பொய்யும் களவும் புனைந்து வரும்பொருள் ஒண்புலவர்க்கு சேருமோ - புலவர் நிலை, தருமதீபிகை 224

நேரிசை வெண்பா

பொய்யும் களவும் புனைந்து வரும்பொருள்தான்
மெய்யும் அருளும் மிகமேவிச் - செய்ய
ஒருநிலையில் நிற்கின்ற ஒண்புலவர்க்(கு) எங்ஙன்
பெருநிலையில் சேருமோ பேசு. 224

- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொய் களவு முதலிய வஞ்சவினைகளால் பெருகி வருகின்ற பொருள், நெஞ்சம் தூய புலவர்களிடம் நிறையச் சேருதல் அரிது; சேர்மானத்தின் தீர்மானம் தெரிக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், கல்வியாளரது செல்வ நிலையை உரைக்கின்றது.

பொருள் கற்றவரிடம் பெருகி வராமல் அருகி நிற்றற்கு நேரான காரணத்தை இப்பாடலில் நேரே காண வந்திருக்கின்றோம்.

உலக நிலையில் வெளியே பறந்து திரியும் தொழில் முயற்சிகளிலே தான் பொருள் விளைவுகள் பொருந்தி இருக்கின்றன.

உழவு, வாணிகம், கைத்தொழில் முதலிய செல்வத் துறைகளையெல்லாம் அறவே கைவிட்டுக் கல்வித்துறை ஒன்றிலேயே கண்ணும், கருத்துமாய்ப் புலவர் எண்ணுான்றி நிற்கின்றனர்; ஆகவே அவர்க்குப் பொருள் வரவு பொருந்தாது போகின்றது.

பொருள் புறத்தே விரைந்து அலைந்து விழைந்து தேடும் நிலையது; அறிவு அகத்தே அமர்ந்திருந்து நுழைந்து நாடும் தகையது. அது வஞ்சம் சூதுகளால் வருவது; இது நெஞ்சம் தூய்மையால் நிறைவது. அது வன்கண்மையில் வளர்ந்து குவிவது; இது மென்கண்மையில் எழுந்து பொலிவது.

இங்ஙனம் மாறான மருள் நிலையில் மருவி நிற்கும் பொருள் அருள் நிலையில் துருவியுள்ள புலவரிடம் அணுகாமல் அகல நேர்ந்தது.

உலக போகங்களுக்கெல்லாம் பொருள் மூலகாரணமாயுள்ளமையால் அதனை எவ்வழியும் எப்படியும் யாது செய்தாயினும் தேடிச் சேர்க்க வேண்டும் என்னும் பேராவல் மனிதரை நன்கு பிணித்திருக்கின்றது. அந்த ஆசையால் எந்த நிந்தனையையும் பொருள் செய்யாமல் பொருளையே பொருளாக நாடி மருள் மீதுார்ந்து ஓடி மக்கள் மால் கொண்டு உழல்கின்றனர்.

அவ்வாறான அவல நிலைகளில் செவ்விய புலவர் செல்ல இயலாதாதலால் செல்வ நிலையில் சேராது நின்றனர்.

புலமையாளரது இந்த நிலைமையை உருகி உணர்ந்தே பண்டைக் காலத்திலிருந்த அரசர்களும், செல்வர்களும், பொது சனங்களும் அவர்களை அன்புரிமையுடன் பண்பு பாராட்டி யாவும் உதவி ஆதரித்து வந்தனர். அந்த ஆதரவு ஆட்சி மாற்றத்தால் காட்சி மாறியது. அந்நாளில் அரசர் மதித்து வந்த வரிசை நலங்கள் பின்னாளில் விரசங்களாய் இழிந்தன என்று வருந்துகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-19, 5:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே