ஔரங்கசீப்-வெறுப்பிலெழும் தனிமை

இருண்ட அந்த குளிரூட்டப்பட்ட அரங்கின், கீழிருந்த மேடையின் கூரை விளக்கொன்று மொட்டவிழ்ந்து பூ மலர்வது போல மிக மெதுவாக உயிர்பெறுகிறது. அந்த விளக்கின் மங்கிய மஞ்சள் நிற வட்டவடிவ ஒளி இருளில் அம்மேடையில் தொழுது கொண்டிருந்த வயதான ஔரங்கசீப்பை அவ்வரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. அச்சதுர வடிவான மேடையின் நட்டநடுவில் விழுந்திருந்த அந்தச் சிறு வட்டவடிவ ஒளியைத்தவிர, மேடையின் பிற பகுதிகளும், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியும் நிசப்தமான இருளில் இருந்தது.

நபிகள்தான் ஔரங்கசீப்பின் இருளைப்போக்க அவ்வெளிச்சத்தை அனுப்பியிருக்கிறாரோ என்ற பிரமை விலகுவதற்குள் ஒரு பெண்ணின் இனிய குரல் அவ்வரங்கின் நிசப்தத்தை கலைக்காத வண்ணம் மெல்லிய இசையாய் ஒலிக்கிறது. இசை போன்ற கலைகளை மூடர் மற்றும் சோம்பேறிகளின் வேலையாக உருவகித்துக் கொண்ட ஔரங்கசீப் அக்குரல் கேட்டுப் பதறினாலும், அம்மேடையில் அத்தனை தொழில்நேர்த்தியுடன் அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் இந்நாடகக் கலையின் மேல் பற்று கொண்டு அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு அக்குரலிருந்த இசைய வைக்கும் இசை ஆவலைத்தான் அதிகப்படுத்தியது.

Shraddha மற்றும் Nisha Theatres குழுவினரால் அரங்கேற்றப்பட்ட எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் (இ.பா.) ‘ஔரங்கசீப்’ நாடகத்தின் இறுதிக்காட்சியிது. நம்முள் எழுந்த ஆவலையும், ஔரங்கசீப்பின் பதற்றத்தையும் தணிக்கும் வண்ணம், இருளிலிருந்த மேடையின் விளிம்புகள் அந்த இசைக்குரலால் நீல ஒளிபெறுகின்றன. அச்சதுர மேடையின் நட்டநடுவிலிருந்த மங்கலான வட்டவெளிச்சத்தை மேலும் மங்கலாக்கிய நீலஒளியில், அம்மங்கை இனிய குரலோடு இசைந்து தன்னைச் சுற்றும் ஒரு மெல்லிய நடனத்தோடு ஔரங்கசீப்பையும் சுற்றி அசைந்து செல்கிறார். ‘நான்தான் உங்களால் கொல்லப்பட்ட இசை…இந்த பிரபஞ்சத்தின் முதல் நாதம்…’ என்று முனகி நடனமாடியவாறே ஔரங்கசீப்பின் இன்னும் முற்றுப் பெறாத தனிமையை சீண்டிச் செல்கிறது, இ.பா.வின் எழுத்துக்களில் ஔரங்கசீப்பின் மனச்சாட்சியாக ஒலித்த அப்பெண் குரல்.

ஒரு தலைவனுக்குரிய அனைத்து குணங்களையும் உடையவரான ஔரங்கசீப் தன் இறுக்கத்தை கொஞ்சம் நெகிழ்த்திக் கொண்டிருந்தால், அக்பரை விஞ்சியிருக்க முடியும் என்பதே இந்நாடகத்திலிருந்து நான் கண்டுகொள்வது. அவருடைய சகோதரரான தாராவுக்கு அக்பரைப் போல எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைப்பாடு இருந்தாலும், அவருடைய சகோதரியான ஜகன்ஹாரா சுட்டிக்காட்டுவது போல், அதை சாத்தியப்படுத்துவதற்கான திட்டங்களும், திறமையும் தாராவிடம் இல்லை. ஆனால் ஷாஜகான் தன் மகளும் மகனுமாகிய ஜகன்ஹாரா மற்றும் தாராவிடம் காட்டிய பாசத்தில் கடுகளவேனும் தன்னுடைய இன்னொரு மகளும் மகனுமாகிய ரோஷன்ஹாரா மற்றும் ஔரங்கசீப்பின் மேல் காட்டியிருந்தால் மொகலாயப் பேரரசு ஔரங்கசீப்போடு முடிந்திருக்காது என்றே தோன்றுகிறது.


மக்களின் நன்மதிப்பைப் பெறுவதே தாராவின் தலைமைக்கான குணம் என்றால், அவர்களை ஒழுங்குபடுத்துவதே ஔரங்கசீப்பின் தலைமைப் பண்பாக இருக்கிறது. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என மும்தாஜின் ஊடாக மட்டுமே இவ்வுலகை காணும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட நிலையில் இருக்கும் ஷாஜகான். இம்மூவரையும் மையமாக வைத்து இ.பா. எழுதிய இந்நாடகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் Shraddha மற்றும் Nisha Theatres.

கதாபாத்திரங்களின் உடை, அலங்காரம், காட்சியமைப்பு, மெல்லியதாக தேவைப்படும்போது மட்டுமே ஒலிக்கும் பிண்னணி இசை என அனைத்தையும் தாண்டி நம்மை ஈர்ப்பது கதாபாத்திரங்களின் மிகையற்ற உடல் மொழியும், அருமையான தமிழ் உச்சரிப்பும்தான்.

அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலும் அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. மும்தாஜ் என்ற கனவை விட்டு வெளியேறாத ஷாஜகானின் பைத்தியக்கார குரலாகட்டும்; தத்துவம், அரசியல் மற்றும் இவர்களுக்கிடையே உள்ள தொடர்பு ஆகியவற்றை கூர்ந்து அவதானிக்கும் ஜகன்ஹாராவின் அதிகாரமும் எள்ளலும் கொண்ட குரலாகட்டும்; தான் கொண்டிருக்கும் அனைவரும் கடவுளே (அகம் பிரம்மாஷ்மி) என்ற கொள்கைப்படி அனைத்து மதங்களையும் இணைத்துவிடும் தகுதி தனக்கிருக்கிறதா? என தன்னைத்தானே சந்தேகிக்கும் தாராவின் தன்னம்பிக்கையற்ற குரலாகட்டும்; தன் தந்தை ஷாஜகானின் அன்பு முழுவதும் மும்தாஜ் போல் இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தால் தன் சகோதரி ஜகன்ஹாராவிடம் குவிந்திருப்பதைக் கண்டு வெம்பி வெறுப்பை மட்டுமே கக்கும் ரோஷன்ஹாராவின் குரலாகட்டும்; தான் கொண்ட கொள்கையில் உறுதியும், பற்றும் கொண்டு ஓங்கி ஒலிக்கும் ஔரங்கசீப்பின் நம்பிக்கையான சிம்மக் குரலாகட்டும், இலக்கியத்தைவிட நாடகக் கலையால் ஏன் பெரும்பான்மையான மக்களிடம் நெருங்க முடிகிறது என்பதற்குச் சான்று.

ஷாஜகான் முகத்திலிருந்த குழந்தை அல்லது பைத்தியக்காரத்தனமும், ஜகன்ஹாராவின் ஒட்டு மொத்த உடல்மொழியில் இருந்த தீவிரமும் நக்கலும், எப்போதுமே இறுகிச் சிவந்து கொண்டிருக்கும் ஔரங்கசீப்பின் முகத்திற்கும் பின்னால் புதைந்திருப்பது இக்கலைஞர்களின் ஈடுபாடும் உழைப்பும்.

இ.பா.வின் இந்நாடகத்திற்கு இரத்தமும் சதையும் கொடுத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் நம்மை மெய்மறக்கச் செய்திருக்கும் இக்கலைஞர்களின் ஈடுபாடும், உழைப்பும், அதன் ஒருங்கமைவில் உள்ள தொழில்நேர்த்தியும் நம்மை வியக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள் Shraddha மற்றும் Nisha Theatres!!! It is really a tribute to Indira Parthasarathy.


===========================================================================முத்துச்சிதறல்
வாசிப்பே எழுத்திற்கான ஊற்று

எழுதியவர் : முத்துச்சிதறல் (24-May-19, 4:31 am)
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே