வைகறையில் வாய்ந்துசெயின் நாள்முழுதும் செய்வினை வந்தெய்தும் – கரும நலன், தருமதீபிகை 236

நேரிசை வெண்பா

வைகறையில் ஒர்கடிகை வாய்ந்துசெயின் நாள்முழுதும்
செய்வினைவந் தெய்தும் சிறப்பினால் - உய்தியுடன்
காலமுண் டாகக் கருதி வினைசெய்க
மூலமுண் டாகும் முதல், 236

– கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அதிகாலையில் ஒரு நாழிகை தொழில் செய்யின், அது பகல் முழுவதும் செய்யும் வினை நலனை இனிது அருளும்; பருவம் கழிந்து படாமல் தொழில்களை விரைந்து செய்யுங்கள்; அதனால் பெரும் பொருள்கள் விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது, காரியம் செய்யும் கால நிலையைக் காட்டுகின்றது.

வைகறை - விடியற்காலம். கடிகை – ஒருநாழிகைப் பொழுது.

சூரியன் உதித்தற்கு மூன்று நாழிகைக்கு முன்னரே எழுந்து அன்று செய்ய உரிய காரியங்களைச் சிந்தித்து மன ஒருமையுடன் வினை செய்துவரின், அது பெரிய பலனுடையதாய் அரிய நிலையில் தனியே இனிமை சுரந்தருளுகின்றது.

உதய காலத்தில் கருத்தூன்றி ஒரு நாழிகை செய்யும் தொழில் அன்று நாள் முழுதும் செய்யும் காரிய நலனைச் சீரிய முறையில் நேரிய பலனாக நேரே தருகின்றது. இதனை அனுபவத்தால் யாரும் அறிந்து கொள்ளலாம்.

உயிர்களின் முயற்சிக்கு அதிகமான ஒர் ஊக்கமும் உயர்ச்சியும் கதிரவன் எழுச்சியில் புதுமையாய்க் கலந்திருக்கின்றது. அந்த அருமைப் பொழுதைப் பழுது படுத்தாமல் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்ம சிந்தனையுடன் தியான சமாதிகள் புரிகின்ற மேன்மையான தவயோகிகள் பலரும் இந்த வைகறைப் பொழுதைத் தமக்கு உய்தியாக உபயோகித்து உயர் நலம் அடைந்துள்ளனர். ஞான யோகிகளும் காலத்தைக் கடைப்பிடித்துக் கதி பெற்றுள்ளமையால் கருமயோகிகளுக்கு அது எவ்வளவு உரிமையுடையது என்பது உணரலாகும்.

காலையில் ஒரு நாழிகையைக் கருதாது கைவிடின், பின்பு மாலை வரையில் ஓடி முயன்றாலும் அவ்வினை இழுபறியாய் வழுவினை அடையும்; அக் கரும நலனை நீ மருவ முடியாது.

நேரிசை வெண்பா

விடியல் ஒருகடிகை வீணாயின் அந்நாள்
கொடிய மடியாய்க் குலவி - நெடிய
பகலெல்லாம் பார்த்தாலும் பாடுபெறாய் காலம்
தொகல்வல்லார் துய்ப்பர் சுகம்.

'உதய காலத்தின் அருமையை இதனால் அறியலாகும். இதனை இதயம் வைத்துப் பருவ வுரிமையுடன் கருமங்களைச் செய்து கொள்ளுங்கள்; கால உதவி சாலவும் சிறந்தது.

கருதி வினை செய்க என்றது எடுத்த காரியத்தைக் கண்ணும் கருத்துமாய் ஒரே நோக்குடன் ஊக்கி நின்று முடித்துக் கொள்க என வினை ஆட்சியை விளக்கி யருளியது.

பருவம் தவறாமல் காரியங்களைச் செய்துவரின், பொருள்கள் பெருகி வந்து பெரிய கனவானாய் ஞாலம் காண அவன் மேலோங்கி யாருக்கும் ஆதரவு செய்யும் அமைதியை அடைவானாதலால் வினையின் விளைவை இறுதி அடி நினைவுறுத்தி நின்றது.

பெரிய தொழில்களை யெல்லாம் இனிது நடத்தவல்ல மூல தனங்களை மூல முதல் என்றது.. அறம் முதலிய எல்லா இன்ப நலங்களுக்கும் மூல முதலாய் மருவி ஞாலம் புகழ உள்ள பொருளைக் காலம் கருதி வினை செய்து கருத்துடன் பெறுக என அறிவுறுத்தப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-19, 12:54 pm)
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே