கொடுந்தீமை காட்டும் கடனாம் கடு – கடன், தருமதீபிகை 251

நேரிசை வெண்பா

உள்ளபொருள் எல்லாம் ஒழிக்கும் உளக்கவலை
வெள்ளம் எனப்பெருக்கி வீழ்விக்கும் – எள்ளல்மீக்
கூட்டும் பெருமை குலைக்கும் கொடுந்தீமை
காட்டும் கடனாம் கடு. 251,

- கடன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடன் என்னும் விடம் கையில் உள்ள பொருட்களை விரைந்து ஒழிக்கும்;

உள்ளத்தில் மனக்கவலையை வெள்ளம் போல மிக விளைவித்து சமுதாயத்தில் மதிப்பைக் கெடுக்கும்.

இகழ்ச்சியைப் பெருக்கி உனது பெருமையையும் குலைக்கும்;

விடம் போன்ற இக்கடன் இடர்களை ஏற்படுத்திக் கொடிதான தீமைகளையும் காட்டிவிடும்.

நன்செய், புன்செய், தோட்டம், வீடு, மாடு, அணி, மணி, பொன், நெல் எனப் பொருள் பலவாறக ஒருவர் கொண்டவற்றைக் கடன் பொருளெல்லாம் ஒழிக்கும் எனப் பன்மையில் சொல்லப்படுகிறது. சிறுமையான கடனால் உரிமையான இந்த உடைமைகள் சீரழிய நேர்கின்றன.

கடன் என்னும் பேய்க்கு வட்டி கொடிய பசியாம். வட்டிக்கு மேல் வட்டியாய்க் கடன் பெருகி இருந்த பொருளையெல்லாம் அழிக்கின்றது.

‘துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி ஒன்று துட்டு எட்டு என்று விற்றாலும் செட்டி வட்டிக்குக் கட்டாது’ என வழங்கி வருதலால் கடனால் ஏற்படுங் கொடுமையும், அதன் இழிவும் கண்டு கொள்ளலாம்.

கடனால் ஏற்படுந் தீமைகளை எடுத்துக் காட்டி, அதனை எவ்வகையிலும் யாரிடமிருந்தும் பெறக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

’தனியாரிடமானலுஞ் சரி, வங்கியானாலுஞ் சரி‘ தன் வருமானத்தை அறிந்து, செலவையும் அறிந்து, தன்னால் அசலையும், வட்டியையும் குறுகிய காலத்தில் செலுத்தி கடனிலிருந்து மீள முடியுமா என்பதை உணர்ந்தே செயல்பட வேண்டும்.

குறிப்பாக கந்து வட்டியும், கிரெடிட் கார்டும் ஒன்றையொன்று மிஞ்சியதல்ல.

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்ப(து) இழுக்கு.467 தெரிந்து செயல்வகை (வள்ளுவர் வாக்கு)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-19, 3:09 pm)
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே