்ல மெல்ல விஷ்ணுபுரம் நிகழ்ச்சியின் முன்னோட்டம் போலவே அனைத்தும் ஒருங்கிணையத் தொடங்கியது. பேச்சு, சிரிப்பு, நையாண்டி கூடவே தீவிர இலக்கிய விவாதம் என.

ஏற்பாட்டாளர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தார்கள். வரும்காலத்தில் மேலும் சில துறைசார் அறிஞர்களை அழைத்து இதேபோல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்று சொன்னார்கள். எவரை அழைக்கலாம் என்று பேசிக்கொண்டோம். துறைசார் அறிவு கொண்டவராகவும் அதேசமயம் ஓர் அரங்கை எதிர்கொண்டு தெளிவாகவும் ஆர்வமூட்டும்வகையிலும் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம்.மேலைநாட்டு துறைசார் அறிஞர்கள் பெரும்பாலும் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர்கள். இங்கே அந்த இணைவு மிக அரிதாகவே உள்ளது

நான் பகல் முழுக்க பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தேன். தூங்கினேன். உரையை சிலமுறை எழுதிக்கொண்டேன். உரை ஐந்தரைமணிக்கு. ஐந்துமணிக்கு அரங்குக்குக் கிளம்பினேன். நண்பர் செல்வேந்திரன் அவருடைய மகளின் எழுத்தறிவிப்புக்கு அளித்த சிவப்புச் சட்டை. உரிய பதற்றங்களுடன் கூடத்துக்குச் சென்றேன். தயாரித்தவை அனைத்தும் மொத்தமாகக் கலந்து ஒரு ரீங்காரமாக மண்டைக்குள் ஓடியது. எங்கே தொடங்கவேண்டும் என்பது மட்டும் எஞ்சியிருந்தது. பார்ப்போம் என ஒரு நம்பிக்கை

பொதுவாக இவ்வகை உரைகளில் இரண்டு விஷயங்கள் நிகழும். நாம் நன்கறிந்த, முன்னரே நோக்கிச் சரிபார்த்த சிலவற்றைச் சொல்வோம். இது பேச்சு என்பதனாலேயே அந்த ஒழுக்கில் அதுவரை இல்லாத பல புதிய கோணங்களும், முன்பில்லாத சில கருத்துக்களும் தோன்றும். அதன்பின்னரே அவற்றை மீண்டும் சரிபார்க்கவேண்டும். இந்த இரண்டாம்வகைக் கருத்துக்கள்தான் உண்மையில் மூளையை, கற்பனையைச் சீண்டுபவை. அவை இயல்பாக எழுந்துவந்தால்தான் ஓர் உரை சிறப்பாக நிகழ்ந்துள்ளது என்று பொருள். அவை பேசுபவனுக்கும் கேட்பவருக்கும் நடுவே ஓர் உரையாடலாகவே எழுகின்றன

கட்டண உரை என்றால் என்ன என்பதன் முதல் தடையம் தெரியலாயிற்று. அத்தனைபேருமே ஐந்தேகால் மணிக்குள் வந்துவிட்டனர். தமிழ்நாட்டு இலக்கியக் கூட்டங்கள் ஐந்தரை என்றால் ஆறரைக்குத் தொடங்கும். ஏழரைக்குத்தான் மைய உரை நிகழும். எட்டு மணிவாக்கில்தான் கேட்கவருபவர்கள் முழுமையாக வந்தமர்வார்கள். ஐந்துமுப்பதுக்கு அரங்கு நிறைந்தது. ஹவுஸ்ஃபுல் போட்ட ஒரே இலக்கிய அரங்கு இது என்றார் நண்பர். கேட்பவர்கள் அரங்கில் அமர்ந்தபின்னர் முழுமையான கவனம் கூடியிருந்தது. அரைக்கவனத்தில் ஒருவர் கண்கூட தென்படவில்லை. சொல்லப்போனால் இனிமேல் கட்டணம் கட்டாமல் வருபவர்கள் நடுவே பேசவே கூடாதோ என்ற எண்ணம்தான் வந்தது.பொதுவாக உரைநிகழ்வுகளில் ஆட்கள் எழுந்துசெல்வது, செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பது, வந்து அமர்ந்துகொண்டே இருப்பது என ஒரு கலைவு இருந்துகொண்டே இருக்கும். மிகப்பெரிய கூட்டம் என்றால் அது விழியோ செவியோ அற்ற ஒரு திரள்தான். அதை கற்பனையில்தான் கேட்பவர்களாக உருவகித்துக்கொள்ளவேண்டும். இந்த அரங்கில் ஒவ்வொருவரும் கூர்ந்து அமர்ந்திருந்தனர். ஏனென்றால் இது அவர்கள் ‘விலைகொடுத்து வாங்கிய’ ஒன்று. அவர்களுக்கு உரிமையானது, ஆகவே வீணடிக்கப்படக்கூடாதது.

நான் இரு பகுதிகளாகப் பேசினேன். முதல் ஐம்பது நிமிடம் இந்திய வரலாற்றுப்பின்னணியில் நம் சிந்தனை மரபை உருவாக்கியிருக்கும் கூறுகள் என்னென்ன என்று. அடுத்த ஒரு மணிநேரம் நம் இன்றைய சிந்தனையை கட்டமைத்திருக்கும் கூறுகள் என்னென்ன, அவற்றின் சிக்கல்கள் என்னென்ன என்று. பெரும்பாலும் இலக்கியப் படைப்புகள் வழியாக, இலக்கியம் சார்ந்த உருவகங்கள் வழியாக அமைந்த உரை இது இரு உரைகளுக்கு நடுவே பத்து நிமிட இடைவெளி

எட்டு பத்துக்கு உரை முடிந்தது. அடுத்த அரைமணிநேரம் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி. நூல்களுடன் வந்து கையெழுத்து பெறுபவர்கள். கை குலுக்குபவர்கள். எல்லா நிகழ்ச்சிக்குப்பின்னரும் இது ஒரு நிறைவூட்டும் தருணம். வாசகர்களை நேருக்குநேர் சந்திப்பது. ஒவ்வொருநாளும் வாசகர்களின் கடிதங்கள் பெறும் எழுத்தாளன் நான். எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை வாசகர்கடிதம் வராதநாள் மிக அரிது. ஆயினும் நேருக்குநேர் சந்திப்பதென்பது முற்றிலும் வேறொன்று. பிரியம் நிறைந்த கண்கள், தயங்கும் சொற்கள், கைகுலுக்கல்கள் வழியாக நிகழும் ஒரு ஆழ்ந்த உறவு அது

e

இரவு வெவ்வேறு விடுதிகளிலாக அறைகள் போட்டிருந்தோம். நான் நண்பர்களுடன் சென்று தங்கினேன். பன்னிரண்டு மணிவரை உரையின்மீதான் ஐயங்கள் மறுப்புகள் என பேசிக்கொண்டிருந்தோம். ஆறு படுக்கைகள் கொண்ட பெரிய அறைக்குள் நாற்பதுபேர் அமர்ந்து ஒரு தீவிரமான விவாதம். பல கோணங்களில் கேள்விகளும் விளக்கங்களும் எழுந்து வந்தன.ஓர் உரையின் முதன்மைநோக்கமே கேட்பவர் தானே தேடிச்செல்லும் சில அடிப்படை வினாக்களை அளிப்பதுதான். சில குழப்பங்களை, முட்டிமோதல்களை அவர்கள் அடைந்தாலே போதுமானது. என் உரை விரிவான ஓர் அடிப்படைவரைவை அளிக்கிறது. அதை நிரப்பிக்கொள்ளும் பணி கேட்பவர்களுக்கு உண்டு அந்தக்குழப்பங்கள் எழுந்து வந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் வலுக்கட்டாயமாகப் பேச்சை நிறுத்தவேண்டியிருந்தது.

j

நிகழ்வரங்குக்கும் விடுதிகளுக்கும் அருகே சர்க்கார் படத்தின் பெரிய சுவரொட்டிகள், ராம் முத்துராம் அரங்கில் பெருங்கூட்டத்தின் பரபரப்பு. நாளிதழ்களில், ஊடகங்களில் சரவெடிச் சர்ச்சைகள். இன்னும் பத்துநாட்களில் ஒருவேளை தமிழில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிகமான பணமீட்டிய படமாக சர்க்கார் அமையக்கூடும் என்றது சினிமா வினியோக வட்டாரத்திலிருந்து வந்த செல்பேசிச் செய்தி. நான் அறியாத வேறேதோ உலகில் அதெல்லாம் நடந்துகொண்டிருந்தன. நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை.சர்க்காரின் வெற்றி எதிர்பார்த்ததுதான். அதன் மாபெரும் வெற்றி சினிமாவில் எப்போதுமுள்ள ஆச்சரியங்களில் ஒன்று. அதைவிட எனக்கு மகிழ்வை அளித்தது என் நண்பர் மதுபால் ஒழிமுறிக்குப் பின் இயக்கிய குப்ரஸித்தனாய பய்யன் என்ற சிறிய மலையாளப் படம் ஒன்பதாம் தேதி வெளியாகி வெற்றிபெற்றிருப்பது. மதுபாலைக் கூப்பிட்டு வாழ்த்தினேன்.

nasu
ந.சுப்பு ரெட்டியார்மறுநாள் காலையில் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐம்பது நண்பர்கள் அதில் கிருஷ்ணாபுரத்திற்கும் ஆழ்வார்திருநகரிக்கும் சென்றோம். கிருஷ்ணாபுரம் சிற்பங்களை முப்பதாண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ந.சுப்புரெட்டியார் ஆகியோர் அந்த ஊர், கோயில்களின் சிற்பங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். தொ.மு பாஸ்கரத்தொண்டைமான் சிற்பங்களைப்பற்றிய செய்திகளை அழகுறச்சொல்பவர். ந.சுப்புரெட்டியார் தொன்மங்களுக்கு அதிக இடம் கொடுப்பார். தமிழக ஆலயங்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு தொடர்கவனத்தை நிலைநிறுத்திய முன்னோடிகள் இவர்கள். இவர்களின் நூல்கள் மறுபதிப்பாக வரவேண்டும்ஒருகாலத்தில் நான் அவர்களின் பெரிய வாசகன். அவர்களிடமிருந்தே கிருஷ்ணாபுரம் கோயிலைப்பற்றி அறிந்துகொண்டேன். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது நண்பர்களுடன் கிளம்பி வந்து இக்கருங்கல் கலைவடிவங்களுக்கு முன் நின்றேன். வண்ணங்களின் அன்னை கருமையே என அன்று உணர்ந்தேன். அதன்பின் எப்படியும் பத்துமுறையேனும் இங்கு வந்திருப்பேன்.

ஒவ்வொருமுறையும் அங்கிருந்த சிற்பங்கள் ஒருவகையான சொல்லின்மையை அளிக்கின்றன. இம்முறை முதல்முறையாக அவை காலமில்லாதவை என்றும் நான் காலத்தில் சென்றுகொண்டிருப்பவன் என்றும் தோன்றியது அவற்றின் கல்விழிகளை நேர்நின்று நோக்க முடியவில்லை. அணிச்செதுக்குகள். நடனநிலைகள். அசைவின் அசைவிலாநிலை. கால ஒழுக்கு கல்லில் நிலைகொள்ளுதல்.

ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி மாத மூலநட்சத்திரம். அது மணவாளமாமுனிகளின் பிறந்த நாள். ஆகவே கோயிலில் திருவிழா. அருகிலி இருந்த மணவாள மாமுனிகளின் ஆலயத்திலிருந்து அவர் எழுந்தருளி பெருமாளையும் நம்மாழ்வாரையும் வணங்கிச் செல்கிறார். அதற்கான கூட்டம். தமிழகத்தில் கவிஞன் தெய்வமாக அமர்ந்திருக்கும் ஆலயங்களில் ஒன்று. அங்கே ஆலயத்தை அறிமுகம் செய்துவைத்த நண்பர் “இன்றைக்கு மணவாள மாமுனிகள் வந்திருக்கார். பெருமாளை சேவிச்சுட்டு போவார்” என பேசிக்கொண்டே சென்றபோது மீண்டும் அந்தக் காலமின்மை உணர்வை அடைந்தேன். ”பகல்பத்து விழாவுக்கு இங்கே நம்மாழ்வார் உக்காந்திருப்பார். இதோ இங்கே ராமானுஜர்….” அவர்கள் அனைவருமே என்றுமுள்ள நிகழ்காலத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.ஆழ்வார் திருநகரியில் நண்பர் வெங்கட்ராமன் எங்களுக்காகக் காத்திருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர். அம்பேத்கார் -காந்தி இணைப்பைப்பற்றிய சிந்தனைகளை தொடர்ந்துவருபவர். நண்பர் சேஷகிரி ஆர்வார்திருநகரிதான். அவர் அங்கே திருவிழாவில் ஈடுபட்டிருந்தமையால் தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியவில்லை. ஆனால் தற்செயலாக நேரில் பார்க்கமுடிந்தது. நண்பர்கள் அனைவருக்குமே அவர் தன் கடிதங்கள் வழியாக நன்கு அறிமுகமானவர். கட்டித்தழுவல்கள், கிண்டல்சிரிப்புகள்.மதியம் நெல்லை வந்தோம். அங்கிருந்து காரில் ஊர். மூன்றுநாட்களுக்குள் இத்தனை ஊர்கள், இத்தனை நண்பர்கள், இவ்வளவு சொற்கள். வாழ்க்கையை அள்ளியள்ளி நிறைத்துக்கொள்வது என்றால் இதுதான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய பதிவுகள்
படிக்க

பயண இலக்கியம்
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்
நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்
தன்னை அழிக்கும் கலை
நின்றிருந்துகிடந்த நெடியோன்
ஆதிச்சநல்லூர் சிதம்பரம்

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன். அச்ச (18-May-19, 2:33 am)
பார்வை : 3
மேலே