ஒருவன் ஆற்றும் வினையில் அரும்பொருள் ஏற்ற வகையில் சுரக்கும் - கரும நலன், தருமதீபிகை 238

நேரிசை வெண்பா

ஊற்றில் சுரக்கும் உயர்நீர் எனஒருவன்
ஆற்றும் வினையில் அரும்பொருள் - ஏற்ற
வகையில் சுரக்கும் மரபால் வரவின்
தொகையைத் துணிந்து தொடர். 238

– கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஊற்றிலிருந்து நீர் சுரந்து வருதல் போல் மனிதனது முயற்சியிலிருந்து பொருள் விளைந்து வருகின்றது; அவ்விளைவினை நீ விழைந்து பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஊக்கி முயன்றால் ஆக்கம் வரும் என முன்னர் அறிந்தோம்; அவ்வரவு நிலையை ஒர் உவமக் காட்சியால் இதில் உணர்ந்து கொள்கின்றோம்.

பொருளை அதன் நீர்மை கருதி நீரோடு ஒப்ப வைத்தது.

உயிர்களுக்குக் தண்ணீர்போல் பொருளும் இனிய ஆதாரமாய் நண்ணியிருத்தலை எண்ணியறிக. உயர்நீர் என்றது உவர் யாதுமின்றிச் சுவை மிகுந்து உதவி நிலையில் உயர்ந்துள்ள அதன் இயல்புணர வந்தது. பொருளும் பழி வழியில் அன்றி விழுமிய தொழில் நெறி தோய்ந்துவரின் எழுமையும் இனிதாம்.

தோண்டிய அளவுக்கு நீர் ஊறிவரும்; முயன்ற அளவுக்குப் பொருள் பெருகி வரும். தோண்டுதல் இன்றேல் நீர் வரவு குன்றும்; முயற்சியை விடின் பொருள் வரவு ஒழியும்.

நிலத்தில் யாண்டும் நீர் நிறைந்திருத்தல் போல், உலகில் எங்கணும் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. விரும்பி முயல்வார்க்கு அவை பெரும் பயன் தருகின்றன; முயலாதவர்க்கு கிட்டாமல் தூரப் போய் விடுகின்றன.

‘த்’ ’ற்’ வல்லின எதுகை, ‘ய்’ ஆசிடை எதுகை அமைந்த
நேரிசை வெண்பா

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தடமுளதால் – ஆனபொழு(து)
எ’ய்’த்’தோம் இளைத்தோமென்(று) ஏமாந் திருப்பாரை
எ’ற்’றோமற் றெற்றோமற்(று) எற்று. - ஒளவையார்

இயற்கை அன்னை எல்லாப் பொருள்களையும் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாள்; அவற்றை உரிமையுடன் விரைந்து பெறாமல் மடிந்து நின்று இழிந்து படுகின்றாரே என வினை புரியா மக்களின் நிலைமையை நினைந்து பரிந்து ஒளவையார் இவ்வாறு இரங்கியிருக்கிறார்.

மணலில் கிளைக்க நீர் வரும்; உலகில் உழைக்கப் பொருள் வரும். அடுத்து முயன்று ஆக்கம் பெற அவ்வுண்மையைத் தெளிவுபடுத்தி உரிமையுடன் இங்ஙனம் எடுத்துக் காட்டியது.

அரிய நலங்களை எல்லாம் எளிதின் உளவாக்கித் தன்னையுடையார்க்குப் பெரும் மேன்மை தந்தருளும் பெற்றியதாதலால் அரும் பொருள் என வந்தது.

பொருள் ஒன்று உளதேல் அவன் எந்நிலையனாயினும் எல்லாம் உடையன் என யாரும் அவனைப் பெருமை பாராட்டி அருமையாகப் போற்றி வருதலை நாளும் நாம் பார்த்து வருகின்றோம்.

இத்தகைய அருமைப் பொருள் செய்யும் கருமத்தில் உறைந்திருக்கிறது; அதனை உணர்ந்து தோண்டி விரைந்து எடுத்து நிரந்தரமாக உனக்கு உரிமை செய்து கொள்க எனப்படுகிறது.

ஊக்கி முயல்பவன் கையிலேயே ஆக்கம் எல்லாம் உள்ளன.

“The secret of fortune is joy in our hands (Emerson).

முயற்சியுடைய நம் கையில் உயர்ச்சியான திரு மருமமாய் உறைந்துள்ளது என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-19, 9:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே