உறுகடனோ உள்ளுயிரை ஈனமுற அழிக்கும் ஈர்த்து - கடன், தருமதீபிகை 252

நேரிசை வெண்பா

மண்டு பெருநோயும் வன்கடனும் வெந்துயரம்
உண்டு படுத்துவதில் ஒப்பெனினும் – கொண்டநோய்
ஊனுடலை வாட்டும் உறுகடனோ உள்ளுயிரை
ஈன முறவழிக்கும் ஈர்த்து. 252

- கடன், தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பெரும்பிணியும், கொடுங்கடனும் கடுமையான துன்பம் ஏற்படுத்தும் நிலைகளில் சமமாயினும், நோய் உடம்பை மட்டும் வாட்டும். பெற்ற கடனோ உள்ளத்தையும் உயிரையும் மிகக் கேவலப்படும்படி இழுத்து அணைத்து அழிக்கும்.

உடம்புகளைப் பிணித்துத் துன்பங்களை உறுத்துவதால் குட்டநோய் முதலிய கொடிய வியாதிகளைப் பெருநோய் எனவும், பிணி எனவும் சொல்லப்படும். அத்தகைய நோய்களை இணைத்துக் காட்டி கடனின் தீமையை இப்பாடல் உணர்த்துகிறது.

எளிதில் தீர்க்க முடியாத கடனை வன்கடன் என்றது. கடன் தன்னைத் தொட்டவனைக் கெட்டவனாக்கிக் குடிகேடு செய்து விடும் கொடுமையுடையது. கடிய நோயினும் கடன் கொடியதாம்.

நோய் துயரம் செய்யுமாயினும் உடல் அளவில் நிற்கும்; கடன் உள்ளே உயிரைப் பற்றி நின்று கொள்ளித் தீ போல் அல்லும் பகலும் துள்ளத் துடிக்க உள்ளத்தைச் சுட்டு வருத்தும்.

கடன் ஈனம் மிகவுடையது. மானக்கேடு ஆனது. அதனால் அதனை அடைந்தவன் அவலக் கவலைகளில் ஆழ்ந்து அல்லலுற்று அலமந்தயர்கிறான்.

”உண்ட உணவும் உடலோடு சேராதே
கண்டவிடம் எல்லாம் கடுவிடமாய்க் - கொண்டவனை
ஈனப் படுத்தும் இழிகடன்போல் எந்நரகம்
ஊனப் படுத்தும் உரை”.

என்றும், நரகத் துன்பத்தை விட கடன் கொடிய துயரமாகும் என்றும் கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் கூறுகிறார்.

கடங்கொண்டு பின்னைக் கொடாது கழிப்பின்
இடங்கொண்டு நிற்கு மிகழ்ச்சியதா அன்று
மடங்கொள் விலங்காய் உழைப்பர்பின் வந்தே
தொடங்கற்க இத்தீத் தொழில். 136 இன்னிசை இருநூறு

என்ற வெண்பாத் தொகுப்பில் பொருளாட்சி என்ற பதினாலாவது அதிகாரத்தில் கடன் கொண்டு, பின் தராது கழித்தால் ஏற்படும் துன்பம் பற்றி, சோழவந்தானூர் பெரும்புலவர் அரசஞ் சண்முகனாரும் மேலேயுள்ள பாடலில் உரைக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-19, 1:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே