புல்வெளிதேசம்,7- கலிபோலி----------பயணம், ----------May 12, 2009

நான் கல்லூரியில் படிக்கும்போது மதுரை அருகே உள்ள ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன். என்னுடன் படித்த நண்பன் ஒருவனின் தாத்தாவின் ஊர் அது. ஊரின் பெயரெல்லாம் நினைவில் இல்லை. அவனது தாத்தாவுக்கு அப்போது நூறு வயதாகிவிட்டிருந்தது. தாத்தா நன்றாகத்தான் இருந்தார். ஒருகாலத்தில் நல்ல உயரமும் பருமனுமாக ராட்சதன் போல அவர் இருந்திருக்கக்கூடும்.மூப்பினால் குறுகி வளைந்து மெலிந்து மிகச்சிறிய உருவமாக இருந்தார். தொங்கிய மூக்குடன் அவர் குனிந்து அமர்ந்திருப்பது இறக்கைகள் உதிர்ந்த ஒரு வயோதிகக் கழுகு அமர்ந்திருப்பது போல் இருக்கும்.

தாத்தாவுக்குப் பற்கள் இல்லை. கண்கள் பழுத்து சருகு நிறம் கொண்டிருந்தன. குரலும் அதிகம் வெளியே வருவதில்லை. காது அனேகமாகக் கேட்காது. ஆனால் நடமாட்டம் நன்றாகவே இருந்தது. கோல் ஏதும் இல்லாமல் குனிந்து நடந்து தனியாக தோட்டத்துக் கிணறுக்குச் சென்று குளித்து வருவார். குலதெய்வம் கோயிலுக்குச் செல்வார். அந்த வயதில் அவருக்கு வாய்ருசிதான் உலகம் மீதான பற்றாக இருந்தது. குறிப்பாக ஆட்டுக்கறி. அவருக்காக கால்கிலோ இறைச்சி வாங்கி வேகவைத்து இரண்டுநாள் வைத்திருந்து கொடுப்பார்கள். வலுவான ஈறுகளால் மென்று மென்று மென்று தின்றுவிடுவார்.

அவரது நூறுவயதுக் கொண்டாட்டத்தை ஒட்டி அவர்களின் குலதெய்வம் அய்யனார் சாமிக்கு கடாவெட்டு ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவே நானும் சென்றிருந்தேன். ஒரு டெம்போ லாரியில் குடும்பமே ஏறி வெகுதூரம் வெற்றுப்பொட்டல் வழியாகச் சென்று ஒரு செம்மண் நிலத்தில் ஒரு கல்மண்டபம் போல விழுது பரப்பி நின்ற் பெரிய ஆலமரத்தடியில் கையில் அரிவாள் ஏந்தி உருட்டிவிழித்து அமர்ந்திருந்த பலவண்ண சிமிண்ட் அய்யனாரின் திறந்தவெளிக் கோயிலை அடைந்தோம். பெரிய குதிரைகள் . ஏராளமான சூலாயுதங்கள். கையோடு கொண்டுசென்றிருந்த கடாவை அங்கேயே வெட்டி கட்டித்தொங்கப்போட்டு சட்டையைக் கழட்டி வெட்டி சோறுடன் சேர்த்து பொங்கி சாப்பிட்டோம்.அந்த இடத்தில் வீசிய மண்வெந்த மணம் கொண்ட காற்றும் அந்த சோற்றின் வினோதமான ருசியும் அப்பெண்களின் கூந்தலின் எண்ணை வாசனையும் குழந்தைகளின் உற்சாகமும் ஆண்களின் சிவந்த கண்களும் சாராயவாசனையும் அவர்கள் அனைவரும் என்னிடம் காட்டிய பேரன்பும் இன்றும் என் நினைவில் நீடிக்கின்றன.

தாத்தாவுக்கு தன் பிறந்தநாள் பற்றிய பிரக்ஞையே இல்லை. கறியே குறியாக அவர் கடாவெட்டும் இடத்திலும் சமைக்கும் இடத்திலும் அமர்ந்திருந்தார். இரவில் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தாத்தாவுக்கு வயது நூறு ஆகிவிட்டது என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். என் நண்பனின் தாய்மாமா ஒரு புராதனமான சான்றிதழைக் காட்டினார். அதில் அவரது பெயரும் வயதும் இருந்தது. அதுதான் ஆதாரம். அந்த ஆவணம் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இருபது வருடம் சேவையாற்றி ,முதல் உலகப்போரில் கலந்துகொண்டு எகிப்திலும் துருக்கியிலும் போர்புரிந்து நாயக் ஆக பதவி உயர்வுபெற்று, ஓய்வுபெற்றதைக் குறிப்பிட்டது. அவருக்கு பென்ஷன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் தாத்தா அக்காலத்தில் பட்டாளத்துக்குப் போனதனால்தான் சில்லறைத்திருட்டையே நம்பி வாழ்ந்த அவரது பெரிய குடும்பம் வறுமையில் இருந்து மீண்டது. பிள்ளைகள் படித்து ஆசிரியர்களாகவும் காவல் அதிகாரிகளாகவும் மாறி நடுத்தர வற்க வாழ்க்கைக்கு வந்தார்கள்.

தாத்தாவிடம் நான் பலத்த குரலில் அவரது போர் அனுபவங்களைக் கேட்டேன். தாத்தாவால் எதையுமே நினைவுகூர முடியவில்லை. அவரை சிரமப்படுத்தும் தோறும் தலை பலமாக ஆட ஆரம்பித்தது. நான் அவரை விட்டு விலகியபோது தாத்தா மிகுந்த சிரமத்துடன் ‘கெய்ரோ’ என்று சொன்னார். முகம் மலர்ந்திருந்தது. என்னை அருகே வா என்று அழைத்து இன்னொரு சொல்லைச் சொன்னார். பலமுறை சொன்னார். எனக்கு எதுவுமே புரியவில்லை. சில வருடங்கள் கழித்துத்தான் அது கலிபோலி என்று தெரிந்துகொண்டேன். தாத்தா அங்கே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கடுமையான போரிலும் கலந்துகொண்டிருந்திருக்கிறார்.

கலிப்போலி போர் இன்றும் பல்வேறு காரணங்களுக்காக உலக அரங்கிலே பேசபப்டுகிறது. உண்மையில் உலகவரலாற்றையே இன்னொரு திசை நோக்கிக் கொண்டுசென்றிருக்கும் வாய்ப்புள்ள ஒரு போர் அது. முதல் உலகப்போர் தொடங்கியபின்னர் நேசநாடுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி அது. அவர்களின் படைபலத்தை அது குறைத்தது. ஊக்கத்தை அழித்தது.அதையெல்லாம் மீறி நேசநாடுகள் இறுதி வெற்றி பெற்றமைக்குக் காரணம் ஒன்றுதான், நேசநாடுகளின் படைகளை நடத்தியவர்களின் ஊக்கம்.

கலிப்போலி போரின் கதையைப்பற்றிய பொதுவான சித்திரம் இது. ருஷ்யாவுக்கு ஐரோப்பிய முனைவழியாகத் போர்முனைக்குத்தேவையான தளவாடங்களைக் கொண்டுசெல்தில் கடுமையான சிரமம் இருந்தது. ஐரோப்பாவிலிருந்து ருஷ்யாவுக்குள் நுழையும் வணிகச்சாலைகளை முழுக்க ஜெர்மனியின் ராணுவக்கூட்டமைப்பு முழுமையாகவே அடைத்துவிட்டிருந்தது. ஆகவே துருக்கியைத்தாக்கி அவ்வழியாக ருஷ்யாவுக்குள் நுழைந்தால் எளிதில் தளவாடங்களைக் கொண்டுசெல்லலாம் என நிபுணர்கள் எண்ணினார்கள். துருக்கி அச்சுநாடுகளின் முக்கியமான ஒரு கூட்டாளிநாடாக இருந்தது. அது ஒரு பேரரசு. ஆனால் நவீன காலகட்டத்துக்குள் அதன் ராணுவம் வரவில்லை. ஆகவே கடுமையான நவீன ஆயுதங்கள் கொண்ட படை எளிதில் துருக்கியை வென்றுவிட முடியும் என்று நேசநாடுகள் எண்ணின. இந்த திட்டத்தின் உருவாக்கத்தில் பிரிட்டனின் கடற்படைப்பொறுப்பில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு முக்கியப்பங்கு இருந்தது.

1914 பிப்ரவரி 19ல் டார்டனெல்ஸ் என்னும் இடத்தில் பிரஞ்சுப்படைகளும் ஆங்கிலேயப்படைகளும் இணைந்து துருக்கியப்படைகளை தாக்கின. இதில் எச் எம் எஸ் குயீன் எலிசபெத் என்ற கப்பலும் பங்கெடுத்துக்கொண்டது. தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது. திட்டம் நிறைவேறிவிடும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டது. அட்மிரல் கார்டன் லண்டலில் இருந்த சர்ச்சிலுக்கு பதினைந்து நாளில் துருக்கியத்தலைநகரமான கான்ச்டாண்டிநோபிளை கைப்பற்றிவிடலாமென தகவல் அனுப்பினார். ஜெர்மனியர்களின் செய்தி ஒன்றை மறித்துக் கேட்ட ஒற்றர்கள் துருக்கியர்களுக்கு மிகக்குறைவான வெடிப்பொருட்களே இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே மார்ச் 17 அன்று ஒரு பெருந்தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது. அட்மிரல் டெ ரோபோக் தலைமைப்பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டார்


மார்ச் பதினெட்டாம் தேதி முக்கியமான தாக்குதல் ஆரம்பித்தது. பதினெட்டு போர்க்கப்பல்கள் டார்டெனல்ஸ் துறைமுகத்தைத் தாக்கின. ஆனால் நினைத்தது போல போர் அமையவில்லை. பிரெஞ்சு கப்பல் ஒன்று அதிலிருந்த அனைத்து மாலுமிகளுடன் நீர்க்கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது. பிரிட்டிஷ் பல்லகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகின. கப்பல்கள் பெரும் சேதத்துடன் பின்வாங்க நேரிட்டது. துருக்கியர் நேசநாட்டுப் படைகளிடம் கிடைக்கச்செய்த அந்தச் செய்தி வேண்டுமென்றே திசை திருப்பும் நோக்கம் கொண்ட ஒன்றாக இருந்தது. அவர்கள் கடல்முழுக்க கண்ணி வெடிகளை வைத்திருந்தார்கள். ஆனால் போர் நடந்துகொண்டிருந்தபோது சேதங்களைப்பொருட்படுத்தாமல் கப்பல்கள் முன்னோக்கிச் செல்ல சர்ச்சில் ஆணையிட்டதாகச் சொல்லபப்டுகிறது. அப்படிச் சென்றிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும், காரணம் துருக்கிய துறைமுகங்களில் போதிய படைகள் உண்மையில் இருக்கவில்லை.

இந்தத் தோல்விக்குப்பின்னர்தான் ஒரு மாபெரும் தரைப்படைத்தாக்குதல் திட்டமிடப்பட்டது.பிரிட்டனின் போர்த்துறைச் செயலர் கிட்செனர் பிரபு தலைமைத்தளபதி இயான் ஹாமில்டனை மத்தியதரைகக்டல்பகுதியின் அத்தாக்குதலுக்கு பொதுத்தலைவராக நியமனம் செய்தார். இந்தத்தாக்குதலுக்காக பிரிட்டிஷ் பேரரசின் எல்லா காலனி நாடுகளில் இருந்தும் படைகள் திரட்டப்பட்டன. ஆஸ்திரேலிய- நியூசிலாந்து படைகள் [ANZAC] ஏற்கனவே எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. பிரிட்டிஷ் 29 ஆவது டிவிஷன் படையும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. பிரெஞ்சு ராணுவப்பிரிவும் இருந்தது. முன்னரே எகிப்தில் போரில் இறக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் இந்திய படைகளும் இங்கே கொண்டுவரப்பட்டன. அதிகமும் சீக்கியர்களும் கூர்க்காக்களும் அடங்கிய அப்போரில் கொஞ்சம் தமிழர்களும் இருந்தார்கள். செனகலை சேர்ந்த ஆப்ரிக்கர்களும் இருந்ததாக தெரிகிறது.மறுபக்கம் துருக்கியின் சக்திவாய்ந்த ராணுவத்தளபதியான முஸ்தபா கமால் பாஷா தலைமையிலான படைகள் கலிபோலி பகுதியைக் காத்து நின்றன. .

தாக்குதல் ஏப்ரல் 25 அன்று ஆரம்பித்தது. பிரிட்டிஷ் படைகள் ஹெல்லெஸ் என்னும் இடத்தில் பாலைவனத்தில் இறங்கி கிலிட்பகிர் என்னுமிடத்தில் இருந்த கோட்டைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. ஆஸ்திரேலிய நியூசிலாந்து படைகள் காபா டேப் என்னும் இடத்தில் இறங்கி கிலிட்பகிரில் இருந்து பின்வாங்கும் துருக்கிய படைகளை பின்பக்கம் மறித்துத் தாக்கும்படி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இறங்கிய அந்த சிறிய குடா இன்று ஆன்சாக் குடா என்று அழைக்கபடுகிறது.

ஆரம்பத்தில் பெரும்பாலும் கைவிடப்பட்டு கிடந்த நிலம் வழியாக ஓரளவு முன்னேறுவதற்கு நேசநாட்டு படைகளால் முடிந்தது. ஆனால் சீக்கிரமே நிலைமை மாறியது. மழை பெய்ய ஆரம்பித்தது. அப்பகுதியின் மண் கரிய சேறாக ஆகியது. கடற்கரைகளில் படகுகளில் வந்திறங்கி வழுக்கும் சேற்றில் தள்ளாடி நடந்த நேசநாட்டுப்படைகளை அருகே இருந்த குன்றின்மீது வசதியாக இயந்திரத்துப்பாக்கிகளை அமைத்துக்கொண்டு காத்திருந்த துருக்கியர்கள் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினார்கள். ஆரம்பத்தில் கரையிறங்கிய வீரர்களில் நூற்றுக்கு ஒருவர் கூட மிஞ்சவில்லை. பின்னர் கடுமையான பீரங்கித்தாக்குதல்களின் நிழலில் மேலும் தீவிரமாக துருப்புகளை இறக்கி துருக்கியரைப்பின்னுக்குத்தள்ளிவிட்டு அந்தக் குன்றுகளைக் கைப்பற்றும் கடும் முயற்சியில் ஈடுபட்டது நேசநாட்டுப்படை.

ஆன்சாக் படைப்பிரிவுகள் இந்தப்போரில் மிக மோசமான அழிவைச்சந்தித்தன. முஸ்தபா கமால் பாஷாவின் திறமையான போர் உத்திகள் ஆஸ்திரேலியப்படைகளை திறந்த வெளியில் அலைக்கழித்தன. ஆஸ்திரேலியபப்டைகள் பதுங்கு குழிகளை அமைத்துக்கொண்டு தாக்குதலை எதிர்த்து நின்றாலும் கூட துருக்கியர்களின் தீவிரமான எதிர்ப்பை சமாளிக்க அவர்களால் முடியவில்லை. மேமாதம் இரண்டாம் தேதி ஆன்சாக் படைகளின் தலைமைத்தளபதியானரல் காட்லே ஆன்சாக் படைகளை ரஸ்ஸல்ஸ் டாப் என்னும் குன்றைக் கைப்பற்றும்படி அனுப்பினார். ஆனால் ஆயிரம் பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆன்சாக் படைகளின் முதல்பேரிழப்பு அது

துருக்கியர் மேமாதம் 19 ஆம் தேதி மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட 42000 துருக்கிய சிப்பாய்கள் பதினேழாயிரம் பேர்கொண்ட ஆன்சாக் படைகளை சூழ்ந்து தாக்கினார்கள். ஆனால் அந்தப்போரில் துருக்கியர்களுக்கே இழப்பு ஏற்பட்டது. ஆன்சாக் படைகளின் வெடிப்பொருள் வல்லமை அதிகமாக இருந்தது. துருக்கியர் தரப்பில் பத்தாயிரம்பேர் காயமடைந்து மூவாயிரம் பேர் இறக்க நேரிட்டது. ஆன்சாக் தரப்பில் 400 பேருக்குக் காயமும் 130 பேரின் உயிரிழப்புமே ஏற்பட்டது. துருக்கியருக்கு இது பெரும் பின்னடைவாக இருந்தது. இறந்தவர்களை புதைக்கும்பொருட்டு ஒரு தற்காலிகப்போர்நிறுத்தம்கூட ஏற்பட்டது.

மேமாதம் கடலில் நின்ற பிரிட்டிஷ் கப்பல்களை துருக்கிய நீர்க்கண்ணிவெடிகளும் ஜெர்மனியின் நீர்மூழ்கிகளும் தாக்கி பல கப்பல்களைச் செயலிழக்கசெய்தன. பல கப்பல்கள் மூழ்கின. ஆகவே கப்பல்படை மெல்ல பின்வாங்க நேர்ந்தது. ஆகவே கரையிரங்கிய படைகளுக்கு உணவும் தளவாடங்களும் தொடர்ச்சியாக கிடைக்காத நிலை ஏற்பட்டது. துருக்கியர் தரப்பிலும் ஆயுதப்பற்றாக்குறை கடுமையாக நிலவியது. ஆனாலும் துருக்கியர் நேசநாட்டு பதுங்குகுழிகளைத் தாக்கினார்கள். கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இருதரப்பிலும் கால்பங்கு வீரர்கள் இறந்தார்கள். துருக்கியர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை தொடுத்துக்கொண்டே இருந்தார்கள். மெல்லமெல்ல மேலே செல்வது சிரமம் என்னும் உணர்வை அடைந்து நேசநாட்டுப்படைகள் பின்வாங்கின. 1915 டிசம்பருக்குள் மொத்த படைகளும் கலிபோலியில் இருந்து வெளியேற்றபப்ட்டன.

கலிப்போலி போரில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் துருக்கியர் கொல்லப்பட்டிருக்கலாமென்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். துருக்கியர் கணக்கின்படி அது எண்பத்தாறாயிரம்தான். பிரிட்டிஷ் படைகளில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் இறந்தோ காணாமலாகியோ போயிருக்கிறார்கள். ஏறத்தாழ முப்பதாயிரம் ஆஸ்திரேலியர்கள் இறந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய மக்கள்தொகைக்கு அது மிக அதிகமான எண்ணிக்கைதான்.

ஆஸ்திரேலியாவில் கலிப்போலி போர் ஒரு தொன்ம வடிவத்தை அடைந்திருக்கிறது. கலிப்போலி என்பது ஆஸ்திரேலியர்கள் அதிகமாக இறந்த ஒரு போர் என்ற எண்ணம் அங்கே இருக்கிறது. ஆனால் துருக்கியரும் பிரிட்டிஷ் படையினரும் பிரெஞ்சு படையினருமே அதிகமாக இறந்திருக்கிறார்கள். உண்மையில் பிரிட்டிஷ் படைகளில் அதிகமாக இறந்தது இந்தியர்கள்தான். பிரெஞ்சு படைகளில் அதிகமாக இறந்தது செனகல் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதாவது ஆஸ்திரேலியர்களை விட அதிகமான இந்தியர்கள் கலிபோலி போரில் இறந்தார்கள்.

ஸ்டார்டிவி அதிபரான ரூபர்ட் முர்டோக் 1981ல் எடுத்த கலிபோலி ஒரு செவ்வியல் போர்ப்படமாக கருதப்படுகிறது.பீட்டர் வெர் இயக்கிய அப்படத்தில் நடித்த மெல்கிப்ஸன் பெரும் புகழ்பெற்றார். அந்தப்படம் ஆஸ்திரேலியர்களின் வீரத்தையும் அந்த வீரம் எப்படி அரைகுறை ஞானமும் அகங்காரமும் கொண்ட பிரிட்டிஷ் ஜெனரல்களால் வீணடிக்கப்பட்டது என்பதையும் காட்டியது. அது பெரும் விவாதங்களை உருவாக்கியது. ஆனால் உண்மையில் இந்த கட்டுரைக்காக நான் இணையத்தில் வாசிக்க நேர்ந்த எல்லா கட்டுரைகளிலும் துருக்கியின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியே உள்ளது. துருக்கி மிகப்பழமையான ஆயுதங்களுடன் மிகக்குறைவான வெடிப்பொருட்களுடன் இருந்தது. அதையும் மீறி அது அடைந்த வெற்றி என்பது பாராட்டுக்குரிய ஒன்றுதான். ஆனால் அந்த அங்கீகாரத்தை ஒரு நூற்றாண்டு தாண்டியும்கூட மேலைநாட்டு ஊடகங்கள் துருக்கிக்கு அளிக்க தயாராக இல்லை.

கன்பெரா போர் நினைவகத்தில் கலிபோலி போர்க்களக்காட்சிகளை காண்பது ஓர் அரிய அனுபவமாகவே இருந்தது. வழுக்கும் சேற்றில் செல்லும் ஆன்சாக் வீரர்கள். தரையில் பூபோல விரியும் குண்டுகள். வானில் வெடிக்கும் விமானங்கள். புகை எழுந்த வானம். எங்கும் சடலங்கள். கலிப்போலியைச் சித்தரிக்கும் செவ்வியல்பாணி ஓவியங்களும் மனதுக்குள் பெரும் கனவை நிறைப்பனவாக இருந்தன. பதுங்கு குழிகளுக்குள் செறிந்திருக்கும் வீரர்களின் முகங்களில் உள்ள அச்சமும் கிளர்ச்சியும் உக்கிரமாக வரையப்பட்டிருந்தன. போர் என்பது மனிதன் உள்ளூர விரும்பும் ஒரு விளையாட்டு. ஏனென்றால் அங்கே மனிதன் பண்பாடு தொடங்கிய காலம் முதல் அடக்கி அடக்கி வைத்திருந்த ஒரு விஷயம் அனுமதிக்கப்பட்டுவிட்டது. கொலை. மரணமுனையில் நிற்கும் மனிதன் அவனது மனித நிலையை இழந்து தூய விலங்குநிலையை அடைகிறான். வேட்டைமிருகமாக, வேட்டையாடப்படும் மிருகமாக ஆகிறான். மனிதனின் உலகியல் இன்பங்கள் எல்லாமே தூயமிருகநிலை சார்ந்தவை.

போர்நினைவிடத்தின் உள்ளே பெரிய கூடங்களில் அக்காலத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மெல்லிய பளபளப்புடன் அரையிருளில் நின்றன அலுமினியப்பருந்துகள். ஆட்கள் சேர்ந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு அவ்விமானங்கள் பறக்கும் கறுப்புவெள்ளை காட்சிகளை பெரிய திரையில் ஓடவிட்டுக் காட்டினார்கள். அதிரும் இயந்திரச் சத்தம். குண்டுகளின் வெடிப்பொலி. ஒரு முழு விமானச்சண்டையையே அரைவட்ட வடிவமாக நாலைந்து அகலத்திரைகளுக்குச் சமானமான அளவில் இருந்த திரையில் போட்டுக்காட்டினார்கள். தலைக்குமேல் ஒரு விமானச்சண்டையைப்பார்த்த அனுபவம் ஏற்பட்டது.

போர்நினைவகத்துக்கு வெளியே சுற்றுச்சுவர்களில் ஆன்சாக் போரில் இறந்தவர்களின் பெயர்கள் அனைத்துமே அகரவரிசைப்படி எழுதப்பட்டிகந்தன. சிலபெயர்களின் மீது சிறிய ரோஜாமலர்களை செல்லோ§ட்ப் வைத்து ஒட்டியிருந்தார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இன்னமும் அவர்களின் மரணத்தில் துயரம் கொள்ளும் நெஞ்சங்கள் இருக்கலாம். போர் எந்த வளர்ச்சியையும் அளிப்பதில்லை. நாகரீகத்துக்கு எந்தப்பங்களிப்பையும் அளிப்பதில்லை. எந்தப்போரும். வெறும் துயர் நினைவுகளை மட்டுமே அது விட்டுச்செல்கிறது. அன்றைய கோபங்களுக்கும் பேராசைகளுக்கும் அதிகாரவெறிக்கும் இன்று என்ன மதிப்பு? இன்று ஆச்திரேலியாவின் குடிமகனாக ஆகி ராணுவத்திலும் இருக்கும் ஓர் துருக்கியனுக்கு ஆன்சாக் நினைவு என்ன பொருளை அளிக்கும்? வரலாறு தொடர்ந்து மனிதனுக்கு பாடம் கற்பிக்கிறது. கற்காதவர்களை நோக்கி ஏளனம் செய்கிறது. ஆனால் மனிதர்கள் எதையும் கற்பதில்லை.

ஆனால் போரின் மரணத்தில்கூட எத்தனை பெரிய வேறுபாடு. ஆன்சாக் படைகளில் இறந்த அனைவர் பெயரும் வரலாற்றில் இருக்கிறது. அவர்கள் கல்லில் பதிந்திருக்கிறார்கள். ஆனால் அந்தப்போரில் இறந்த பல்லாயிரம் இந்தியர்களின் பெயர்கள் எங்குமே இல்லை. அன்றைய பிரிட்டிஷ் ராணுவம் அதில் இறந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் பெயர்களை மட்டுமே முறையாகப் பதிவுசெய்துள்ளது. மற்றவர்களின் பெயர்கள் அன்று வீசிய காற்றில்தான் பொறிக்கப்பட்டிருக்கும்



கலிபோலி பகுதியில் ஆன்சாக் குடாவில் புதைக்கப்பட்ட ஆன்சாக் வீரர்களுக்காக அங்கே ஒரு நினைவகம் உள்ளது. அவர்களைத் தோற்கடித்த துருக்கியின் ஆட்டா துர்க் முஸ்தபா கமால் பாஷா அங்கே ஆற்றிய ஓர் உரையின் சிலவரிகள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மண்ணில் தங்கள் ரத்தத்தைச் சிந்தி உயிர்துறந்த மாவீரர்களே நீங்கள் இன்று ஓரு நட்புநாட்டில் கிடக்கிறீர்கள். ஆகவே அமைதியாக உறங்குங்கள். நம்து நாட்டில் அருகருகே துயிலும் ஜானிகளுக்கும் மஹ்மூதுகளுக்கும் நடுவே எந்த பேதமும் இல்லை. தங்கள் மைந்தர்களை இந்த தொலைதூரத்து நாட்டில் போர்புரிய அனுப்பிய அன்னையரே, உங்கள் கண்ணீரைத்துடைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மைந்தர்கள் இப்போது பேரமைதியின் மார்பில் துயில்கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கும் மைந்தர்கள்தான்”

எழுதியவர் : Jayamohan minnanjal (26-May-19, 11:13 pm)
பார்வை : 17

மேலே