தன்கையால் உயர்ந்தவனை வானுமண்ணும் பொன்கையால் ஏந்தும் – கரும நலன், தருமதீபிகை 239

நேரிசை வெண்பா

உன்னி முயலா(து) உளமடிந்து நின்றாயேல்
இன்னல்மீக் கூரும் இளிவுமாம்; - முன்னாகத்
தன்கையால் தானுயர்ந்த தன்மையனை வானுமண்ணும்
பொன்கையால் ஏந்தும் புகழ்ந்து. 239

– கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனம் துணிந்து முயலாமல் சோம்பியிருந்தால் அல்லலும் 'இளிவும் அடர்ந்து வரும்; முனைந்து முயன்றால் வானும் வையமும் உன்னைப் போற்றி உவந்து கொள்ளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

செய்யும் வினையைச் செவ்வையாகத் தெரிந்து கொண்டு ஊக்கமுடன் உறுதியாய் ஆற்றுதலே ஆக்கம் பயக்குமாதலால் மன்னிய முயற்சிக்கு உன்னுதல் ஈண்டு உரிய அடையாய் மருவி வந்தது. உன்னல் = நினைத்தல், கருதல்,

கருத்தே எல்லா விருத்திக்கும் காரணம். முயற்சியின் உயர்வும் அயர்ச்சியின் இழிவும் கருதி உணர்ந்து உயர்ச்சிக்கு உரியதை உவந்து செய்து வந்தால் சமுதாயத்தில் உரிய மரியாதை கிடைக்கும்.

ஒரு தொழிலும் செய்யாமல் உள்ளம் சோம்பி இருந்தால் வறுமைத் துயரோடு பல இழிவுகளும் வெள்ளமென விரைந்து வருமாதலால் இன்னல் மீக் கூரும், இளிவும் ஆம் என மடியின் கேடுகள் வரைந்து காட்டப்பட்டன.

இன்னல் - துன்பம். இளிவு - அவமதிப்பு. இன்னலையும் இளிவையும் எந்த மனிதனும் விரும்பான்; இன்பத்தையும் உயர்வையுமே யாண்டும் எவரும் விரும்பி வருகின்றனர். ஆன்ம இயல்பான இந்த மேன்மைகளை இழிந்த சோம்பலினால் வீணே இழந்து நிற்பது பெரிதும் பரிதாபமாம். மடியில் குடிகேடான ஈனங்கள் மருவி யுள்ளன; அதனை மான மனிதர் மருவலாகாது:

தானாகவே முயன்று முன்னுக்கு வந்த மேன்மையான பான்மையாளனைத் தன் கையால் தான் உயர்ந்த தன்மையன் என்றது.

முன்னோர்கள் ஈட்டி வைத்துள்ளதைக் காட்டிக் கொண்டு பிலுக்கி நிற்பது பெருமையாகாது; தன் முயற்சியினால் உயர்ந்தவனே உண்மையான உயர்ச்சிக்கு உரியவனாகின்றான். அவனே அருந்திறலும் பெருந்தகவும் நிறைந்த ஆண்மையாளன். அவனது பண்பும் பயனும் இன்ப நிலையமாய் இனிமை சுரந்தருளுதலால் மகிழ்ந்து புகழ நேர்ந்தது.

பாட்டாளனாய் உழைத்துத் தேட்டாளனாய்ச் செழித்து வந்த அந்த ஈட்டாளனையே தலைமையாக உலகம் எடுத்துக் காட்டி நிலைமையை வியந்து எங்கும் உவந்து கொண்டாடுகின்றது.

மனிதனுக்கு ஆள் என்று ஒரு பெயர். வினையை ஆள்பவன்; ஆண்மையுடையவன் என்னும் பொருள்களை அப்பெயர் மருவியுள்ளது. அப்பேராளன் ஆள்வினையால் உயர்ந்தபோது உண்மையான மனிதனாய் ஒளிபெற்று நிற்கின்றான்.

ஒளிமிகுந்து வெளிவந்த அவனை மக்களும் தேவரும் உயர்வாய் நோக்கி உரிமையுடன் புகழ்ந்து உவந்து கொள்கின்றார்.

”Welcome evermore to gods and men is the self-helping man.” (Self-reliance)

’தானே முயன்று உயர்ந்தவன் மனிதருக்கும் தெய்வங்களுக்கும் நல்ல செல்ல விருந்தாய்ச் சிறந்து நிற்கின்றான்’ என்னும் இது எண்ணத்தக்கது.

தன்மை அறிந்து போற்றும் தகுதியில் மானவரினும் வானவர் தலைமையாய் நிற்கும் நிலைமை நோக்கி மண்ணினும் வானை முன்னுறக் குறித்தது,

'தன் கையால் உயர்ந்தவனை வானும் மண்ணும் பொன் கையால் ஏந்தும்' என்றது வினையாண்மையின் வியன் தெரிய வந்தது. மனிதன் மனவலிமை உடையவன்; எல்லா வினைகளையும் இனிது செய்ய உரியவன்; அவ்வுரிமையை அடையவே எவரும் போற்றும் உயர்வுடையனாய் ஒளி பெற்று நிற்கின்றான்,

கரும நிலையால் சிறந்த அருமையாளனை இருமை உலகமும் விழைந்து புகழ்ந்து மகிழ்ந்து கொள்ளும் என்றமையால் அவனது பெருமையும் பேறும் அறியலாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-19, 4:03 pm)
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே