வள்ளியோர் வண்ணத்தால் தெள்ளியோர் தண்டிகைமேல் ஊர்ந்தார் - புலவர் நிலை, தருமதீபிகை 226

நேரிசை வெண்பா

எள்என்னும் முன்னமே எண்ணெயாய் நின்றளந்த
வள்ளியோர் அன்றிருந்த வண்ணத்தால் - தெள்ளியோர்
தண்டிகைமேல் ஊர்ந்தார் தனியாட்சி யேபுரிந்தார்
உண்டியுமின்(று) உண்டோ உரை. 226

- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முன்பு கல்வியாளரை உரிமையுடன் போற்றிய வள்ளல்கள் பலர் இருந்தமையால் புலவர்கள் சிவிகைகளில் ஊர்ந்தார்; தேச ஆட்சிகள் புரிந்தார்; மன்னவர் குரவராய் மன்னி நின்றனர்; இன்று உண்ணவும் உணவு உண்டோ? என்று வருந்துகிறார் கவிராஜ பண்டிதர்.

கல்வியறிவு தெளிந்துள்ளமையால் புலவர் தெள்ளியோர் என வந்தார். கொடையாளிகளை வள்ளியோர் என்றது.

உள்ளனவெல்லாம் உவந்து உதவிய வள்ளல்கள் எல்லார்க்கும் கொடுத்து வந்தாலும், புலவர்களை எதிர்கொண்டு கண்டு போற்றி வழங்கினமையால் அவர் புகழை இவர் போற்றி நின்றார்.

ஒன்று வேண்டும் என்று வாய் திறந்து சொல்லும் முன்னரே பலவும் வாரிக் கொடுத்த அந்நிலைமை கருதி எள் என்னும் முன்னம் எண்ணெயாய் அளந்தது என்றது.

சேர மன்னனிடம் ஒளவையார் ஒரு முறை சென்றிருந்த போது ஈன்ற ஆடு ஒன்று வேண்டும் என்று குறிப்பித்தார். உடனே அவ்வேந்தன் உவந்து தங்கத்தால் ஒரு ஆடு செய்து தந்தான். அவனது பெருந்தகைமையை வியந்து அப்பாட்டி புகழ்ந்து பாடிய பாட்டு அடியில் வருவது.

இன்னிசை வெண்பா

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான்கேட்கப் பொன்ஆடொன்(று) ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர்; கொடுப்பவர்
தாமறிவார் தம்கொடையின் சீர். - ஒளவையார்

நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநில மன்னன் தன்னிடம் அரிசி வேண்டி வந்த எளிய பாவலர்க்கு மலைபோல் ஒரு பெரிய யானையைக் கொடுத்தான்; அவன் கொடையையும் ஒளவைப் பாட்டி உவந்து பாராட்டியுள்ளாள்.

நேரிசை ஆசிரியப்பா

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
5அரிசி வேண்டினேம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலின் தன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே! அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
10போற்றார் அம்ம பெரியோர்தங் கடனே. 140 புறநானூறு

இந்தப் பாட்டைக் கொஞ்சம் கவனித்து நோக்கின் பழங்காலப் பண்புகளை உளங் காணலாகும். மடவன் என்றது கொடை மடம் கொண்டுள்ள அவனது குணநலம் தெரிய வந்தது.

இரும் கடறு வளைஇய - பெரிய காடு சூழ்ந்த, யானையின் உருவப் பொலிவும் பெருமிதமும் காண குன்றம் என்றது.

தம்நிலைமையை உணராமல் அள்ளிக்கொடுக்கும் வள்ளல்களை உல்லாசமாய் எள்ளி உரையாடி வருதலால் இவரது உள்ளப் பெருமை உணரலாகும். செல்வக் கொடையாளரும், கல்வித் திருவாளரும் உறவுரிமை கொண்டு மருவி வருவது உலகிற்குப் பெரிய நன்மையாய்ப் பெருகி எழுகின்றது.

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இல்லெனும்சொல் அறியாத சீகையில்வாழ் தானனைப்போய்
யாழ்ப்பா ணன்யான்
பல்லைவிரித்(து) இரந்தக்கால் வெண்சோறும் பழந்துாசும்
பாலி யாமல்
கொல்லநினைந் தேதனது கால்வாயைப் பரிசென்று
கொடுத்தான் பார்க்குள்
தொல்லையென(து) ஒருவாய்க்கு நால்வாய்க்கும் இரைஎங்கே
துரப்பு வேனே?

தானன் என்னும் சிற்றரசன் யானை வழங்கிய போது அந்தகக் கவி வீரராகவ முதலியார் இப்படிப் பாடியிருக்கிறார்; நால் வாய் – யானை; என் ஒரு வாய்க்கே சோறு கிடையாமல் நான் திண்டாடுகின்றேனே! எனக்கு மேலும் நால்வாயைக் கொடுத்தானே; இது என்ன கோலம்? என்று புன்னகையாடி யிருக்கிறார்.

புலவரின் வறுமையும், அவரைப் புரவலர் ஓம்பி வந்திருக்கும் பெருமையும் ஒருங்கே புலனாய் உவகை தருகின்றன.

ஏகம்பவாணன் என்னும் வள்ளல் புலவர்கட்குத் தேரும், கரியும், பரியும், பொருளும், உடையும், பிறவும் வாரிக் கொடுத்திருக்கிறார். அவரது கொடைத் திறனை வியந்து கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரும் வியந்து புகழ்ந்திருக்கிறார்,

நேரிசை வெண்பா

உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால்
கொலைககுரிய வேழம் கொடுத்தான் - தலைக்குரிய
வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப்
பாணணோ(டு) என்ன பகை? 1 பெருந்தொகை, 1188

சேற்றுக் கமலவயல் தென்னாறை வாணனையான்
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா(று) எவ்வா(று) அவன்? 2 பெருந்தொகை, 1189

என்சிவிகை என்கவிகை என்துவசம், என்கவசம்,
என்பரிஈ(து), என்கரிஈ(து), என்பரே - மன்கவன
மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற
பாவேந் தரைவேந்தர் பார்த்து. 3 பெருந்தொகை, 1190

தேருளைப் புரவி வாரணத் தொகுதி
திறைகொ ணர்ந்துவரு மன்னநின்
தேச மேதுனது நாம மேது?புகல்
செங்கையாழ் தடவு பாணரே!

வாரும் ஒத்தகுடி நீரும் நாமும்
மகதேவன் ஆறைநகர் காவலன்
வாண பூபதி மகிழ்ந்த ளிக்கவெகு
வரிசை பெற்று வருபுல வன்யான்

நீரும் இப்பரிசு பெற்றுமீளவர லாகும்
ஏகும் அவன் முன்றில்வாய்
நித்திலச் சிகர மாட மாளிகை
நெருங்கு கோபுரம் மருங்கெலாம்

ஆரு நிற்கும்; உயர்வேம்பு நிற்கும்; வளர்
பனையும் நிற்கும்; அதன் அருகிலே
அரசு நிற்கும்; அரசைச் சுமந்தசில
அத்தி நிற்கும் அடையாளமே. 4

வாணன் புலவர்களுக்கு உதவி வந்த உபகார நிலைகளைக் கம்பர் இவ்வாறு அன்புடன் உவந்து கொண்டாடியிருக்கிறார்.

பாடல்களைக் கண்ணுான்றி நோக்கினால் எண்ணுான்றியுள்ள உல்லாச வளங்களும் சல்லாப வினோதங்களும் எல்லார்க்கும் இனிது புலனாகும்.

’சோற்றுக்கு அரிசி தா என்றேன்; களிக்கு மாவைத் தந்தான்’ என்றதில் இருபொருள் மருவிய சிலேடையுள்ளது.

யானை, குதிரை முதலிய அரிய பொருள்களை வாணனிடம் பெற்று வருகிற புலவனை மற்றொரு கவிஞன். வழியிடையே கண்டான்; அரச திருவுடன் அமர்ந்திருப்பதை நோக்கி, 'மன்னர் பெரும! நின் ஊர் யாது? பேர் என்ன? ' என்று வினவினான். அதற்கு அவன், 'நான் அரசன் அல்லன்; உன் போன்ற புலவனே; வாண பூபதி அளித்த வரிசைகள் இவை; நீரும் அவரிடம் போனால் இப்படியே .பெற்று வரலாம்; அவருடைய அரண்மனை முன்றிலிலே சில அடையாளங்கள் உள்ளன; ஆத்தி, வேம்பு, பனைகள் சூழ்ந்த மூன்று அரசுகள் அத்திகளில் நிற்கும் பார்த்துக் கொள்ளும்' என்று வழிவகைகளை விளக்கி விடுத்த படியாய் இக் கவி இயற்றப் பட்டுள்ளது.

ஆத்தி முதலிய மூவகை மாலைகள் சூடிய மூன்று வேந்தரைக் குறித்தது. அத்தி – யானை; அவர்தம் பட்டத்து யானைகளைச் சுட்டியது. அறிஞர்க்கு உதவுபவர் அரசரினும் உயர்ந்தவராவர் என உணர்த்திய படியிது. கவிஞர் அறிவு நலம் கனியப் பேசும் இயல்பினராதலால் அவருடைய உரைகளைச் சுவையுணர்ந்து சுகிக்க வேண்டும்.

இந்நாட்டில் முன்னம் வேந்தரும் மாந்தரும் புலவரை ஏத்திப் போற்றி வந்த நிலைமைகளை இவற்றால் ஒருவாறு ஓர்த்து கொள்ளலாம். அந்நாளில் அங்ஙனம் தலைமை எய்திநின்ற பரிசில் வாழ்க்கை இந்நாளில் அறவே பரிசு குலைந்து போயது.

உண்டியும் இன்று உண்டோ? என்றது அன்று தண்டிகையூர்ந்து தனி ஆட்சி புரிந்த புலமை வாழ்வு இஞ்ஞான்று அஞ்ஞாத வாசமாயுள்ள அஞ்ஞான நிலைமை தெரிய வந்தது.

அந்தப் பழைய வழி தூர்ந்து போயதாதலால், புதிய வழியில் புகுந்து இனிதாய் ஒளி புரிந்து கொள்ளுக என்று கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-19, 12:51 pm)
பார்வை : 47

மேலே