கடுகு

நீங்கள் கடுகை பார்த்து இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். அதனோடு பழகி இருப்பீர்கள் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஒரு கடுகை இரண்டு விரல்கள் நடுவில் வைத்து உருட்டும்போது நமக்குள் ஒரு சாலை அமைப்பது போன்ற உணர்வு கிளுகிளுப்பு குறுகுறு எல்லாம் வரும்.

அந்த கடுகில் ஒன்றுதான் என் நேற்று இரவை அதன் பாதி அடிமையாக்கி வைத்திருந்தது.

வழக்கமான கடையில் வழக்கமான பெண்ணை பார்த்து ரசித்தபடித்தான் நான் மளிகை ஆர்டர் கொடுத்தேன். அவளும் வழக்கமான புன்னகையுடன் எடுத்தும் கொடுத்தாள். அதில் இந்த கடுகும் ஒன்று.

கருப்பாய் உருண்டு திரண்டு இருக்கும் இந்த கடுகு எதில் இருந்து வருகிறது என்று சிறுவயதில் ரொம்பநாளாய் அரித்த கேள்வி. எந்த டீச்சரிடமும் கேட்டது இல்லை. டீச்சரிடம் எனக்கு எப்போதும் கேள்விகள் வருவதே இல்லை. பார்த்து கொண்டிருந்தால் போதும்...அவர்கள் பாடங்கள் நடத்துவதை.

வழக்கம் போல் எல்லா இரவும் எட்டு மணிக்கு சாப்பிட்டுவிடுவேன். இதில் மட்டும் நேரம் தவறக்கூடாது.

பெங்களூர் ஸ்னேஹா போனவருடம் கேட்டாள்..."உங்க நியூ இயர் ரெசலுஷன் என்ன ஸ்பரி..."

"நான் தமிழனல்லவா"

யா...சோ வாட்?

"வேளாவேலைக்கு சாப்பிட்டு வேளாவேலைக்கு தூங்கவேண்டும்" அதுதான் ஒவ்வொரு வருடமும், இந்த வருடமும், வரும் வருடங்களும்...என்றேன்.

சகவாச தோஷத்தில் இப்போது அவளும் அதை தொடர்ந்துகொண்டு முடிந்த அளவு பரப்பியும் வருகிறாள் என்று கேள்வி. வாழ்க வாட்ஸப். ஆக இந்த விஷயத்திலும் "நான் தமிழன்".

எட்டுமணிக்கு சாப்பிட்டபோது ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை. இரவில் அறுசுவை உணவை விரும்ப மாட்டேன். மெல்லியதாக இருக்க வேண்டும். அது ரசம், ஒரு காய்,  அப்பளம், மோர்...முடிந்தது.

சாப்பிடும்போதெல்லாம் புதுமைப்பித்தன் நினைவுக்கு வரும். அம்மாவிடம் அதுபற்றி பேசிக்கொண்டே சாப்பிட ரொம்ப பிடிக்கும்.
என் அம்மாவும் பேச்சோடு பேச்சாய் சாதத்தின் அளவு கூட்டிக்கொண்டு போய் விடுவாள்.

இப்படி மெய்மறந்த நேரத்தில்தான் அந்த பயங்கரவாதி என் கடைவாய் பல் நடுவே ஏறி அமர்ந்திருக்க வேண்டும். கவனிக்கவில்லை.

மாடியில் காலாற்றிக்கொண்டே யோசிப்பது பிடிக்கும். எப்போவாவது ஜில்லென்று காற்று இருக்கும். எப்போவாவது மதிலில் அந்த பூனையும் அமர்ந்திருக்கும். எப்போவாவது சில பறவைகள் மரத்திலிருந்து சிலிர்த்து அடங்கும்.எப்போவாவது அவள் தலை ஜன்னலோரத்தில் தெரிந்து மறையும்.
எனக்கும் சிலிர்த்து அடங்கும்.

கடுகு கொஞ்சம் ஊறி இருக்க வேண்டும். வாய்க்குள் நமநமவென ஊறத் தொடங்கியது.
நாக்கு போர் வீரனைப்போல் தன் நுனியால் ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்தது.


கடுகு குகை வாசலுக்கு நடுவே பாறை போல் வசமாய் சிக்கி இருந்தது. விரல், குச்சி,ஊசி போன்ற பழம்பெரும் ஆயுதங்கள் எனக்கு சரி வராது. ஆயுதம் ஏந்தும் உடம்பும் அல்ல இது.வாயும் மிக சிறியது. வாகாய் திறந்து மூடவே சோம்பல் படும்.

என் ஒரே ஆயுதம் நாக்குதான். தமிழ்நாட்டை 50 வருடமாய் ஆளும் உறுப்பு அது...எத்தனை கதைகள்...எத்தனை வசனங்கள்...அம்மா...பேசிப்பேசியே தமிழனை தின்று தீர்த்த நாக்கு... அது இஷ்டம்போல் சுழன்று அடித்தது. முடிந்த மட்டிலும் முட்டி முட்டி பார்த்தது. கடுகு அசையவில்லை. நாக்கு பின்வாங்கியது.

வலியில்லை என்றாலும் அந்த அந்நியனை வாய் வெறுத்தது. கடுகின் உள் இருப்பை அது சற்றும் எதிர்பார்க்கவில்லை. தக்குணுன்டு ஒன்று வாயை பாடாய் படுத்தியது. மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்து பிரதிலிபி கட்டுரைகள் பற்றி நினைத்து கொண்டேன்.

கொஞ்சம் ஓவராய்தான் போகிறோமோ என்று தோன்றியதும் பயமாய் இருந்தது.
"போய்த்தான் பாப்போமே என்னத்தை பண் ணிருவாய்ங்க.."என்று தெம்பை தந்தபடி இருந்தாலும் நாக்கு தன் சதியாலோசனையை வாயுடன் செய்து கொண்டே இருந்தது. திடீர் திடீரென பல்லுக்குள் வளைந்து நெளிந்தெல்லாம் பார்த்தது.

இந்த முயற்சியில் எதுவோ சின்னதாய் தட்டுப்பட ஒரே குதூகலத்துடன் கிணற்றில் இறைப்பது போல் நாக்கு பாம்பு டான்ஸ் ஆடியபடி வெளியில் இழுத்துவிட்டது.
அதை வாயின் கண்காணிப்போடு நாக்கு ஒரு போஸ்டமார்ட்டம் செய்து பார்த்தபோது மதியம் சிக்கி கொண்ட ஒரு பருக்கை என்று தெரிந்ததும் நாக்கும் நானும் சோர்ந்து விட்டோம். இன்னும் என்னவெல்லாம் உள்ளே கெடக்கோ என்ற பயம் வேறு வந்துவிட்டது.

அப்போதுதான் அந்த போன். புதிய எண்ணாக இருக்கிறதே என்று ஹலோவினேன்.
ரமணன்.பிரதிலிபி ரமணன்...அவரின் முதல் அழைப்பு இது...குசலம் விசாரித்து கொண்டோம்.

அப்பறம்...கட்டுரை படிச்சீங்களோ? என்றேன்.
(கேட்டிருக்க வேண்டாம் இருந்தாலும் ஒரு நப்பாசை,பேராசை...)
என்ன கட்டுரை...நான் ஜெயகாந்தனே படிக்க மாட்டேன் என்றதும் சப்பென்று போய்விட்டது.

அடுத்த கட்டுரை (பாயாசம்) இவருக்குத்தான் என்று மனம் அந்த கடுப்பிலும் வெதும்ப அவர் பேசிக்கொண்டே போனார்.

மணிக்கொடியில் ஆரம்பித்து இரா.முருகன் வரை நீந்திக்கொண்டே இருந்தோம். இடை இடையே நாக்கு கிடைத்த மௌனமான நேரத்தில் தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவேயில்லை. அப்போதும் தோல்விதான் மிஞ்சியது.

ஒருவாறாக நாங்கள் பேச்சை முடித்த பிறகு கீழே சென்றேன்.

வாயில் நீரை வைத்து கொப்புளித்தும் அது வருவேனா என்று அடம் பிடித்தது.பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கடுகு தன் ஆஹ்ருதியை நன்கு பெருக்கி இருந்தது. நாக்கும் கடுகும் தங்கள் மிக்கி மௌஸ் ஆட்டத்தை நிறுத்தாமல் ஒரு வெறியோடு தொடர்ந்தன.

பேசாமல் தூங்கி தொலைப்போம் என்று நினைத்தாலும் ஒரு கடுகிடம் தோற்று போன குற்றவுணர்வு அதிகரித்தது.

படுத்துக்கொண்டே நாக்கால் நிமிண்டி நிமிண்டி பேச்சு வார்த்தை நடத்தினாலும் அது  OPS த்யானம் போல் திட்டம்போட்டு உட்கார்ந்து இருந்தது. என் கண்ணில் நீர் துளிர்த்தது. வாழ்வில் எந்த மாதிரியான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்?


இங்கிலீஷ் படம் போல் அழியப்போகும் உலகத்தை காக்க என்னை அவெஞ்சர்ஸ் கெஞ்சி கூத்தாடும் காட்சி, இந்திய ரிசர்வ் பேங்க் நாட்டை பொருளாதார மந்தத்தில் இருந்து மீட்க என்னை நியமிக்கும் சவால், ரஜினிகாந்துக்கு தெரியாமல் கமல்ஹாசன் தன் கட்சியை இம்ப்ரூவ் பண்ண எனக்கு போன் மேல் போன் செய்யும் கனவுகள்.. எல்லாம் இந்த கடுகால் அழிந்துவிடுமோ?

டேய்... டேய்.. என்று அம்மாவின் குரல் (வழக்கம்போல) மணி எட்டு என்றதும் அடித்துப்பிடித்து வாரிச்சுருட்டி எல்லாம் எழவில்லை. (வழக்கம்போல) சற்று திரும்பி புரண்டு படுத்து கொண்டேன்.

எந்த கனவாவது என் பழைய காதலிகளை நினைவு செய்யும். ஒவ்வொரு விடியலிலும் அப்படி ஏதேனும் வந்ததா என்று எழுமுன் யோசிப்பது என் வழக்கம். நேற்று அப்படி எவளும் வரவில்லை. மனம் பிரயாசை கொண்டது. ஏன் ஒருத்தி கூட வரவில்லை?

மனம் கவலையோடு கேட்டுக்கொண்டு இருந்தபோது நாக்கு கடைவாய் பல்லை மெல்ல துழாவி பார்த்தது.

கடுகு அங்கேயேதான் இருந்தது.

எழுதியவர் : ஸ்பரிசன் (19-May-19, 10:35 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 297

மேலே