கண்டவர்பால் புன்பொருட்காய் அண்டுவரேல் அந்தோ அவம் - புலவர் நிலை, தருமதீபிகை 229

நேரிசை வெண்பா

சாலப் பலநூல் சதுரோடு தாமறிந்தும்,
மூலப் பொருளின் முடிவுணர்ந்தும் - காலநிலை
கண்டு தெளியாமல் கண்டவர்பால் புன்பொருட்காய்
அண்டுவரேல் அந்தோ அவம். 229

- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அறிவு நலம் நிறைந்த நூல்கள் பலவும் நுணுகி உணர்ந்து, மேலான பரம்பொருள் நிலைமையையும் தெளிந்து காலநிலையைக் கண்டு தெளியாமல் கண்டவரிடம் எல்லாம் பொருள் விழைந்து போதல் மருளான பிழையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். சிறந்த மதிநலமுடைய புலவர்கள் தம் நிலைமையை மறந்து இழிந்து படாமல் உரிமையை உணர்ந்து இனிது வாழ வேண்டும் என இப்பாடல் உணர்த்துகின்றது.

இலக்கணம் முதலிய கருவி நூல்களைக் கசடறக் கற்று அறிவு நூல்களை ஆராய்ந்து தெளிதல் ‘சதுரோடு அறித’லாகும்.

நூலறிவால் பண்பட்டுத் தெளிந்தமைக்குப் பயன், வாலறிவனை உணர்ந்து போற்றுதலேயாம்; ஆகவே அதன் நிலைமையும் பலனும் தெரிய அடுத்து வந்தது. மூலப் பொருளின் முடிவு உணர்தல் நூலறிவுடையார்க்கே தனியுரிமை யாகின்றது.

’கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை' - திருவிசைப்பா

'கற்றவர் வளைத்துத் திரிபுரம் எரித்தோன்.
கற்றவர் கருத்தினால் காண்போன். - வில்லிபாரதம்

கல்வியாளருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுரிமை இதனால் அறியலாகும்.

கற்றவர் - கல் என்றது மேருமலையை; தவர் - வில்.

இங்ஙனம் அரிய கலையறிவும், பெரிய மகிமையுமுடைய புலமையை அடைந்திருந்தும் தன் தலைமையை இழந்து தவறுபடுதல் புலவனது புலமைக்குப் புலையாம்.

‘கால நிலை கண்டு தெளித’லாவது தன் வாழ்நாளில் அயலே சூழ்ந்துள்ள மக்களது மனப்பான்மைகளையும், தேட்டின் தியக்கத்தையும், நாட்டின் இயக்கத்தையும் நன்கு தெரிதல்.

முற்காலத்தில் அரசர்களும், அதிகாரிகளும், செல்வர்களும் புலவர்களை மிகவும் நன்கு மதித்து உரிமையுடன் உவந்து போற்றி வந்தனர்; நாளடைவில் அரசு மாறியதால் அப்போற்றுதல் குறைய நேர்ந்தது; வரவரத் தூற்றுதலாய் வந்தும் பழைய வழக்கமாகிய பரிசிலை நாடிப் பலரிடமும் சென்று புலவர்கள் பரிசு குலைந்தனர். அக்குலைவு கலைக்கு இழுக்காய்க் கலிக்க நேர்ந்தது.

இழுக்கமான அவ்வழக்கத்தை அறவே ஒழித்து இனிய ஒரு முயற்சியைக் கைக் கொள்ளுதலே இனிமேல் நலமாம்.

நேரிசை வெண்பா

தேனென்னத் தித்திக்கும் தீந்தமிழை ஆய்ந்தொருவர்
வானென்ன நீண்டபுகழ் வாய்ந்துறினும் - ஏனென்று
கேட்டருமை செய்யார் கெடுநிலையர்; இந்நாளில்
பாட்டருமை தேறார் பலர்.

இந்நாட்டு நிலை இஞ்ஞான்று இங்ஙனம் அஞ்ஞானமாய்த் திரிபு கொண்டு மாறியுள்ளமையால் உன் பாட்டு நிலையை மாற்றி வேறொரு தேடல் நிலையைத் தேர்ந்து கொள்வது நன்றாம்.

காலத்தின் மாறுதலையும் உலக நிலையையும் உணர்ந்து பாராமல் கலையறிவை வீணே பாழ்படுத்துதல் பரிதாபமாதலால் அப் பழிவழியில் இழியலாகாது.

கல்வியருமை அறியாமலும், உபகரிக்கும் தன்மையில்லாமலும் உள்ள புல்லியரிடம் பொருள் விழைந்து செல்லல் அல்லலேயாதலால் 'கண்டவர்பால் அண்டுவரேல் அவம்’ என வந்தது.

புன்மையாளரிடம் உள்ளதும், புல்லிய வழியில் பெறுவதுமாகிய புன்மை தெரிய புன்பொருள் என்றது. அருமைக் கவிஞர் அநியாயமாய்ச் சிறுமைப் படுதலை நினைந்து அந்தோ என நொந்து புலம்பியது.

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா)

கல்லடிக்கும் உளிஇரண்டு காதடிக்குள் அடிப்பதெனக்
கவிதை கேட்டுப்
பல்லடிக்கக் கிடுகிடெனப் பறையடிக்கும் நெஞ்சர்தமைப்
பாடு வேனோ?
வில்லடிக்கும் பிரம்படிக்கும் கல்லடிக்கும் விரும்பிநின்ற
மெய்யன் ஈன்ற
செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க அலையடிக்கும்
செந்தி லானே. - படிக்காசு

ஏட்டைக்கட்டி யெழுத்தோ(டு) எழுத்தைவைத்(து)
இணைத்துக் கட்டி இசைகட்டி லோபர்மேல்
பாட்டைக் கட்டிஎன் தொண்டையும் கட்டிய
பாவம் தானினி என்றைக்குத் தீருமோ?
தோட்டைக் கட்டும் குழலே! நினதடித்
துணையைக் கட்டிய பேர்க்குப் பரகதி
வீட்டைக் கட்டிய தாயே சவுந்தர
மீனவன் பங்கின் மீனாட்சி அம்மையே! - பொன்னம்பலக் கவிராயர்

புன்பொருளுக்காகப் புல்லரிடம் போய் இப்புலவர்கள் பட்டிருக்கும் பாட்டை இப்பாட்டுகள் காட்டுகின்றன.

அவமாய் இவ்வாறு அல்லலுறாமல் நவமாக நல்ல ஒரு தொழிலை நயந்து கொண்டு செல்வ நிலையில் சிறந்து வாழுக என்றும், கால நிலைக்கு ஏற்ப அறிவைப் பயன்படுத்துக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-19, 4:00 pm)
பார்வை : 13
மேலே