யானை – கடிதங்கள்--------------------படித்தது

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,



நெல்லையப்பர் கோயிலுக்கு சில நாள்களுக்கு முன் சென்றிருந்தபொழுது அங்குள்ள யானை காந்திமதி சூழல் வெப்பத்தால் மிகவும் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் தும்பிக்கையால் உடலில் ஊதிக்கொணுடிருந்தது. கண்ணில் ஒளியே இல்லை. வாலைக்கூடத் தூணில் கட்டி, வெளிப்பிரகாரத்தில் அதன் கொட்டிலின் அருகில் நின்றுகொண்டிருந்தது. அருகில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே இருந்தன. தென்னையும் ஏதோ இரண்டு சிறிய மரங்களும்தான் இருந்தன. வந்தவர்கள் காசுகொடுத்து ஆசிர்வாதம் வாங்கி சென்றுகொண்டிருந்தார்கள்.



நான் வீட்டிற்கு வந்து மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அதே கடிதமாதிரியை எனக்குத் தெரிந்தவர்கள்மூலமும் அனுப்பித்தேன். கீழுள்ள செய்தி இன்று கண்ணில்பட்டதும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. சங்கரன்கோவில் கோமதி யானையைப்போல இதுவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லும் என்று நினைத்துக்கொண்டேன். சங்கரன்கோவில் கோமதி யானை பாகனிடம் பேசுவாள். பாகன் கேட்டால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மண்டையை ஆட்டி எல்லோருக்கும் தெரிவிப்பாள்.



(இன்னும் இந்த செய்தியில் மரம் வைப்பதைப்பற்றி சொல்லவில்லை. நிறைய Fan வைத்திருக்கிறார்களாம். நேரில் செல்ல வேண்டும்.)

லக்ஷ்மி



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,



உங்களுடைய இலஞ்சி யானை இறப்பு குறித்த பதிவினை படித்தேன்,

கோவில்களில் யானைகளை நாம் கையாளும் விதம் மிகுந்த வேதனைக்குரியது. மனிதர்களின் சுயசிந்தனையற்ற செயல்களினால் விலங்குகள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லிலடங்காததுதான்,கோவில்களில் மட்டுமல்லாமல் விலங்கியல் பூங்காக்கள் என்ற பெயரிலும் இதே வகையில் வாயற்ற ஜீவன்கள்படும் பாட்டினை என்னுடைய மகள் தன் வலை பதிவில் சிறிது நாட்கள் முன் பதிவேற்றியிருந்தார், உங்கள்பார்வைக்காக இங்கே,

இந்துமதி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலஞ்சி ஆலய யானை இறப்பு------------ஏப்ரல் 26, 2019
===========================
ஜெ



திங்கள் கிழமை உரையாடலில் இலஞ்சி கோவில் யானையின் மிதமிஞ்சின எடையைப் பற்றி சொன்னீர்கள். நேற்று அந்த யானை இறந்தே விட்டது



செல்வேந்திரன்



அன்புள்ள செல்வேந்திரன்,



வருத்தம்தரும் செய்தி. ஆனால் நான் அப்போதே அந்த யானை நெடுநாட்கள் வாழாதென்று உணர்ந்திருந்தேன். அதன் வயிறு தாழ்ந்து தொங்கியது. யானையின் வயிறு அவ்வாறு தொங்கக்கூடாது. அதன் இதயம் பழுதடையும். கால்களில் வீக்கம் வரும். தொடர்ச்சியான செரிமானமின்மை உருவாகும். இது யானைகளை அறிந்த எவரும் அறிந்திருக்கும் பொதுச்செய்திதான்



நமது ஆலயங்களில் யானைகள் மிகுந்த வதைக்குள்ளாகி வாழ்கின்றன. அதை திரும்பத்திரும்பச் சொல்லிவருகிறேன். அதன்பொருட்டே மதவாதிகளின் வசைகளையும் பெறுகிறேன். யானை கானுயிர். அது காட்டிலேயே இயல்பாக மகிழ்ச்சியாக இருக்கும். கடந்தகாலங்களில் யானைகள் எடைதூக்கவும் போருக்கும் தேவையாகின. ஆகவே அவை பழக்கப்படுத்தப்பட்டன. இன்று அத்தேவை இல்லை. இன்று யானைகள் சடங்குகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. அச்சடங்குகள் எவையும் ஆகமநெறி வழி வந்தவை அல்ல. வெறும் அணிச்சடங்குகள் மட்டுமே. அவற்றை காலத்திற்கேற்ப மாற்றுவதில் எப்பிழையும் இல்லை



சென்ற காலங்களில் யானைகள் மானுடரால் வளர்க்கப்பட்டபோது அதுகுறித்த விரிவான அறிவுத்துறை ஒன்று உருவாகி வந்தது. இன்றுகூட குருவாயூர் போன்ற இடங்களில் யானைகள் மரபான முறையில் பேணப்படுகின்றன – அவை கானகயானைகளைப்போல் மகிழ்ச்சியாக இருப்பதாக நான் சொல்லமாட்டேன். ஆனால் குறைந்தது அவை பேணவாவது படுகின்றன



இங்கே எந்த முறையான பயிற்சியும் இல்லாதவர்களும் குறைவான ஊதியம்பெறுபவர்களுமான பாகன்களால் அவை வளர்க்கப்படுகின்றன. மிகக்கொடூரமாக அவை நடத்தப்படுகின்றன. பெரும்பாலான தருணங்களில் அவர்களின் அறியாமையாலேயே யானைகள் இறக்கின்றன.



நம் ஆலயங்களிலும், டாப் ஸ்லிப் போன்ற கானுலா மையங்களிலும் யானைகள் பலவகையில் துன்புறுகின்றன. மூடுண்ட கல்மண்டபங்களில் கட்டப்படுகின்றன. அது யானையை நிலைகொள்ளாதாக்கும். யானை குறைந்தது முப்பது கிலோமீட்டர் தொலைவு நடந்தாகவேண்டிய விலங்கு. இல்லையேல் காலின் அடித்தோல் தடிக்கும். மூட்டுகள் இறுகும். எடைமிகுந்து உடல் நலியும். செரிமானச்சிக்கல் எழும். ஓரிரு கிலோமீட்டர்கூட இங்கே யானைகள் நடக்க விடப்படுவதில்லை.



யானைகளுக்கு இங்கே உணவு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை வழிபடுவதன் ஒரு பகுதியாக தேங்காய் வாழைப்பழம் வெல்லம் மிதமிஞ்சி அளிக்கப்படுகிறது. ஆகவே யானைக்கு உடல் எடை மிகுகிறது. சர்க்கரை நோய் உருவாகிறது. ஈரல் கெட்டுப்போகிறது. யானைகளை மொட்டைவெயிலில் நிறுத்திப் பிச்சை எடுக்க வைப்பது, பக்தர்களின் தலைகளை தொட்டு வாழ்த்தவைப்பது இங்கே சாதாரணம். தலைகளில் உள்ள பொடுகு – ஈஸ்ட் ஆகியவை யானையின் வெப்பமான ஈரமான துதிக்கைக் குழாய்க்குள் சென்றால் பல்மடங்கு பெருகி அதை நோயுறச்செய்கின்றன.



இங்கே நலமாக உள்ள யானைகள் மிக அரிது. பெரும்பாலானவை வளைந்த கால்களும் தாழ்ந்த வயிறும் உளச்சோர்வுகொண்ட அசைவுகளுடனும்தான் தெரிகின்றன. கோயில் யானைகளைப் பற்றிப் பேசியபோது அதற்குச் சிறந்த உதாரணமாக இலஞ்சியின் யானை வள்ளியை நான் குறிப்பிட்டேன்.



வள்ளி எப்படி இறந்தது என்று ஆராய்ச்சி எல்லாம் செய்யவேண்டியதில்லை. நம் மூடபக்தியால், அறியாமையால் அது கொல்லப்பட்டது



ஜெ
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வானோக்கி ஒரு கால் -1---------------April 1, 2019

காலை ஐந்தரை மணிக்கு இலஞ்சி சென்றேன். குற்றாலத்தின் ஒரு பகுதியாகவே இலஞ்சியை சொல்லவேண்டும். ஐந்து கிமீதான். ஆனால் குற்றாலத்தின் சுற்றுலாத்தன்மை இல்லை – ஆங்காங்கே பழைய வீடுகள் வாடகைக்கு கிடைக்கும் என்னும் அறிவிப்புகளை தவிர்த்தால். இலஞ்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். 2008-இல் ஒரு சினிமா முயற்சிக்காக அங்கே வந்து ஒரு பழைய இல்லத்தில் சிலநாட்கள் தங்கியுமிருக்கிறேன்.

இலஞ்சியும் காலையில் துயிலெழவில்லை. மலைகள் குளிர்ந்து நீலமாகி சூழ்ந்திருந்தன. தென்னைமரங்களை ஓலையசையச் செய்யும் அளவுக்கு காற்று இல்லை. கோயிலைச்சுற்றி காலை உடற்பயிற்சி செய்வோர் நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர். ஒரு 16 வயதுச் சிறுமி ஓடுவதை பார்த்தேன். ஓட்டப்பந்தய வீரர்களின் ஓட்டம் முற்றிலும் வேறுவகையானது, பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. அவர்கள் காற்றில் தென்னையோலை அசைவதுபோல இயல்பான விசையுடன் செல்கிறார்கள்.

கோயிலில் சிற்பங்களை பார்த்துக்கொண்டு சுற்றிவந்தேன். அரையிருள் நிறைந்திருந்த மண்டபங்கள். நாதஸ்வரம் மூச்சுவல்லமை இல்லாமல் இருமல் போல எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது. தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் தெய்வங்கள். ஊரிலிருந்து கிளம்பியபின்னர் தன்னந்தனியான தெய்வங்களையே பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆலயங்களின் சுற்றுவழிகளில் எவருமே இல்லை. காட்டில் இருக்கும் தனிமையும் ஓசையின்மையும். கல்லால் ஆன காடு. தெய்வங்கள் அதற்குள் புலிகள்போல் யானைகள்போல் மான்கள்போல் மறைந்திருக்கின்றன. குரங்குகள்போல தூண்களில் சிற்பங்கள்.

வாசலில் யானை நின்றிருந்தது. காலையிலேயே நீராட்டப்பட்டு நெற்றியில் பொட்டு அணிந்திருந்தது. குற்றாலம் பகுதிகளில் யானைகள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எல்லா கோயில்யானைகளும் மிகுஎடை கொண்டவை. வயிறு தாழ்ந்து தொங்கும். சிலநாட்களிலேயே அவற்றுக்கு காலில் வீக்கமும் வலியும் வந்து விரைவில் முடமாகிவிடும். குருவாயூர் போன்ற யானைக்கொட்டில்களில் நிலைமை சற்று மேல். கேரளத்தில் யானைப்பராமரிப்புக்கென்றே மரபான மருத்துவர்கள் உண்டு. பருவகால நெறிகளும் உண்டு.,


ஜெ
------------------------------------

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல்கள் 2019 (20-May-19, 5:17 am)
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே