உரிய மதமாகி வந்தது மாண்புள்ளுணரின் இதமே எவர்க்கும் இனிது - மதம், தருமதீபிகை 511

நேரிசை வெண்பா

பெரிய மதியில் பெருகி எழுந்து
தெரிய வெளியே தெளிவாய் - உரிய
மதமாகி வந்தது மாண்புள் ளுணரின்
இதமே எவர்க்கும் இனிது. 511

- மதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயர்ந்த பெரியோர்களுடைய சிறந்த அறிவால் தெளிந்து கண்ட கடவுள்நெறி மதம் என வந்தது; அதன் இயல்பினை துணுகி உணரின் எவ்வழியும் எவர்க்கும் இதமேயாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் மதம் இன்னது என்கின்றது.

உலகம் சீவ கோடிகளுக்கு நிலையமாயுள்ளது. சீவர்களுள் மனிதன் யூக விவேகங்கள் தோய்ந்து உயர்ந்து உலாவுகின்றான். அறிவு நலங்கள் பெருகியுள்ளமையால் அவனுடைய வழி முறைகளும் வாழ்வும் பலவாறு வளம் பெற்று வந்துள்ளன.

தான் கண்ட உலகத்தைக் கொண்டு காணாத ஒரு அரிய பொருள் உண்டு என்று உணர்ந்து கொண்டான். ஒளியும் இருளுமாய் மாறி மாறிப் பொழுது சுழன்று வருவது அவனுக்கு வியப்பையும் விம்மிதத்தையும் விளைத்து வந்தது. பகல் இரவு என அதனை அழைத்து வந்தான். எல்லாம் ஒழுங்காய் இயங்கி வருதலால் அவற்றை இங்ஙனம் இயக்க வல்லான் ஒருவன் உளன் என்பதை உறுதியாகக் கருதி ஓர்ந்தான். கண்ணுக்கு அதிசயமாகத் தோன்றிய பொருள்களை எல்லாம் துதி செய்து தொழ நேர்ந்தான். யூக விவேகங்கள் வேகமாய் வளர்ந்து வந்தன.

பெரிய நெருப்பு உருண்டை போல் வானத்தில் தோன்றி ஒளி செய்து வருகிற சூரியனை முதலில் தொழுது வணங்கினான். பின்பு மலை, கடல், தீ, பாம்பு முதலிய பொருள்களையும் வணங்கி வந்தான். வழிபாடுகளாய்ப் பெருகி வந்துள்ள அவை மதங்கள் என வளர்ந்து நிற்கின்றன. பழக்கங்கள் வழக்கங்களாயின.

கடவுளுடைய அருளைப் பெறுதற்கு இதுதான் வழி என்று முன்னோர்களால் மதித்துக் கொண்டது மதமென வந்தது. உயர்ந்த மதியால் தெளிந்து வந்தது என்னும் பொருளையுடையதாதலால் மதம் என்ற பெயர் இதமும் இனிமையும் மருவி மிளிர்கின்றது.

‘பெரிய மதியில் பெருகி’ என்றது மதத்தின் பிறப்பு நிலை தெரிய வந்தது.

மனிதனுடைய இயற்கையறிவு வளர்ச்சியுடையது. கல்வி கேள்விகள் ஆகிய செயற்கை உதவிகளால் அது செழித்துத் தழைத்து உயர்ச்சியாய் ஒளி வீசி வருகிறது.

புனித எண்ணங்கள் தோய்ந்து சீவான்மாவையும், பரமான்மாவையும் கருதியுணரும் பொழுது அந்த மெய்யறிவு தத்துவ ஞானம் ஆகின்றது. அவ்வாறு தெளிந்த ஞானக் காட்சியடைந்த பெரியோர்கள் கடவுளை நோக்கி ஒழுகி வந்த விழுமிய வழிகளே மதங்கள் என வெளிவர நேர்ந்தன.

சன்மார்க்கம், நன்னெறி, நல்வழி, முத்திநெறி என்பன மனிதர் பரத்தை நோக்கிச் செல்லும் வழிகளை விழிகள் காணக் காட்டியுள்ளன. ஒரு ஊருக்குப் பல வழிகள் இருத்தல் போல் பேரின்ப வீட்டுக்கும் நெறிகள் பல மருவி யிருக்கின்றன.

கால தேசங்களுக்கு ஏற்பப் பெரியோர்கள் தோன்றியிருத்தலால் அவர் கண்ட கதி நெறிகளும் விதி முறைகளும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் மாறாய் வேறுபட்டு நிற்கின்றன.

புத்தர், ஏசு, நபி முதலியோர் பெரிய மதத் தலைவர்கள்; அரிய மார்க்கதரிசிகளாய் அத்தீர்க்க தரிசிகள் நிலவியுள்ளனர்.

சிறந்த ஞான சீலர்கள் புகுந்து போன வழிகளாய் வந்துள்ளமையால் மதங்கள் உலக மக்களுக்கு விழிகளாய் ஒளி புரிந்து விழுமிய உறுதி நலங்களை உணர்த்தியுள்ளன.

The religions of the world are the ejaculations of a few imaginative men. - Emerson

’உலகிலுள்ள மதங்கள் சில மதிமான்களுடைய வழி மொழிகளே' என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் இங்ஙனம் கூறியுள்ளார். தத்துவ வுணர்வு உத்தம ஒளிகளாய் மிளிர்கின்றன.

உலகில் தோன்றியுள்ள மத ஆசிரியர்களுள் புத்தர் எவ்வகையிலும் தலை சிறந்தவர். அவர் பிறந்த நாடு பெருமகிமை பெற்றது. அவரைப் பெற்றருளிய இந்தியாவை உலகம் முழுவதும் சிந்தனை செய்து வந்தனையோடு போற்றி வருகிறது. ஆசியசோதி என மேல்நாட்டாரும் அவரைப் புகழ்ந்து போற்றி வருகின்றனர். அவருடைய அருள் சீர்மைகளும், பொருள் மொழிகளும் உயிரினங்களுக்கு உயர்வான உய்தி நலங்களை அருளியுள்ளன.

உயிர்கள் எல்லாம் உணர்வுபாழ் ஆகிப்
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறிவு இழந்த
வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச்
10 சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலைஓர்
இளவள ஞாயிறு தோன்றியது என்ன, 10 மணிமேகலை

அவர் தோன்றியுள்ளமையால் அவரால் உலகம் அடைந்துள்ள நன்மைகளை ஊன்றி உணர்ந்து கொள்ளலாம்.

அறிவு பாழாய் இழிநிலையடைந்து மக்கள் இருள் மண்டியிருந்த பொழுது அருள் ஒளி வீசி இனிய இளஞ்சூரியன் போல் புத்தர் தோன்றினார் என்றது மனித சமுதாயம் அவரது புனித போதனைகளால் உயர்ந்திருக்கும் உண்மையை எண்மையாகத் தெளிந்து கொள்ள வந்தது. ’இனியார்க்கும் இனியனாம் இன்னமுதே’ என அவரை உன்னியுருகி முனிவர்கள் புகழ்ந்துள்ளனர்.

வழிபாடு செய்யும் முறைகளில் வேறுபட்டிருப்பினும் தரும நீதிகளை எல்லா மதங்களும் ஒரு முகமாகவே போதித்துள்ளன. மதங்கள் யாவும் என்ன சொல்லுகின்றன? மகான்களுடைய எண்ணங்களையே மதங்கள் இதமாகப் போதித்து வருதலால் அவை சீவ கோடிகளுக்குத் தேவ அமுதமாய் மேவி நிற்கின்றன.

எவ்வுயிர்க்கும் எவ்வகையிலும் யாதும் துன்பம் செய்யாதே; எல்லார்க்கும் அன்பாய் யாண்டும் இதமே செய் என்பதே மத போதனைகளின் சாரமாய் மருவியுள்ளது.

“Thou shalt love thy neighbour as thyself.” (Bible)

’உன்னைப் போலவே பிறரையும் அன்போடு பேணுக' என ஏசு இனிய நீதிகளைப் போதித்திருக்கிறார்,

'மனிதர்களிடம் அன்புரிமையோடு நடந்து வருவோரை ஆண்டவன் அருள்புரிந்து உயர்த்துகிறான்’ – குரான் - என நபிநாயகம் இங்ஙனம் கூறியுள்ளார்.

அன்பு நலம் கனிந்த இதங்கள். உயிரைப் புனிதப்படுத்தி உயர்நிலையில் உய்த்தலால் அவற்றைப் பேரின்ப சாதனங்களாக மேலோர் எவ்வழியும் உரிமையோடு பேணியுள்ளனர்.

சமயவாதிகள் எல்லாரும் இந்த நீர்மையில் சிந்தை ஒத்து வந்தனை செய்து முந்தி வந்திருத்தலால் அன்பு நெறி யாண்டும் இன்ப நெறியாய் இசை மிகுந்துள்ளது.

நேரிசை வெண்பா

அருள்கனிந்த நெஞ்சனாய் ஆருயிர்பால் அன்பும்
பொருள்பொதிந்த சொல்லும் பொருந்தி - மருள்கடிந்து
வாழும் ஒருவன் வழியே மதங்களெலாம்
சூழும் தொடர்ந்து தொழுது.

சீவர்களுக்கு இதம் புரிந்தொழுகும் இனிய நீர்மையாளனை மதங்ளெல்லாம் உவந்து தொழுகின்றன. அவற்றின் உயிர்நிலை.அவனிடம் உறைந்துள்ளமையான் அங்ஙனம் தொழுகின்றன.

‘இதமே எவர்க்கும் இனிது’ எல்லா மதத்தவர்களும் உரிமையோடு கருதி ஒழுகி வருவது உயிர்க்கு இதமேயாம். இந்த இதம் இனிய இதயத்திலிருந்து உதயமாகிறது. மனிதனுடைய உள்ளத்தைப் பண்படுத்திப் புனிதநிலையை அருளி வருவது எதுவோ அதுவே இனிய மதமாம்.

இனிமைப் பண்பு கனிவு மிகவுடையது; அது மனிதனைப் புனிதமாக்கிக் தெய்வத் தேசை அருளுகிறது. எங்கே அன்புநலம் கனிந்திருக்கிறதோ அங்கே கடவுள் அருள் சுரந்து நிற்கிறது.

“God is love” 'அன்பே கடவுள்' என அயல் நாட்டவரும் உவந்து மொழிந்து வருதலால் அதன் இயல்பினை உணர்ந்து கொள்ளலாம்.

உயிர்களுக்கு இரங்கி உதவி புரிந்து வருவது தெய்வீக நீர்மையாதலால் அதுவே திவ்விய மதமாய்ச் சிறந்து திகழ்கிறது.

'சந்திர கிரணங்கள் போல் உயிர்களுக்கு இதம் செய்பவர் எவர்? அவரே உயர்ந்த உத்தமர்' என்னுமிது இங்கே உய்த்துணரவுரியது. தெள்ளிய மதி ஒள்ளிய மதியாய் உதவி புரிகிறது.

இனியராய் இதம் புரிவதே புனித மதமாம்; அந்தப் புண்ணிய நிலையைப் போற்றி ஒழுகிக் கண்ணியம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-19, 8:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே