மனைவியுடன் அறத்தைக் குறிக்கொண்டு மனைவாழ்க்கை செய் - வாழ்க்கை நிலை, தருமதீபிகை 241

நேரிசை வெண்பா

அன்பு கனிந்த அருமை மனைவியுடன்
இன்பு கனிய இனிதமர்ந்து - முன்பு
குறித்த அறத்தைக் குறிக்கொண்டு பேணிச்
செறித்த மனைவாழ்க்கை செய். 241

- வாழ்க்கை நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அன்பு நிறைந்த அருமை மனைவியுடன் அமர்ந்து தலைமையான அறத்தை நாளும் குறிக் கொண்டு பேணி இனிய மனைவாழ்க்கையை இன்புறச் செய் என கவிராஜ பண்டிதர் அறிவுறுத்துகிறார்.

மனை வாழ்க்கையின் இன்ப நலங்களுக்கெல்லாம் மனைவியின் அன்புரிமையே மூல காரணம். அந்த அன்பின் கனிவே எல்லா இன்பங்களையும் நன்கு கனியச் செய்து மனித உலகத்தை இனிமைப்படுத்தி வருகின்றது.

மனிதன் பெறத்தக்க பொருள்கள் எவற்றினும் மிகவும் அருமையான பொருள் இனிய மனைவியேயாதலின் அத் தனி மகிமையை உணர்த்தி நின்றது.

கணவனைப் பேணல், கற்பு நெறி நிற்றல், வாழ்க்கையை நடத்தல், வருபொருள் புரத்தல், அதிதிகளை ஆதரித்தல் முதலிய பண்பாடுகள் எல்லாம் நன்கு அமைந்த பாக்கியவதியை அடைந்தவன் பெரிய பாக்கியவானாகின்றான் நெறியுடைய மனைவி அரிய திருவாய் மருவியுள்ளாள்.

House and riches are the inheritance of fathers;
and a prudent wife is from the Lord.” “Solomon.”

வீடு, மாடு முதலிய செல்வங்களை வழிமுறையில் அடையலாம்; அறிவுடைய மனைவி இறைவன் அருளால் கிடைக்கின்றாள்' என்னும் இப் பொருள் மொழி ஈண்டு எண்ணத் தக்கது.

முன்பு குறித்த அறம்:

இல்லறத்தை மேலோராலும், நூலோராலும் முதன்மையாகக் கருதிக் குறித்துள்ள தருமம் என்றது. ’இல்லறம் அல்லது நல்லறம் அன்று' என ஒளவையார் உரைத்துள்ள குறிப்பைக் கூர்ந்து நோக்கி இதன் செவ்வியையும், சிறப்பையும் தேர்ந்து கொள்க.

துறவறம் முதலிய எல்லா அறநெறிகளுக்கும் இல்லறம் இனிய ஆதாரமாய்த் தலைமை எய்தி நிற்றலால் அதன் நிலைமையும் பொறுப்பும் அறியலாகும்.

அன்புறு மனைவியும் அறிவுயர் கணவனும் பண்புடன் மருவிப் பணிபுரிந்த போது தான் தரும நிலையமான இம் மனைவாழ்க்கை இன்பம் மிகப் பெற்று இனிது நடந்து வரும்.

தரவு கொச்சகக் கலிப்பா

தருமமெனும் பண்டமிடும் சகடமாம் மனைவாழ்க்கை
கருமநுகம் பிணித்துமனைக் காதலியும் தானுமென
இருவராய் முறைசெலுத்தின் எத்துணைத்தூ ரமும்செல்லும்
ஒருவராய்ப் பூண்டிழுப்பின் ஒரிறையும் செல்லாதால். - திருக்குற்றாலப் புராணம்

மனை வாழ்க்கையை இங்ஙனம் உருவகம் செய்திருக்கிறார்.

பல வகையான புண்ணியங்களைத் தாங்கியுள்ளமையால் மனை வாழ்வு தருமச் சரக்குகள் ஏற்றிய வண்டி என வந்தது. கருமம் புரியாவழி தருமம் நடவாதாதலால் அதனை நுகம் என்றார், தருமத்திற்கு ஆதாரம் கருமம் என்பது இங்கே நன்கு தெரிய நின்றது.

இந்த வாழ்க்கை நிலைக்கு முன் வந்துள்ள அதிகாரத்தையும் வைப்பு முறையையும் நுட்பமாக நோக்கி உறவுரிமையை ஓர்ந்து உறுதி நலனை உணர்ந்து கொள்க.

புண்ணியங்களுக்கெல்லாம் விளை நிலமான இத்தகைய குடி வாழ்க்கையைக் கண்ணியமுடன் நடத்தின் எண்ணிய இன்ப நலங்கள் யாவும் எளிதின் எய்துகின்றார்; இருமையும் பெருமையாய் இசைமிகப் பெறுகின்றார்.

காதல் மனைவியுடன் கருத்து ஒத்து அமர்ந்து சீவர்களுக்கு ஆதரவு புரிந்து அறமும் புகழும் எவ்வழியும் இனிது பெருகி வர உன் வாழ்க்கையைச் செவ்விதாகச் செய்க என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-19, 3:06 pm)
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே