சாயனோர வதாக்ஷி நோஅய் அல்லது さようなら私の愛

எனக்கு பழகி விட்டது.

என் பையில் இரண்டு கோலி குண்டுகள் இருக்கும். ஒன்று பச்சை. மற்றது சிகப்பு.

ஒரு விஷயத்தில் முடிவெடுக்க திணறும் போதும் அதில் ஒன்றை எடுத்து பார்ப்பேன். சிகப்பு வந்தால் வேண்டாம். பச்சை வந்தால் ஜெயம். முடிந்தது வேலை.

அணையின் நேரெதிர் கிழக்கே மாந்தோப்புகள் அடர்த்தியாக இருக்கும். அதனிலும் ஊடுருவிச் செல்லும்போது ஒரு வீட்டை பார்க்கலாம். வெகு காலம் முன்பே அது கட்டப்பட்ட வீடு.

புராதன தன்மையில் பழுப்பு நிறத்தில் கட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடு. மௌனத்தில் வெந்த செங்கல் கொண்டு கட்டி இருக்கலாம். இன்னும் சுடுகிறது.
ரஷ்யப்படங்களில் இந்த வீடுகளை உங்களால் பார்க்க முடியும்.

இப்போது அங்கு தான்செனிய பெண் ஒருத்தி இருக்கிறாள். இல்லை. இறந்து விட்டாள். அவள் இறப்பு ஒன்று தற்கொலை அல்லது கொலை. வயதை யூகிக்க முடியாத உடல்வாகு. அவளை நான் பார்த்தது உண்டு. தமிழ் பேசுவாள்.

அவளிடம் மிதமிஞ்சிய ஏதோ ஒன்று கிறங்கிக்கொண்டே இருக்கும். நாம் அதை இன்னதென்று முடிவு செய்யவும்
இயலாது.

அவள் செத்து போனாள்.

அவளிடம் ஒரு பெரிய மலைப்பூனை ஒன்று உண்டு. தான்செனிய பூனைகளில் அது மிக அபூர்வமான ஒன்று.

அது பூனை போலவோ புலி போலவோ இருக்காது. அந்த தோப்புகளை தாண்டுவோர் அந்த பூனையை பார்க்க வேண்டும் என்றும் பார்க்க கூடாது என்றும் ஒரே நேரத்தில் ஆசை கொள்வர்.

அவள் உடலை ஆய்வு செய்தபோது அதில் சில இடங்களில் வைர கற்கள் இருந்தன என்றும் அவள் உடம்பில் சில முத்திரைகள் இருந்தன என்றும் சொல்லப்பட்டது. விசாரணையை தீவிரமாக ஆரம்பித்து விட்டனர் என்றும் ஊர் மக்கள் பேசிக்கொண்டனர்.

இன்று  நான் தோப்புக்குள் அந்த வீட்டின் அருகில் சென்று காத்திருந்தேன்.
பூனையை பார்த்து விட வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். எனது நண்பன் அந்த பூனை ஜப்பானிய படங்களை விரும்பி பார்க்கும் அது கேவும்போது நாய்கள் கூட உறைந்து நிற்கும் என்றும் அருகில் கூரை வீடுகள் இருந்தால் தீப்பிடித்து எரியும் என கூறியிருந்தான்.

வெயில் மிதத்தில் இருந்து உஷ்ணத்தை தொட்டது. செவ்வெறும்புகள் குளிர் மிகுந்த தரையில் சில கணங்கள் அசையாது நின்றன. பறவைகளின் ஒலிகள் ஒன்றும் கேட்கவில்லை. ஒரு
அமானுஷ்யமான வாசனை பரவியது.
நிமிர்ந்த போது எந்த எரிச்சலும் இல்லாமல் சூரியனை பார்க்க முடிந்தது.
மரங்களின் இலைகள் கிஸுகிஸுப்பான
குரலில் கத்தியால் அறுப்பது போன்ற வன்மத்துடன் எதையோ ஏவும் மொழிகளை சொல்ல ஆரம்பித்தன.

மூளைக்குள் யாரோ தாக்கும் உணர்வு. பையில் இருந்த செல்போனில் நீர் கசிய ஆரம்பித்தது. அடுத்த வினாடி அந்த கேவல் ஒலி கேட்டது. என் பற்கள் கூசி நடுங்க ஆரம்பித்தன. கால்களில் உதறல். கண்ணில் இருந்து கசப்பான சுவையில் கண்ணீர் நாற்றத்துடன் வழிய ஆரம்பித்தது. குழாயில் நீர் வருவது போல் கண்ணீர் கொட்டியது.

அப்போதுதான் மூளையில் பெயர் தெரியாத ஒரு ஜப்பானிய படம் ஓட ஆரம்பித்தது.

அந்த வீடு சுற்றிலும் யாரும் புகாத வண்ணம் சீல் செய்யப்பட்டு இருந்தது.  வீட்டினுள் நான் புழங்கிய அறைகளை காண நேர்ந்தது. அவளுக்கும் எனக்கும் இடையில் ஒரு பெரிய விழுது போல் அந்த மலைப்பூனை தன் வாலை அசைத்து கொண்டிருக்க அதில் நொடிகள் நெருப்பு பொறிகளாக தெறித்தன.

அவள் என் கைகளை பற்றிக்கொண்டு தான்செனிய பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தாள். அதன் முடிவில் அவள் சொன்னது "சாயனோர வதாக்ஷி நோ அய்"...

நான் பலங்கொண்ட மட்டும் அவளை அறைந்த போது அந்த பூனை கதறியபடி தன் நகங்களால் தரையில் வெகு வேகமாக ஓர் பள்ளம் தோண்ட ஆரம்பித்தது. அங்கு ரத்தம் பீறிட்டது.

நான் இப்போது தனியாக இருக்கிறேன்.
எல்லாம் முடிந்து போய் இருந்தது. ஒன்றும் ஆகவில்லை. எறும்புகள் மரம் பறவைகள் அந்த வீடு எரிக்கும் சூரியன் எல்லாம் அப்படியே இருந்தன. கனவு. இது கனவு இல்லை. ஒரு செய்தி. யாருக்கோ இதை நான் சொல்ல வேண்டும்.

அங்கிருந்து கிளம்பினேன்.

சிறிது நாட்களில் மலைப்பூனை அகமலை வனத்துக்குள் சென்று விட்டதாகவும் தோட்டத்து நாய்கள் தங்களுக்குள் கூடி கூடி பேசுவதால் அங்கிருக்கும் மக்கள் அதை உன்னிப்பாக பார்த்து கொண்டே இருக்கின்றனர் என்றும் என் நண்பன் சொன்னான்.

ஊருக்குள் சில பெண்கள் இரவில் ஜப்பானிய மொழியில் உளறி பேசுவதாக தெரிந்தது. அப்போது அவர்கள் முகம் ஜப்பானிய பெண்களை போல் மாறி விடுவதால் அது ஜப்பானிய மொழியாக இருக்கும் என்று கூறினர்.

அன்று எனக்கு உண்டான காட்சியை யாரிடம் சொல்வது எப்படி தீர்க்கமாக விவரிப்பது என்பது தெரியவில்லை.
கடவுள் சாமியார் என்று செல்வதும் அப்போது சரியாக தோன்றவில்லை.
அவளுக்கும் எனக்கும் என்னவோ ஒரு தொடர்பு இருந்தது இப்போது அது இல்லை. இது புரிந்தபோது நான் யாருடன் இருந்தாலும் தனியே இருப்பது போன்ற மனநிலை உருவாக துவங்கியது.

தனியே இருக்கும் மனநிலை வந்தவுடன் மலைப்பூனை தன் விழுது வாலை நெளிக்க ஆரம்பிக்கும். ஜப்பானிய படங்கள் வீட்டு சுவரில் ஓட ஆரம்பிக்கும்.
படத்தில் இருந்து சில்லென்ற காற்று வீசி அறையை உறைந்து போக வைக்கும்.

குடும்பத்தினர் அப்போது தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்து வந்தாலும் அவர்கள் ஜப்பானிய மொழியில் பேசிக்கொண்டே செய்வார்கள். என் அம்மா, மாமா ஜப்பான் பாஷை பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை. சுவரில் தெரியும் படம் முடியும் வரை இதுதான் நிலை.

அம்மா என்னோடு பேசுவதாய் நினைத்துக்கொண்டு அகிரா குரேசேவா உடன் பேசும் காட்சியை நான் பிளந்த வாயுடன் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

இது போல் பல நடந்தது. ஆயிற்று ஒரு ஆறு மாதங்களுக்கும் மேல்.

ஒரு நாள் காலையில் என் வீட்டுக்கு போலீஸ் வந்து கொலை செய்த குற்றத்துக்கு என்னை கைது செய்தனர். அவர்களிடம் ஆதாரம் இருந்தது. நான் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

அதை நான் செய்திருப்பேனா இல்லையா என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கண சுத்தத்துடன் ஜப்பானிய மொழி பேச ஆரம்பித்து விட்டேன். தமிழ் மறந்து கொண்டே வர ஆரம்பித்தது.

ஆக இப்போது ஜெயிலில் நான் இருப்பதே பாதுகாப்பு என்று முடிவு செய்தேன்.

அரைகுறையாக தமிழ் மொழியை வைத்து இதை உங்களுக்கு சொல்லி விட்டேன். இனி நான் ஜப்பானிய மொழியில் மட்டுமே எழுத முடியும் போல் இருக்கிறது.

எதுவும் நடக்கலாம்.

பேனாவை மூடிவிட்டு கண்களை மூடிக்கொண்டேன். மிகவும் வருத்தமான எனது நிலைக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. அப்போது வெளியில் பரபரப்பாக பேசிக்கொண்டே யாரோ ஓட்டமும் நடையுமாக செல்ல கவனிக்க ஆரம்பித்தேன்.

"பாண்டியா...எத்தந்தண்டி அது...வாலு மட்டும் மூணு அடி இருக்கும். கண்ணை பாத்தியா...ஒண்ணு செவப்பு ஒண்ணு பச்சை".

எழுதியவர் : ஸ்பரிசன் (27-May-19, 4:24 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 90

மேலே