“உழைச்சுப் பழகுன உடம்புக்கு ஓய்வெடுக்கப் பிடிக்காது” - இஸ்திரி தொழிலாளி கண்ணன்

கண்ணனுக்கு வயது 80. சென்னை, கீழ்பாக்கத்திலிருக்கும் பெரும்பாலானோருக்கு நன்கு அறிமுகமானவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்துவருகிறார். வயதைப்போலவே அவரின் அனுபவங்களும் முதிர்ச்சியானவை.



``சொந்த ஊரு பண்ருட்டி. என் சின்ன வயசுலயே அப்பா, அம்மா ரெண்டுபேரும் இறந்துட்டாங்க. சின்னம்மா கொடுமை தாங்க முடியாம, என் வயசுப் பசங்களோட சேர்ந்து கல் அறுக்குற வேலைக்காக சென்னைக்கு வந்துட்டேன். மூணு வருஷம் கல் அறுத்தேன். என் சித்தப்பா பரங்கிமலையில இருக்கிற மிலிட்டரி கேம்ப்ல துணி இஸ்திரி போடுற கான்ட்ராக்ட் எடுத்திருந்தாரு. என்னைக் கூட்டிட்டுப் போய் தொழிலைக் கத்துக்கொடுத்தாரு.

ஒரு வருஷத்துல கான்ட்ராக்ட் முடிஞ்சிருச்சு. அடுத்து வந்த கான்ட்ராக்டர்கிட்ட என்னை சேர்த்துவிட்டுட்டுப் போனாரு. அப்போதான் மிலிட்டரிக்காரங்க துணியை இஸ்திரி போட தனியா ஆள் எடுக்கணும்னு முடிவு பண்ணினாங்க. ஆனாலும் என்னை அனுப்ப மனசில்லாம, சிவில் துணிகளை இஸ்திரி போடுறதுக்காக வெச்சிருந்தாங்க. மிலிட்டரில எடுத்த ஆளு, அவங்களோட காக்கித் துணிகளை இஸ்திரி போடுவார். இஸ்திரிப் பெட்டியைக் காலணாவுக்கு வாடகைக்கு எடுத்துட்டுப் போய், சிவில் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுத்துட்டு அதுக்கான கூலியை வாங்கிப்பேன். மிலிட்டரி கேம்ப்லயே சாப்பிட்டுட்டு, அங்கேயே தங்கிருவேன்.

அந்த நேரத்துல, பெரிய ஆபீஸரா ஒரு சிங் வந்தாரு. ஒரு நாளு இஸ்திரி போடுற இடத்துக்கு வந்து பார்த்தாரு. அப்போ, மிலிட்டரி துணியை இஸ்திரி போடுறதுக்கு சவுக்கு மரக் கரியை பயன்படுத்துவாங்க. அதை மிலிட்டரிலயே வாங்கிக் கொடுப்பாங்க. சிவில் துணிங்களுக்கு நான் `காட்டுக்கரி’னு சொல்ற வேலிகாத்தான் மரக் கரியை வாங்கிப் பயன்படுத்துவேன். இஸ்திரி போடுற இடத்துக்கு வந்த அந்தப் பெரிய ஆபீஸரு, நான் மிலிட்டிரி கரியைப் பயன்படுத்திதான் சிவில் துணிங்களுக்கு இஸ்திரி போட்டு காசு சம்பாதிக்கிறேன்னு சொல்லி, என்னை அனுப்பச் சொல்லிட்டாரு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேக்கலை. அதோட மிலிட்டரி கேம்ப் சகவாசம் முடிவுக்கு வந்திருச்சு.

நான் அங்கே வேலை பார்த்தப்போ ஒரு ஆபீஸரு வெளிநாட்டுக்குப் போனாரு. அப்போ அவரு பயன்படுத்தின டிரங்க் பெட்டியை என்கிட்ட குடுத்துட்டுப் போயிருந்தார். அதைக் எடுத்துக்கிட்டு அப்படியே கால் போன போக்குல போனேன். ராமாவரத்துல எம்.ஜி.ஆர் வீட்டுப் பக்கமா போனப்போ, அங்கே இருந்த இஸ்திரி கடையில வேலை கேட்டேன். அவர் ‘வேலை தர்றேன். போயிட்டு காலைல வா’னு சொன்னாரு. ‘எனக்கு தங்குறதுக்கு இடம் கிடையாது’னு சொன்னேன். ‘கடை வாசல்ல படுத்துக்கோ’ன்னார். அடுத்தநாள்லருந்து இஸ்திரி போட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் கடை சாவியை என்கிட்ட கொடுத்து, கடைக்குள்ளவே படுத்துக்கச் சொல்லிட்டாரு. சாப்பாடு வெளியில. அது ஒத்துக்காமப் போச்சு. முதலாளிக்கிட்ட சொன்னேன். உடனே, ‘நம்ம வீட்டுலயே சாப்பிட்டுக்க’னு சொல்லிட்டாரு. அந்த அளவுக்கு என்மேல நம்பிக்கை வெச்சிருந்தார்.

ஒருநாள் ராத்திரி சாப்பிட்டுட்டு வந்து கடையில படுத்தேன். ராத்திரி ரெண்டு மணிக்கு முழிப்பு தட்டிருச்சு. தூக்கமே வரலை. எழுந்து இஸ்திரி போட்டேன். எல்லாத் துணிகளையும் விடியறதுக்குள்ள இஸ்திரி போட்டு அடுக்கி வெச்சிட்டேன். காலைல கடைக்கு வந்த முதலாளி, அசந்து போயிட்டாரு. என்னை ரொம்ப மரியாதையா நடத்த ஆரம்பிச்சார். மூணு மாசத்துல கடை முதலாளியை ‘அண்ணன்’னு, அவர் மனைவியை ‘அண்ணி’னு சொல்ற அளவுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டாங்க. ஒருநாள் அவர் என்னைக் கூப்பிட்டு, ‘உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’னு சொன்னாரு. ‘நான் சம்பாதிக்கிறது எனக்கே பத்தலை; எந்தச் சேமிப்பும் கிடையாது; நான் எப்படிக் கல்யாணம் பண்றது, யாரு பொண்ணு தருவாங்க?’னு கேட்டேன். அவர், ‘என் அக்கா பொண்ணு ரெட்ஹில்ஸ்ல இருக்கு. உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’னாரு.



100 ரூபாய் செலவுல புடவை, ஜாக்கெட் எடுத்துக்கிட்டுப் பொண்ணு பார்க்கப் போனோம். எனக்கும் பொண்ணைப் பிடிச்சிருந்திச்சி. பொண்ணும் ‘என்னைப் புடிச்சிருக்கு’னு சொல்லிடுச்சி. (கண்ணனின் மனைவியின் பெயர் ராதை; பெயர்ப் பொருத்தம் அமோகம்). ஜாதகம்கூட பார்க்கலை. உடனே நிச்சயம் பண்ணிட்டு வந்தோம். கொஞ்ச நாள்ல கல்யாணம். என் நிலைமை தெரிஞ்சு இஸ்திரி கடைக்கு வர்ற வாடிக்கையாளர்கள் எனக்குப் பல வகையில உதவி செஞ்சாங்க. ஒருத்தர் ஆயிரம் கல்யாணப் பத்திரிகை அடிச்சுக் கொடுத்தாரு. பந்தல் போடுறது, மைக்செட், வாழைமரம்னு எனக்குத் தெரிஞ்சவங்க இலவசமாவே செஞ்சு கொடுத்தாங்க. கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சுது.

ஒரு கட்டத்துல என்னோட முதலாளியும் அவங்க மனைவியும் இறந்துட்டாங்க. அது என் மூத்த பையன் பிறந்திருந்த சமயம். எழும்பூர்ல ஒரு கடைல இஸ்திரி போடுறதுக்காக வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாளைக்கு நாலு ரூபாய் கூலி. வாரத்துக்கு 28 ரூபா கிடைக்கும். வீட்டு வாடகை 10 ரூபா. குழந்தை, வீட்டுச் செலவுனு நிறைய தேவைப்பட்டது. `சம்பளம் கட்டுப்படியாகலை’னு வேலையை விட்டுட்டேன்.கையில இருந்த காசைவெச்சு ஒரு தள்ளு வண்டியும் இஸ்திரிப் பெட்டியும் வாங்கினேன். அயனாவரத்துலருந்து ரோட்டோரமா வண்டியைத் தள்ளிட்டு வந்தேன். கெல்லீஸ்கிட்ட வந்தப்போ, ஒரு வாட்ச்மேன் என்னைக் கூப்பிட்டு நாலு துணியை இஸ்திரி போடக் கொடுத்தாரு. அதுதான் முதல் போணி. அப்போல்லாம் புது ஆளுங்களை நம்பி இஸ்திரி போடத் துணிகளைக் கொடுக்க மாட்டாங்க. அன்னைக்கு ரெண்டு மூணு பேருக்குத்தான் இஸ்திரி போட்டுக் குடுத்தேன்.

இஸ்திரி போட ஆரம்பிச்சு 50 வருஷம் தாண்டிருச்சு. என்னோட நாலு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு பையனும் பொண்ணும் இங்கே பக்கத்துலதான் இஸ்திரி போடுறாங்க” என்று தன் வாழ்க்கையை ஒரு திரைப்படம்போலச் சொல்லி முடிக்கிறார் கண்ணன். இஸ்திரி போடுவதுடன் ஒரு கம்பெனியில் இரவுநேர வாட்ச்மேனாகவும் வேலை பார்க்கிறார். இரவு முழுவதும் வாட்ச்மேன் வேலை, காலையில் இஸ்திரி கடை. மதியத்துக்கு மேல் வீட்டுக்குப் போய், சிறிது நேரம் தூங்குகிறார். ``இஸ்திரிப் பெட்டி சூட்டில் பல மணி நேரம் நின்றுகொண்டே வேலை பார்ப்பது கஷ்டம்தானே...’’ என்று கேட்டால், ``சூட்டுல நின்னு இஸ்திரி போடுறதால சில நேரம் நெஞ்சு, வயிறெல்லாம் சூடாகி எரியிற மாதிரி வலி எடுக்கும். கீழ்ப்பாக்கம் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அப்பப்போ போவேன். எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு, ‘ஒண்ணும் இல்லை, மாத்திரை சாப்பிட்டா சரியாப் போயிடும்’னு டாக்டருங்க அனுப்பிடுவாங்க. பொட்டியத் தூக்கித் தூக்கி கைவலி எடுக்கும். அதுக்கும் மாத்திரைதான். ரொம்ப நேரம் நிக்குறதால கால்வலியும் இருக்கும். அதுக்கு ஆஸ்பத்திரியில மெழுகு ஒத்தடம் கொடுப்பாங்க.

கோடைக்காலத்துல, பொட்டியோட சூடு, வெயில் ரெண்டும் சேர்ந்து ரொம்ப சோர்வாக்கிடும். நிக்க முடியாத அளவுக்கு சூடா இருக்கும். ஒரு துண்டை நனைச்சு உடம்புல போட்டுக்கிட்டு இஸ்திரி போடுவேன். துண்டு காயக் காயத் திரும்பவும் நனைச்சு உடம்புல போட்டுப்பேன். அதனால அப்பப்போ சளி வேற புடிச்சுக்கும். அதுக்கும் மாத்திரைதான். வெயில் நேரத்துல சாப்பாடு இறங்காது. பாட்டில் பாட்டிலா தண்ணி குடிப்பேன். இன்னைக்கு வீட்டுலருந்து கறிச்சோறு கொண்டுவந்தாங்க. அப்படியே இருக்கு. இன்னும் சாப்பிடலை. வாட்ச்மேன் டூட்டிக்குப் போகும்போது சாப்பிடணும்” என்றார்.

``வயசாகிருச்சு... இன்னும் ஏன் இப்படி உழைக்கணும், வீட்டுல ஓய்வெடுக்கக் கூடாதா?’’ என்றால், ``எங்கே ஓய்வெடுக்குறது... ஏதாவது ஒரு தேவை வந்துக்கிட்டே இருக்கு. குடும்பத்தோட சேர்ந்து நானும் ஓடுனாதான் சமாளிக்க முடியும். உழைச்சுப் பழகுன உடம்புக்கு ஓய்வெடுக்கப் பிடிக்காது. இந்தத் தொழில் மூலமாத்தான் புள்ளைங்களை வளர்த்தேன், நல்லது கெட்டதெல்லாம் செஞ்சேன். ஆனாலும் சில நேரங்கள்ல, ‘ஏன்டா இந்தக் கஷ்டம்’னு தோணும். என் புள்ளைகளும் இதே வேலையைத்தான் பார்க்குறாங்க. அதுதான் வருத்தமா இருக்கு” என்கிறார் கண்ணன்.



15 நிமிட உடற்பயிற்சிகள் ஆரோக்கியம் காக்கும்

இஸ்திரி தொழில் செய்பவர்கள் ஆரோக்கியம் காக்கக் கடைப்பிடிக்க வேண்டியவற்றை விளக்குகிறார் பொது மருத்துவர் தினகரன்.

“இஸ்திரி போடுபவர்கள் நீண்டநேரம் நின்றுகொண்டே இருப்பதால், நரம்புச்சுருள்நோய், எலும்புத் தேய்மானம் போன்றவை ஏற்படும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, சில நிமிடங்கள் உட்கார வேண்டும். எடை அதிகமாக இருக்கும் இஸ்திரிப் பெட்டியை ஒரே கையைப் பயன்படுத்தித் தேய்ப்பதால், தோள் மற்றும் கழுத்துப் பகுதியில் எலும்புத் தேய்மானம் ஏற்படும். அதனால் இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றித் தேய்ப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தசைகளை பலப்படுத்தும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்தால், தசைகள் பலப்படும்; ஆரோக்கியத்துக்கும் உதவும். வயதானவர்கள் இந்தத் தொழிலைச் செய்யும்போது இடுப்புப் பகுதிக்கான பெல்ட்டை அணிந்துகொள்ளலாம்.

இஸ்திரிப் பெட்டியிலிருக்கும் வெப்பம் உடலை பாதிக்காமலிருக்க பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சிலர் இஸ்திரி போடும்போது ஈரத்துணியை நனைத்து உடலில் போட்டுக்கொள்வார்கள். சைனஸ் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படவில்லையென்றால், அப்படிச் செய்யலாம். சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும்.

நீராகாரங்களை அதிகம் அருந்த வேண்டும். மோர், எலுமிச்சைச் சாறு போன்ற எளிய பானங்களைக் குடிக்கலாம். உணவிலும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆறு முதல் ஏழு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம்.”

வந்தனை செய்வோம்...

ஜெனி ஃப்ரீடா

எழுதியவர் : ஜெனி ஃப்ரீடா - (19-May-19, 9:19 pm)
பார்வை : 39

மேலே