பனியாரம் சொன்னக் காதை

வெகுநாட்களுக்குப் பின் இன்று மாலை தேனீருடம் சாப்பிட பனியாரம் செய்தேன் ..... பெயர்த்திக்காக இனிப்புப் பனியாரம் மற்ற எல்லோருக்கும் காரப் பனியாரம்...... சட்டியிலிருந்து எடுக்கும்போதே அம்மாவின் நினைவு தொற்றிக் கொண்டது......
சமையலறையிலிருந்து அவர் என்னை அழைக்கும் குரல்.... “ அமுதா... சீக்கிரம் வா.... அம்மா பனியாரம் சுட்ருக்கேன்..... சூடாக இருக்கும்போதே எடுத்து சாப்பிடு “ என்று உரத்தக் குரலில் அழைப்பார்கள் .... என்னம்மா.... சாப்ட கூப்டும்போதுகூட இவ்ளோ கடுகடுப்பு..... “இருங்க வரேன் “ என்ற சலிப்போடு ..... என்ன செய்து கொண்டிருந்தேனோ... அதையே சில நிமிடம் தொடர்ந்து செய்து முடித்தப் பின்பே மெதுவாகச் செல்வேன்....
“அப்பவே கூப்டேன்... வந்தியா... இப்பப்பாரு ஆறிப்போச்சி” என்று ஆதங்கத்துடன் கடிந்திடுவார்....
இன்று ஆறு ஈடு பனியாரம் ஊற்றினேன்... ஒரு முறைக்கு ஏழு பனியாரம்.... நான் சுட்டு சுட்டு சூடாகக் கொண்டுபோய் வைக்க வைக்க ... கட கட வென்று அத்தனை பனியாரமும் காலி...,.
சுவையில் சிறந்தது இனிப்புப் பனியாரமா...? காரப் பனியாரமா ...? என்ற ஒரு பட்டிமன்றம்வேறு நடந்தேறிக் கொண்டிருந்தது.... கடைசியில் ஒருமனதாய் காரப் பனியாரமே அதுவும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவது ருசி என்று ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.... அப்போது தான் மகன் கடைசியாய் சாப்பிட்டு முடிக்கும் நேரம்..... தம்பி கொஞ்சம் அம்மாக்குப் பிச்சிக்குடு.... நானும் டேஸ்ட் பண்ணிக்றேன்.... என்று சொல்லிய வண்ணம் அவன் அருகில் சென்றேன்.... “எம்மா நீ சாப்டவே இல்லியா.... இந்தா இதல ரெண்ட எடுத்து சாப்டு “என்று என்னிடம் கொடுத்து நெகிழ வைத்தான்......
அப்போது என்னையும் அறியாமல் கண்கள் கசிந்துவிட்டது..... என் தாயின் ஞாபகம்.... இப்படித் தானே அவளும் அன்றைய நாட்களில் தான் உண்ணாமல் எதையும் எங்களுக்குக் கொடுத்து.... நாங்கள் ருசித்து உண்பதை ரசித்திருப்பாள்.....அவள் ஒருநாள் கூட தனக்கு இல்லையே என்று கவலைப் பட்டதே இல்லை....
அம்மா! அன்று என்னை கடிந்து அழைத்ததன் காரணம் இன்று புரிகிறது....

கவிதாயினி அமுதா பொற்கொடி
08:00 pm
25.5.2019

எழுதியவர் : வை.அமுதா (26-May-19, 3:09 pm)
பார்வை : 38

மேலே