இனிய அறங்களுக்கு நல்வாழ்க்கையாக நவிலலே இல்வாழ்க்கை - வாழ்க்கை நிலை, தருமதீபிகை 242

நேரிசை வெண்பா

இல்வாழ்க்கை என்றும் இனிய அறங்களுக்கு
நல்வாழ்க்கை யாக நவிலலால் - பல்வாழ்க்கை
நின்றார் பலர்க்கும் நிழலுதவி முத்திநலம்
ஒன்றாக நல்கும் உவந்து. 242

- வாழ்க்கை நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இனிய பல தருமங்களுக்கு நல்ல ஆதாரமாய் நின்று, பல விதமான வாழ்க்கை முறையில் நடப்பவர் எல்லாருக்கும் இதம் புரிந்து முடிவில் முக்திப் பேற்றையும் இல்வாழ்க்கை நல்கியருளும் எனப்படுகிறது.

இல் - மனை, வீடு. இல்லில் இருந்து வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை என வந்தது.
இம்மனை வாழ்வு தரும நிலையமாய்க் கருதப்பட்டுள்ளது.

மனிதன் பிறந்து வளர்ந்து பருவம் அடைந்தவுடன் ஒரு மங்கையை மணந்து கொள்கின்றான். இருவரும் கூடி ஒருமனையில் வாழ்கின்றார். மணமக்கள் மருவி வாழ்கின்ற இந்த இனிய வாழ்வு இல்வாழ்க்கை என நேர்ந்தது.

உலக இயற்கையாய் உலாவி மனித சமூகத்துள் இனிது நடந்து வருகிற இந்நிலைமையை முன்னோர் தலைமையாகக் கருதி வைத்துள்ளனர்.

மணம் ஆகாத பிரமச்சாரி தனி நிலையில் நிற்கின்றான், துறவி உலக நிலைக்கு வேறு ஆகின்றான். மணம் உடையவனே மனை வாழ்க்கையில் அமர்ந்து எல்லாருக்கும் இனிய ஆதாரமாய் இதம் புரிகின்றான்.

பலர்க்கும் நிழல் உதவி என்றது இல்வாழ்பவன் தவம் முதலிய பலவகை நிலைகளில் உள்ளார்க்கும் உணவு முதலியன உதவி உபகரித்துவரும் உரிமை தெரிய வந்தது.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 41 இல்வாழ்க்கை

என்றமையால் கிரகத்தனது நிலைமையும் தலைமையும் புலனாம்.

தரவு கொச்சகக் கலிப்பா

'பேதையர்பால் முகம்பாரா(து) ஓதல் பிரமச்சரியம்:
காதலியை மணம்புணர்ந்து வாழ்தல் காருகத்தியமாம்:
மாதரொடு வனத்துறைந்து கோற்பது வானப்பிரத்தம்;
ஓதுமிவை மூன்றுமொழித்(து) ஒன்றுணர்தல் சந்யாசம்.

இத்தகைய நால்வர்களில் மூவருக்கும், இறந்தார்க்கும்,
அத்தமுதல் அற்றார்க்கும் ஆதாரம் ஆதலினால்
உத்தமமாம் இல்லறமே வாழ்வினுக்கும் உயர்கதிக்கும்
வித்துமாம் துறவறத்தின் வேருமாம்எ னும்வேதம், - திருக்குற்றாலப் புராணம்

நேரிசை வெண்பா

பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ - நிச்சலுங்
கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு. 165 - அறநெறிச்சாரம்

மனை வாழ்க்கையின் மகிமையையும் வகைமையையும் இவ்வாறு நூல்கள் பல கூறியுள்ளன. எல்லார்க்கும் இனிய துணையாய் எவ்வழியும் இதமே புரிந்து உன் குடி வாழ்க்கையைக் குணமாகப் பேணி வருக. அவ்வரவு இருமையும் பெருமையாம்.

பேரின்ப நிலையின் பேறு கருதி முத்திநலம் நல்கும் என்றது. அரியதவத்தால் அடையவுரிய அந்த வீட்டின்பத்தை, சொர்க்கத்தின் பேற்றை இந்த விட்டிலிருந்தே இனிது பெறலாம் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-19, 1:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே