நயந்தெரியா மாக்களிடைச் செல்லலிழிவு அன்றோ தெளி - புலவர் நிலை, தருமதீபிகை 227

நேரிசை வெண்பா

தன்புலமை தன்னாலே தன்வாழ்வைத் தானடத்த
மன்புலவன் முன்புகுதல் வன்துயராம் - அன்பமைந்த
நல்லறிவு குன்றி நயந்தெரியா மாக்களிடைச்
செல்லலிழி(வு) அன்றோ தெளி. 227

- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னுடைய அருமைப் புலமையினால் தன் குடி வாழ்க்கையை ஒரு புலவன் இக் காலத்தில் செய்யத் துணிதல் மிகுந்த துயராம்: கல்வி நலம் தெரிந்து உரிமையுடன் உவந்து உதவாத புல்லியரிடம் போதல் மிகவும் இழிவு என்கிறார் கவிராஜ பண்டிதர்.

புலமையாளர் ஏதேனும் ஒரு தொழிலைத் தலைமையாகக் கைக்கொண்டு தம் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்.று முன்னம் கூறியதை நோக்கி, 'ஏன்? கற்ற வித்தையினாலேயே குடும்பத்தைப் பேணலாகாதோ?' என எதிர் வினவுவார்க்குப் பதில் கூறியபடியாய் இப்பாடல் உருவாகி வந்துள்ளது.

புலமை உணர்வு நலம் உடையது, புனித நிலையது; புன்மை நிறைந்த உலக நிலைமைக்கும், அதன் தலைமைக்கும் வேறுபாடு அதிகம்; ஞான ஒளி மிகுந்த அந்த அரிய அரதனத்தின் பெருமையை ஊனமான குருட்டு உலகம் அறிய முடியாது; ஆகவே கருதிய பலன் கைகூடாமல் சிறுமை அடைய நேரும்; அங்ஙனம் நேராமல் நேர்ந்த ஒரு தொழிலை ஓர்ந்து கொண்டு சார்ந்த மனைவாழ்க்கையைத் தகுதியாகப் பேணி வருதல் தேர்ந்த நலமாம்.

அருமைக் கல்வியை உள்ளே உயிர்மகிழ்ச்சிக்கு உரிமையாக்கி வெளியே உடலை ஓம்புதற்குத் தக்க ஒரு முயற்சியைத் தழுவிக் கொள்ளுக என கால நிலைமையைக் கருதிக் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்..

புலவர்கள் எப்பொழுதும் துணுகிய அறிவு ஆராய்ச்சிகளைச் செய்யும் இயல்பினர்; அகத்தே ஆழ்ந்திருத்தலால் புறத்தே வேறு முயற்சிகளைச் செய்ய முடியாதவர் ஆகின்றார், ஆகவே அவருடைய மனைவாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் எல்லாவற்றையும் தேச அதிபதிகள் உவந்து உதவி வந்தனர். அரச சன்மானங்களாய் வருகின்ற அவ்வரவு நிலைகளை அறிந்து.பலரும் புலமையை விழைந்து பயின்று தலைமை அடையலாயினர்

வரிசையுடன் வந்தமையால் அது பரிசில் வாழ்க்கை என்.று பாராட்ட நேர்ந்தது. அவ்வாழ்வைப் புலவர்கள் மிகவும் பெருமையாகக் கருதி உரிமையோடு மருவி நின்றனர்.

குடிகளிடம் அரசர் வரி வாங்குதல் போல் அரசரிடம் புலவர்கள் திறை வாங்கிய படியாய் இப்பரிசில் நிலை ஓங்கி வந்தது. இவ்வாறு பெருவரவு எளிதில் வரவே வெளியே யாதொரு கருமங்களையும் கருதாமல் கவி பாடுவதையே பொழுது போக்காகப் போற்றி வந்தனர். பாட்டருமை தெரிந்து மகிழ்கின்ற அறிவாளிகளை நாடித் தேடிப் பாடிக் களித்தனர். எவர் எவ்வளவு கொடுத்தாலும் அவ்வளவையும் அன்றே செலவழித்து விட்டு மறுநாள் வேறிடம் சென்று பாடி மகிழ்வர். உலக ஆசையின்றி, உல்லாசப் பிரியராய்ப் புலவர்கள் வாழ்ந்து வந்துள்ள நிலைமையை நினைந்து பார்த்தால் எவர்க்கும் வியப்பும் உவப்பும் உளவாம். அவருடைய உள்ளங்களும் உரைகளும் செயல்களும் கள்ளம் கபடுகள் யாதும் இல்லாதன.

நேரிசை ஆசிரியப்பா

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை,
பிறர்க்குத் தீ(துஅறிந்தன் றோஇன்றே; திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்(து) ஏகி
ஆங்கினி(து) ஒழுகின் அல்ல(து) ஓங்குபுகழ் .
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே – 47 புறநானூறு

இது கோவூர்கிழார் என்னும் புலவர் நலங்கிள்ளி என்னும் சோழமன்னனை நோக்கிச் சொல்லியது. இளந்தத்தன் என்னும் புலவன் மறுபுல வேந்தனிடமிருந்து ஒற்று வந்துள்ளதாக அரசன் குற்றம் குறித்த போது அதனை மறுத்து அம் மன்னனுக்கு இம் மதிமான் இன்னவாறு அறிவுறுத்தியுள்ளார். செம்மல் - தலைமை.

’பழுத்த மரங்களைத் தேடிச் செல்லும் பறவைகளைப்போல் உள்ளப் பண்புடையாரை நாடிப் போய்ப் பாடிப் பரிசில் பெற்று வந்து எல்லார்க்கும் உதவி பார்க்கும் யாதொரு தீதும் கருதாத புனித வாழ்க்கையர்; தம்மை அவமதித்து எதிர்த்தவரைக் கடுத்து அடக்கி யாண்டும் கம்பீரமாய்த் தலை நிமிர்ந்து நடப்பவர்; நிலம் ஆளும் உன்னைப் போலவே புலம் ஆளும் அவரும் அருந்திறலமைந்த பெருந்திருவினர்; அவரிடம் பிழைகாணல் உனக்குப் பிழையாம்; நிலைமையறிந்து தலையளி செய்துவிடுக’ என அரசனை நோக்கி இப்புலவர் பெருந்தகை கூறியிருப்பது மிக அருமையாகும்.

’நண்ணார் நாண அண்ணாந்து ஏகுவது’ அல்லது பிறர்க்குத் தீது அறியாது புலவர் வாழ்க்கை என்றதனால் இவரது உள்ளத் திண்மையும் உயர் பெருந்தன்மையும் உணரலாகும். வரிசையறிந்து பேணாராயின் அரசையும் இவர் மதியார்.

நேரிசை வெண்பா

மன்னவனும் நீயேயோ? மண்ணுலகும் நின்னளவோ?
உன்னைநினைந் தோதமிழை ஓதினேன்? - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு, - கம்பர்

சோழமன்ன்ன் மாறுபட்ட பொழுது கம்பர் அவனைச் சீறி உரைத்த வீர மொழி யிது. புவியரசும் தலைவணங்கக் கவியரசர் யாண்டும் நிலை நிமிர்ந்துள்ளனர்.

அறிவுடையார் எல்லாம் உடையார் என்றமையால் அவ்வுடைமையின் உயர்நிலை புலனாம். மதிநலம் உள்ளத்திருவாய் உறுதி மிகச் செய்கின்றது. ஆகவே கவிவேந்தர் புவிவேந்தரையும் பொருள் செய்யாது போகின்றார்.

A true poet can never be so base; for, wherever there is genius, there is pride. - Goldsmith

உண்மைக் கவிஞன் யாண்டும் இழிந்து நில்லான்; எங்கே மதிநலம் மிகுத்துள்ளதோ அங்கே பெருமிதம் நிறைந்திருக்கும் என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

பரிசில் என்னும் வார்த்தையே புலவரது மேன்மையை விளக்கி நிற்கின்றது. பரிசு - வெகுமதி. மதிமாட்சியை மதித்து மதியுடையோர் தருவது பரிசில் என வந்தது. பரிசு பெறுவோர் இவரிடம் பரிசு மிகப் பெற்றுப் பயனடைந்து கொள்கின்றார்.

நேரிசை வெண்பா

காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப்
பாவலர் நல்கும் பரி(சு)ஒவ்வா - பூவினிலை
ஆகாப் பொருளை அபயனளித் தான்புகழாம்
ஏகாப் பொருள்அளித்தேம் யாம். - இரட்டையர்

’உலகில் நிலையாத பொருளை நீ கொடுத்தாய்; என்றும் நிலைத்த புகழை உனக்கு நான் கொடுத்தேன்; யாருடையது சீருடையது? எனச் சோழனை நோக்கி இரட்டையர் இப்படி வினவியிருக்கின்றார்.

நேரிசை வெண்பா

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலர்கள்
பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா!
என்றும் கிழியா(து)என் பாட்டு. – ஒளவையார்

ஆயிரம் பொன் பெறும்படியான உயர்ந்த பட்டாடையை வழங்கிய மன்னன் தன்னுடைய கொடையை வியந்து கொண்டான்; அது பொழுது அவனை நோக்கி ஒளவை இவ்வாறு பாடலானாள்.

புலவாது நிலைமையும், தலைமையும் இவற்றால் ஒருவாறு அறியலாகும். முன்னாளில் இங்ஙனம் சீரும் சிறப்பும் பெற்றிருக்த புலமை வாழ்வுகள் பின்னாளில் சீரழிய நேர்ந்தன. சன்மானங்களெல்லாம் அவமானங்களாய் மாறின.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில் லாமல்
திடமுள,மோ கனமாடக் கழைக்கூத் தாடச்
செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோம் இல்லை;
தடமுலைவே சையராகப் பிறந்தோம் இல்லை;
சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோம் இல்லை;
என்னசென்மம் எடுத்துலகில் இரக்கின் றோமே. - படிக்காசுத் தம்பிரான்

எவ்வளவு துன்பங்களும் அவமானங்களும் அடைந்திருந்தால் இந்தப் புலவர் இவ்வளவு மனம் நொந்து பாடியிருப்பார்! கவியின் ஒலி அனுநாதமாய் அனுதாபத்தை விளைக்கின்றது.

'கூத்திக்கும் கூத்துக்கும் குடிக்கும் விழைந்து கொடுப்பாரையன்றிக் கலைக்கு உவந்து உதவுவாரை இவர் காலத்தில் காணாமையால் அப் புலைநிலையை வயிற்றெரிச்சலோடு இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்

பழங்காலத்தில் சிறந்திருந்த பரிசில் வாழ்க்கையைத் தொடர்ந்து சென்று பின்னால் பரிசு குலைந்த புலவர்கள் பலர்.

கட்டளைக் கலித்துறை

பக்குவ மாகக் கவிநுாறு பாடிப் பரிசுபெற
முக்க ரணமெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி அலுத்துவந்த
குக்கனை ஆண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே. 1

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

வணக்கம்வருஞ் சிலநேரம், குமர கண்ட
..வலிப்புவரும் சிலநேரம், வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம், வேட்டை நாய்போல்
..கடிக்கவரும் சிலநேரம், கயவர்க் கெல்லாம்
இணக்கம்வரும் படித்தமிழைப் பாடிப் பாடி
..எத்தனைநாள் திரிந்துதிரிந்(து) இளைப்பேன் ஐயா!
குணக்கடலே அருட்கடலே அசுர ரான
..குரைகடலே வென்றபரங் குன்று ளானே. 1

கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்;
..காடெறியு மவனை,நா டாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
..போர்முகத்தை அறியானைப் புலியே(று) என்றேன்;
மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை
..வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்(கு) இல்லை என்றான்
..யானுமென்றன் குற்றத்தால் ஏகின் றேனே. 2 - இராமச்சந்திர கவிராயர்


வெண்பாச்சொல் கவிஞரேவந் ததேதும்மீது
மெய்த்தமிழ் பாடி வந்தோம்
வெகுநேர்த்தி முன்னமே நானூறு கோவையொரு
வித்துவான் பாடி வந்தான்!

நண்பனாக மனம்வைத்து மூன்றுபடி பெருவரகு
நான்கொடுத் தேன தற்கிந்
நாடெலாந் தெரியுமென் மனையாட்டி மூன்றுதரம்
நான்றுகொண்(டு) உயிர்பி ழைத்தாள்!

புண்பாடெலாம் அறிந்தி’ன்’னம்நீர் கவிசொலும்
புலவரென்(று) இங்கு வந்தீர்;
போம்போமெ னச்சொலிப் புலையாடு புலையரொடு
போராட வோப டைத்தாய்?

தெண்பாவை நும்பொருட்பா மாலைபூண்டு பதசேவைதந்
தருள்பு ரிகுவாய்;
தேசிகம்பூத் தவுமைநேச பொன்னம்ப லவதேசி
கசிரோ ரத்னமே!

- முதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர்

தமிழருமை அறியாத உலோபிகளிடம் போய்ப் பாடல்களைப் பாடிப் புலவர்கள் சீரழிந்து வருந்தியுள்ள நிலைமைகள் இவ்வாறு பல உள்ளன.

மேலே வந்துள்ள குறிப்புக்களால் பின்னாளில் இந்நாட்டு மக்கள் கலைச்சுவை யிழந்து புலைப்பட்டுள்ள மடமையும், அப் புல்லரிடம் அலைந்து அவமானம் அடைந்து கலைவாணர் அலமந்திருக்கும் கொடுமையும் அறியலாம்.

நாட்டு நிலை இங்ஙனம் தலை மாறிப் போனமையால் பரிசில் வாழ்க்கை பரிதாபம் என வந்தது.

நயம் தெரியா மாக்கள் இடைச் செல்லல் இழிவு அன்றோ? தெளி' என்றது அவ்வழியை விட்டு விலகி உரிய ஒரு தொழிலைக் கைக்கொண்டு வாழுக எனப் பரிவுடன் வேண்டுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-19, 8:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10
மேலே