செய்யும் தொழிலை,நீ செவ்வையாய்ச் செய்துவரின் - கரும நலன், தருமதீபிகை 234

நேரிசை வெண்பா

செய்யும் தொழிலை,நீ செவ்வையாய்ச் செய்துவரின்
எய்யும் பொருள்கள் எளிதாயுன் - கையின்கண்
வந்து குவியுமே வாராத பேரெல்லாம்
முந்து பணிவர் முதல். 234

– கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செய்ய உரிய தொழிலைச் செவ்வையாகச் செய்துவரின் அரிய பொருள்கள் யாவும் எளிதே வந்து குவியும்; பெரிய மனிதர் எல்லாரும் முந்தி வந்து முன் பணிவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நேர்மையும் சீர்மையும் நிறைந்து நிற்பது செவ்வை எனப்படும். செய்வினை திருந்தச் செய் என்றபடி செயல் ஆற்றும் இயல்பினையுடையவன் உயர்நலம் அடைகின்றான்.

தொழில் செம்மையுடையது ஆயின் அதில் பல நன்மைகள் விளைகின்றன. அவ்வினையாளன் வியத்தகு பயன் எய்தி நயத்தகு நன்மை மிகப் பெறுகின்றான்..

தாம் எய்த விரும்பி எவரும் ஏங்கி நிற்கின்ற அரிய செல்வங்களை எய்யும் பொருள் என்றது. அரும் பெறலான பெரிய செல்வங்கள் எல்லாம் திருந்திய தொழிலாளியிடம் வலிந்து வந்து சேரும் என்றமையால் திருவுக்கும் தொழிலுக்கும் உள்ள உறவுரிமை அறியலாகும்.

வள்ளுவரின் ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தின்,

‘மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள்‘ குறள் எண் 617

என்னும் அமுத வாக்கில் தாளின் ஆழம் காண்க. முயற்சியில் திரு உள்ளது என்ற பொருளோடு ஆள்வினையாளனது கையிலும் காலிலும் அது தழுவி மிளிர்கின்றது எனவும் ஒளி புரிகின்றது. வினையாளன் திருவாளன் ஆகின்றான்.

உண்மையான உழைப்பில் தெய்வத்தன்மை உறைந்துள்ளது: அதனால் அது திவ்விய பலன்களை. விளைத்தருள்கின்றது.

“All true work is sacred. In all true work, were it but true hand-labour, there is something divine" (Carlyle)

"மெய்யாகச் செய்யும் தொழில்கள் யாவும் புனிதமானவை: அவற்றுள் நல்ல கையால் செய்வதில் புதிய ஒரு தெய்வத் தன்மை புகுந்துளது' எனக் கார்லைல் என்னும் மேல் நாட்டுப் பேரறிஞர் கூறியிருப்பது ஈண்டுக் கூர்ந்து சிந்திக்கத் தக்கது.

சீதேவி பெற்ற திருமகளாம் செய்தொழிலார்
பூதேவ ராவர் பொலிந்து.

தொழில் திருவின் செல்லக் குழந்தை. அந்த அருமைத் திருமகளை உரிமையாக மணந்து கொண்டவர் அரிய செல்வங்களை யெல்லாம் ஒருங்கே பெற்று உலகில் உயர்ந்த தேவதைகளாய்ப் பொலிந்து விளங்குகின்றனர்.

பொருள்கள் வந்து குவியுமே; வாராத பேரெல்லாம் முந்து பணிவர் என்றது செல்வ நலங்கள், தேசமதிப்பு, வேந்தரும் விழைந்து வந்து பார்க்கும் வியத்தகு மேன்மை முதலிய உயர்ந்த மாட்சிகள் எல்லாம் இனிது பெருகி ஒளி செய்து நிற்கின்ற அரிய காட்சி நிலைகள் தெரிய வந்தது.

கருமமே கருதி நிற்பவரிடம் பெருமைகள் யாவும் பேணி வருகின்றன; அவ்வுரிமையை உணர்ந்து உயர்நலம் பெற வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-19, 5:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே